ஆம்னியை தூக்கி சாப்பிடும் மாருதி கார்! மொத்த குடும்பத்தையும் ஒன்னா ஏத்தீட்டு போகலாம்! ஆனா விலை இவ்ளோதானா!
இந்திய சந்தையில் ஒரு காலத்தில் புகழ் பெற்று விளங்கிய கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni). அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த மாருதி சுஸுகி ஆம்னியை, ஸ்கூல் வேன் ஆகவும், ஆம்புலன்ஸ் ஆகவும் நிறைய பேர் பயன்படுத்தி கொண்டிருந்தனர். திரைப்படங்களில் கடத்தல் காட்சிகள் என்றாலும் கூட, இயக்குனர்களின் முதல் சாய்ஸ்-ஆக இருந்தது மாருதி சுஸுகி ஆம்னிதான்! ஆனால் மாருதி சுஸுகி ஆம்னி காரின் உற்பத்தி கடந்த 2019ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
தற்போது மாருதி சுஸுகி ஆம்னியின் இடத்தை, மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) நிரப்பி கொண்டுள்ளது. மாருதி சுஸுகி ஆம்னிக்கு மாற்று என்பதால், ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸுகி ஈக்கோவின் விற்பனையும் சிறப்பாகவே இருந்து வருகிறது. நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11,438 ஈக்கோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 10,409 ஆக மட்டுமே இருந்தது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் உடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் மாதம் 1,029 மாருதி சுஸுகி ஈக்கோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மாருதி சுஸுகி ஈக்கோ காரின் பாதுகாப்பு வசதிகள் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்டன. இதன் ஒரு பகுதியாக மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

மாருதி சுஸுகி ஆம்னியின் வாரிசாக கருதப்படும் மாருதி சுஸுகி ஈக்கோவின் விற்பனை உயர்ந்திருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா ஷோரூம்கள் (Arena Showrooms) மூலமாக விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு தயாரிப்பு ஆகும்.
தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.70 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலை நிர்ணயம், மாருதி சுஸுகி ஈக்கோவின் காரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மாருதி சுஸுகி ஈக்கோ தற்போது 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஆனால் முன்பு இந்த கார் 7 சீட்டர் ஆப்ஷனிலும் கிடைத்து கொண்டிருந்தது. அதன் விற்பனை சமீபத்தில் நிறுத்தப்பட்டு விட்டது. ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில்தான், 7 சீட்டர் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக கொண்டு வரப்பட்டதுதான் 6 சீட்டர் மாடல் ஆகும்.
இந்த 6 சீட்டர் மாடலின் மத்திய வரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே பயணிகள் சொகுசாக பயணம் செய்ய முடியும். மாருதி சுஸுகி ஈக்கோ காரில் 6 ஏர்பேக்குகள் மட்டுமல்லாது, அனைத்து இருக்கைகளுக்கும் 3 பாயிண்ட் சீல் பெல்ட்கள் என்ற மற்றொரு முக்கியமான பாதுகாப்பு வசதியும் வழங்கப்படுகிறது.
மாருதி சுஸுகி ஈக்கோ கார் பெட்ரோல்/மேனுவல் மற்றும் சிஎன்ஜி/மேனுவல் காம்பினேஷன்களில் கிடைக்கிறது. இதில், பெட்ரோல்/மேனுவல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 19.71 கிலோ மீட்டர்கள் ஆகும். மறுபக்கம் சிஎன்ஜி/மேனுவல் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 26.78 கிலோ மீட்டராக உள்ளது. இவை அனைத்தும் அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ் மற்றும் அதிகம் பேர் சௌகரியமாக பயணம் செய்ய கூடிய வகையிலான விசாலமான கேபின் மற்றும் இருக்கை வடிவமைப்பு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்துதான், மாருதி சுஸுகி ஈக்கோவை வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக மாற்றியுள்ளன.


Click it and Unblock the Notifications








