எமனுக்கே சவால்விடும் முதல் மாருதி எலெக்ட்ரிக் கார்! இத்தனை ஸ்டார் ரேட்டிங்கை சும்மா தூக்கி கொடுத்திடல!
மாருதி சுஸுகியின் இ-விட்டாரா (Maruti Suzuki e-Vitara) கார், பாரத் என்சிஏபி (Bharat NCAP) பாதுகாப்பு மதிப்பீட்டில் 5 நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது. சுஸுகியின் புதிய ஹார்டெக்ட்-இ (Heartect-e) தளத்தில் உருவான இந்தக் எலெக்ட்ரிக் எஸ்யூவி, லெவல்-2 ADAS (Advanced Driver Assistance Systems) மற்றும் ஏழு ஏர்பேக்குகளுடன் வருகிறது. இது மாருதி சுஸுகிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இ-விட்டாராவின் உடல் கட்டமைப்பு, 60%-க்கும் மேல் அதிக வலிமை கொண்ட இரும்பால் ஆனது. இதன் மூலமாக, பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32-க்கு 31.49 புள்ளிகளை இந்த கார் பெற்றுள்ளது. முன் ஆஃப்செட் மற்றும் நகரும் தடுப்பு மீது காரின் பக்கவாட்டை மோதவிட்டு நடத்தப்பட்ட சோதனைகளில் 16-க்கு முறையே 15.49 மற்றும் முழு 16 புள்ளிகள் பெற்று, அதன் உறுதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

மேம்பட்ட பேட்டரி பாதுகாப்பு அமைப்பானது, ஆற்றலை உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்ட பேட்டரி மவுண்டிங் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக மாருதி சுஸுகி கூறுகிறது. குழந்தைகள் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இ-விட்டாரா 49-க்கு 43 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதில், டைனமிக் ஸ்கோர் (24/24), குழந்தைகளுக்கான பிரத்யேக இருக்கை நிறுவல் ஸ்கோர் (12/12) மற்றும் வாகன மதிப்பீட்டு ஸ்கோர் (7/13) ஆகிய மூன்று முக்கிய அம்சங்களும் அடங்கும்.
மாருதி சுஸுகி இ-விட்டாரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 7 ஏர்பேக்குகள், பாதசாரிகள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் (SBR) போன்றவற்றை அனைத்து வேரியண்ட்களிலும் நிலையான அம்சங்களாக வழங்குகிறது. அதேநேரம், இ-விட்டாரா காரின் டாப் வேரியண்ட்கள் மேலும் சில பாதுகாப்பு அம்சங்களையும் பெறுகின்றன.

டாப்-எண்ட் இ-விட்டாரா வேரியண்ட்கள் ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், EBD உடனான ABS மற்றும் பிரேக் அசிஸ்ட், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள், மல்டி-கொலிஷன் பிரேக்கிங், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிடி புரோகிராம் மற்றும் ஆக்டிவ் கார்னிங் கண்ட்ரோல் ஆகியவற்றையும் உள்ளடக்கியவை ஆகும்.
மேலும், முன் சீட் பெல்ட் ப்ரீ-டென்ஷனர்கள், ISOFIX குழந்தைகள் இருக்கை கொக்கிகள், 360-டிகிரி சரவுண்ட் வியூ கேமரா, பார்க்கிங் சென்சார்கள், டயர்-பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் SOS செயல்பாட்டுடன் கூடிய அவசர கால அழைப்பு (e-Call) போன்ற மேம்பட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி இ-விட்டாரா, லெவல்-2 ADAS அம்சங்களுடனும் வருகிறது. தானியங்கி அவசர கால பிரேக்கிங், கார் முன்பக்கமாக மோத நேர்ந்தால் அதுகுறித்த எச்சரிக்கை (FCW), சாலையில் ஒரே பாதையை தொடர்வதற்கான உதவி (LKA), பாதை விலகினால் அதுகுறித்த எச்சரிக்கை (LDW), அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், அடாப்டிவ் ஹை-பீம் சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் ரிவர்ஸில் வரும்போது குறுக்கே ஏதேனும் வாகனம் வந்தால் அதுகுறித்த எச்சரிக்கை ஆகியவை இந்த அம்சத் தொகுப்பில் அடங்கும்.
இ-விட்டாராவின் பேட்டரிகள் -30 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் உகந்த முறையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் இ-விட்டாரா கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து பல வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. யூரோ NCAP சோதனையில் இ-விட்டாரா 4 நட்சத்திரங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இது பாரத் NCAP-ஐ விட கண்டிப்பானதாகக் கருதப்படுகிறது.

டிசம்பர் 2ஆம் தேதியான இன்று குருகிராமில் வெளியீடு செய்யப்பட்டுள்ள மாருதி சுஸுகி இ-விட்டாரா 49 kWh மற்றும் 61 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில், சிறிய 49 kWh பேட்டரி பேக் முன் சக்கரங்களை இயக்கும் ஒற்றை-மோட்டார் அமைப்பைக் கொண்டிருக்கும். அதேநேரம், பெரிய பேட்டரி பேக் இரட்டை-மோட்டார் கட்டமைப்புடன் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும். இதை சுஸுகி 'ஆல்-கிரிப்-இ' (AllGrip-e) என்று பெயரிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி டிசைர், விக்டோரிஸ் மற்றும் இன்விக்டோ கார்களைத் தொடர்ந்து பாரத் NCAP மதிப்பீட்டில் 5 நட்சத்திரங்களைப் பெறும் நான்காவது மாருதி சுஸுகி கார், இ-விட்டாரா ஆகும். நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காரான இ-விட்டாராவிற்கு 5 நட்சத்திர பாரத் NCAP மதிப்பீடு கிடைத்தது, மாருதி சுஸுகியில் உள்ள அனைவருக்கும் மிகுந்த பெருமைக்குரிய தருணமாக இருக்கும். உலகத் தரத்திலான பாரத் NCAP இன் கடுமையான வாகன சோதனை நெறிமுறைகள், கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தகவலறிந்து தங்களது முடிவுகளை எடுக்க உதவும்.


Click it and Unblock the Notifications









