34 கிமீ மைலேஜ் குடுக்கற காரை இந்த ரேட்ல விக்க இவங்களால மட்டும்தான் முடியும்! ஷோரூம்ல வரிசை கட்டி நிக்கறாங்க!
இந்திய சந்தையில் செடான் கார்களின் (Sedan Cars) விற்பனை நீண்ட காலமாகவே 'டல்' அடித்து கொண்டுள்ளது. மாறாக எஸ்யூவி கார்களின் (SUV Cars) தூள் கிளப்பி வருகிறது. இந்த எஸ்யூவி புயலில் சிக்கி சின்னாபின்னமாகாமல் ஒரே ஒரு செடான் கார் மட்டும் தப்பி பிழைத்து கொண்டுள்ளது. அது மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகும். மாருதி சுஸுகி டிசையர் கார் ஒவ்வொரு மாதமும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இது நடப்பு 2025ம் ஆண்டின் மார்ச் மாதமும் தொடர்ந்துள்ளது.
சொல்லப்போனால் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம், மாருதி சுஸுகி டிசையர் காருக்கு சரியாக அமையவில்லை. விற்பனையில் இந்த கார் சிறிய சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும் வழக்கம் போல பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை மாருதி சுஸுகி டிசையர் பதிவு செய்து அசத்தியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் நமக்கு தெரிய வருவது என்னவென்றால், மாருதி சுஸுகி நிறுவனம் 15,460 டிசையர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 15,894 ஆக இருந்தது. இது 3 சதவீத வீழ்ச்சி ஆகும்.
எனினும் இது நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது மிகவும் சிறிய அளவிலான வீழ்ச்சிதான். இது போன்ற சிறிய அளவிலான சரிவுகள் வழக்கமான ஒரு விஷயம்தான் என்பதால், மாருதி சுஸுகி டிசையர், தொடர்ந்து இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பமான கார்களில் ஒன்றாகவே இருக்கிறது.

நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் (Top 10 Cars) பட்டியலில், மாருதி சுஸுகி டிசையர் 8வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருப்பது மாருதி சுஸுகி டிசையர் காரின் 4வது தலைமுறை மாடல் ஆகும்.
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் மாருதி சுஸுகி நிறுவனம் 4வது தலைமுறை டிசையர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக இருக்கின்றன. அத்துடன் இது ஏராளமான வசதிகள் (Features) நிரம்பிய காராகவும் இருக்கிறது.
இதில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், சுஸுகி கனெக்ட் மற்றும் ஸ்மார்ட் ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் மாருதி சுஸுகி டிசையர் செடான் ரக காரின் மிகவும் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6.84 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 10.19 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில், அதிக மைலேஜ் வழங்க கூடிய அதே நேரத்தில் ஏராளமான வசதிகள் நிரம்பிய ஒரு செடான் ரக காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி டிசையர் நல்ல ஆப்ஷன் என்பது எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








