மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா! அப்ப டாடா சோலி முடின்ச்!
இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனம் எது என கேட்டால், பச்சை குழந்தை கூட, மாருதி சுஸுகி (Maruti Suzuki) என சரியாக கூறி விடும். ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை (Electric Car) கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. எனினும் இந்த குறை இன்னும் ஒரு சில வாரங்களில் நிவர்த்தி செய்யப்படவுள்ளது.
ஆம், மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இ விட்டாரா (Maruti Suzuki e Vitara), வரும் செப்டம்பர் 3ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள், வரும் ஆகஸ்ட் 26ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன.

இது குறித்து கார்வாலே தளம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஹன்சல்பூர் தொழிற்சாலையில், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் நடைபெறவுள்ளன. மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காருக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மற்றும் 7 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்படவுள்ளன. அத்துடன் வயர்லெஸ் கனெக்ட்டிவிட்டி உடன் 25.65 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வசதியையும், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கும்.

இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV), டாடா கர்வ் இவி (Tata Curvv EV) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் வருகை, விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படவுள்ளன. அவை 48.8 kWh மற்றும் 61.1 kWh ஆகியவை ஆகும். இதில், 61.1 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 500 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக பயணம் செய்ய முடியும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) கொண்டதாக இருக்கும். டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா என மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants), மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படவுள்ளது. அதே நேரத்தில் மொத்தம் 10 கலர் ஆப்ஷன்களில் (Colour Options), மாருதி சுஸுகி இ விட்டாரா கிடைக்கவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில், இ விட்டாரா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே விலை மட்டும் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டால், மாருதி சுஸுகி இ விட்டாரா மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அனேகமாக மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 16 லட்ச ரூபாய் அல்லது 17 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும். ஆனால் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் இந்த விலையில் களமிறக்கப்பட்டால், அது அதன் போட்டி மாடல்களுக்கு எல்லாம் விற்பனையில் கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
ஏனெனில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ரெட்டா இவி மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களின் ஆரம்ப விலை தலா 17.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதை காட்டிலும் குறைவான விலையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








