முதல் மாருதி எலக்ட்ரிக் கார் இன்னும் மார்க்கெட்டுக்கே வரல, அதற்குள் பிரச்சனையா! சீனா மனசு வெச்சா தான் முடியும்
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து முதல் எலக்ட்ரிக் கார் (Electric Car) ஆக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இ-விட்டாரா (e-Vitara) கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் வெளியீடு செய்யப்பட்டது. ஆனால், இன்னமும் மாருதி சுஸுகியின் இந்த முதல் எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. காருக்கான புக்கிங் கூட இன்னும் துவங்கப்படவில்லை. இதனால், இ-விட்டாரா காரை உண்மையில் மாருதி சுஸுகி உருவாக்கி வருகிறதா என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துவரும் நிலையில், இ-விட்டாரா கார் குறித்த புதியதொரு தகவல் வெளியாகி உள்ளது.
மாருதி சுஸுகியில் இருந்து மட்டுமில்லாமல், ஒட்டுமொத்தமாகவே இந்திய கார்கள் சந்தையில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருக்கும் புதிய கார், இ-விட்டாரா என்கிற எலக்ட்ரிக் கார் ஆகும். ஏனெனில், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியில் இருந்து தற்போதுவரையில் ஒரு எலக்ட்ரிக் கார் கூட அறிமுகம் செய்யப்படாதது ஒரு குறையாகவே உள்ளது.

ஒருவழியாக, கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்தியாவின் மிக பெரும் ஆட்டோமொபைல் கண்காட்சியான ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி தனது முதல் எலக்ட்ரிக் காரை காட்சிக்கு நிறுத்தி மார்க்கெட்டை அதிர வைத்தாலும், கார் வெளியீடு செய்யப்பட்டு 6 மாதங்களாகிவிட்ட போதிலும் இன்னமும் இ-விட்டாரா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை.
இது ஒருபக்கம் இருக்க, மறுப்பக்கம் இந்தியா உள்பட உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி சவாலானதாக மாறி வருகிறது. இதற்கு காரணம், சீன அரசாங்கமும், புதியதாக அது விதித்துள்ள கட்டுப்பாடுகளும் ஆகும். உலகம் முழுக்க பரவலாக உபயோகப்படுத்தப்படும் ஆட்டோமொபைல் வாகனங்கள், மொபைல் போன்கள் மற்றும் பெரிய ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்க பூமியில் இருந்து அரிதாக கிடைக்கும் நியோடைமியம், டைஸ்புரோசியம் மற்றும் டெர்பியம் உள்ளிட்ட உலோகங்கள் தேவைப்படுகின்றன.

குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்திக்கு இந்த அரிதான உலோகங்கள் மிகவும் அத்தியாவசியம் ஆகின்றன. ஏனெனில், இந்த உலோகங்களை கொண்டு உருவாக்கப்படும் அதி வலிமைமிக்க நிரந்தர காந்தகங்கள் தான் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்திக்கு மூலாதாரங்களாக விளங்குகின்றன. இந்த உலோகங்கள் உலகின் சில பகுதிகளில் கிடைத்தாலும், சீனாவில் இருந்துதான் அதிகமாக கிடைக்கிறது.
இதனை உணர்ந்த சீன அரசு, இதை வைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு குடைச்சல் கொடுக்க முடிவு செய்து, இந்த உலோகங்களை சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பல கட்டுப்பாடுகளை சமீபத்தில் கொண்டுவந்தது. இதனால்தான், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் பெருமளவு சீனாவை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக கடந்த சில வாரங்களாக பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் எச்சரித்து வருகின்றன.

அதன் வெளிப்பாடாக, மாருதி சுஸுகி நிறுவனமும் இ-விட்டாரா எலக்ட்ரிக் கார்களின் உற்பத்தியை பெரிய அளவிற்கு குறைத்துக் கொள்ள தயாராகி வருகிறது. அப்படியென்றால், இ-விட்டாரா கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனவா என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆம்... இ-விட்டாரா கார்களை கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
ஏப்ரலில் இருந்து செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலக்கட்டத்தில் ஏறக்குறைய 26 ஆயிரத்து 500 இ-விட்டாரா கார்களை உற்பத்தி செய்ய முன்னதாக மாருதி சுஸுகி திட்டமிட்டது. ஆனால், சீனாவின் வெளிநாட்டு ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் இந்த 6 மாதங்களில் வெறும் 8 ஆயிரத்து 200 இ-விட்டாரா கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய மாருதி சுஸுகி முடிவெடுத்துள்ளது. அதாவது, முன்னதாக திட்டமிடப்பட்ட உற்பத்தி எண்ணிக்கையில் சுமார் 66% குறைத்துக் கொள்ளப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எங்களுக்கு தெரிந்தவரையில், மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே 8,200 இ-விட்டாரா கார்களை உற்பத்தி செய்து இருக்கலாம். இனி கொஞ்ச காலத்திற்கு எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வது சற்று சிரமமானதாக இருக்கும் என்பதால், இ-விட்டாரா உற்பத்தியை இதன்பின் மொத்தமாக மாருதி சுஸுகி நிறுத்திக் கொள்ளலாம். அல்லது, சீனாவின் நடவடிக்கையால் ஏப்ரல் மாதத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படாமல் இருந்துவந்த இ-விட்டாரா கார்களின் உற்பத்தியை இதன்பின் துவங்கி, செப்டம்பர் மாதத்திற்குள் 8,200 இ-விட்டாரா கார்களை உற்பத்தி செய்ய மாருதி சுஸுகி முடிவெடுத்து இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









