பெட்ரோல், டீசல் கார் வைத்திருந்தால் இனி ஒருமாதிரி பார்ப்பார்கள் போல! திரும்பும் பக்கம் எல்லாம் பேட்டரி கார்கள்
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம். மாதத்திற்கு இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்கினாலும், இன்னும் எந்தவொரு எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐயும் மாருதி சுஸுகி விற்பனை செய்யவில்லை. இந்த இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனத்தில் இருந்து முதல் எலக்ட்ரிக் காராக இ-விட்டாரா (e-Vitara) சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo)-இல் வெளியீடு செய்யப்பட்டது. இதனாலேயே இ-விட்டாரா மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
விற்பனையில் மாருதி சுஸுகி இ-விட்டாரா காருக்கு போட்டியளிக்கும் விதமாக ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், டாடா கர்வ் இவி, மஹிந்திரா பிஇ 6 மற்றும் சீன எலக்ட்ரிக் காரான பிஒய்டி அட்டோ 3 உள்ளிட்டவை உள்ளன. இவற்றுடன் ஒப்பிடுகையில், நீளம், அகலம், உயரம் உள்ளிட்ட தோற்றத்திலும், பேட்டரி & எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்களிலும் மாருதி சுஸுகி இ-விட்டாரா எந்த அளவிற்கு உள்ளது என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பரிமாண அளவுகள்: புதிய மாருதி இ-விட்டாரா காரின் நீளம் 4.27 மீட்டர்கள், அகலம் 1.8மீ, உயரம் 1.64மீ ஆகும். முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆனது 2.7மீ ஆக உள்ளது. தரையில் இருந்து காரின் அடிப்பகுதி 185மிமீ உயரத்தில் உள்ளது. இந்த மாருதி எலக்ட்ரிக் காரை குறைந்தது 5.2மீ இடத்தில் திருப்ப முடியும்.
இந்த மாருதி எலக்ட்ரிக் காருக்கு விற்பனையில் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் கார் முக்கியமான போட்டியாக விளங்கும். இதன் நீளம் 4.34 மீட்டர்கள், அகலம் 1.79மீ, உயரம் 1.65மீ மற்றும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2.61மீ ஆகும். மற்றப்படி, தரையில் இருந்து இந்த காரின் அடிப்பகுதி உள்ள உயரம் மற்றும் இந்த காரை திருப்ப குறைந்தது எவ்வளவு இடம் வேண்டும் என்பது குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காருக்கு அடுத்து, மாருதி இ-விட்டாராவுக்கு சவாலான போட்டியாக விளங்கும் டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் நீளம் 4.31 மீட்டர்கள், அகலம் 1.81மீ, உயரம் 1.63மீ மற்றும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2.56மீ ஆகும். தரையில் இருந்து இந்த டாடா காரின் அடிப்பகுதி ஆனது இ-விட்டாராவை காட்டிலும் 5மிமீ உயரமாக உள்ளது. அதேநேரம், கர்வ் இவி எலக்ட்ரிக் காரை திருப்ப குறைந்தது 5.35மீ இடம் ஆவது தேவைப்படும்.
பேட்டரி: மாருதி இ-விட்டாரா காரில் 48.8kWh மற்றும் 61.1kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 500கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது மாருதி சுஸுகி நிறுவனம். இந்த புதிய மாருதி எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக கிடைக்கக்கூடிய இயக்க ஆற்றல் 141 பிஎச்பி மற்றும் 192 என்.எம் டார்க் திறன் ஆகும்.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரிலும் 42kWh மற்றும் 51.4kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் ரேஞ்ச் முறையே 390கிமீ மற்றும் 473கிமீ ஆகும். டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரிலும் 45kWh மற்றும் 55kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக கிடைக்கக்கூடிய ரேஞ்ச் முறையே 430கிமீ மற்றும் 502கிமீ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், புதிய மாருதி சுஸுகி இ-விட்டாரா காருக்கு போட்டியாக மஹிந்திரா பிஇ 6 மற்றும் பிஒய்டி அட்டோ 3 உள்ளிட்ட எலக்ட்ரிக் கார்களும் விற்பனையில் உள்ளன. இருப்பினும், இந்த தொகுப்பில் பார்த்துள்ள ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் மற்றும் டாடா கர்வ் இவி கார்கள் தான் இ-விட்டாரா காரின் முக்கியமான போட்டி கார்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








