27 கிமீ மைலேஜ் குடுக்கற இந்த கார்ல 7 பேர் ஜம்முனு போகலாம்! விலை அதிகம்லா இல்ல! லோன் போடாமயே வாங்கலாம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni) காருக்கு மிகச்சிறந்த மாற்றாக, மாருதி சுஸுகி ஈக்கோ கருதப்படுகிறது. ஏனெனில் மாருதி சுஸுகி ஆம்னியை போலவே, மாருதி சுஸுகி ஈக்கோ காரிலும் அதிக வாடிக்கையாளர்கள் பயணம் செய்ய முடியும். மாருதி சுஸுகி ஈக்கோ காரை 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் உங்களால் வாங்க முடியும்.
அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுடன், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் மாருதி சுஸுகி ஈக்கோ திகழ்கிறது. மாருதி சுஸுகி ஈக்கோ காரின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என 2 வகையான வேரியண்ட்களிலும், 1.2 லிட்டர் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் பவர் அவுட்புட் வேறு. அதாவது பெட்ரோல் மூலமாக இயங்கும்போது அதிகபட்சமாக 81 பிஎஸ் பவர் மற்றும் 105 என்எம் டார்க் திறனையும், சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது 72 பிஎஸ் பவர் மற்றும் 95 என்எம் டார்க் திறனையும் இந்த இன்ஜின் உருவாக்கும். இந்த 2 வேரியண்ட்களின் பவர் அவுட்புட் வெவ்வேறு என்றாலும், மற்றொரு ஒற்றுமை உள்ளது.
அது கியர் பாக்ஸ். இந்த 2 வேரியண்ட்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் இல்லை. இருப்பினும் இது நல்ல மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும். இதன் பெட்ரோல் வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 19.71 கிமீ ஆகவும், சிஎன்ஜி வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 26.78 கிமீ ஆகவும் உள்ளது.

இவை மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவிக்கும் மைலேஜ் ஆகும். எனவே நடைமுறை பயன்பாட்டில் சற்று குறைவான மைலேஜ் கிடைத்தாலும் கூட, அது சிறப்பான ஒன்றாகவே இருக்கும். அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய அதே நேரத்தில் சிறப்பான மைலேஜை வழங்குவதால்தான், மாருதி சுஸுகி ஈக்கோ காரை பலரும் விரும்பி வாங்குகின்றனர்.
இந்த காரின் வெற்றிக்கு மற்றொரு முக்கியமான காரணம் என்னவென்றால், சரியான விலை நிர்ணயம் ஆகும். தற்போதைய நிலையில் வெறும் 5.32 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே இந்த காரை வாங்கி விட முடியும். டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 6.58 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்த விலையில் கிடைப்பதால், கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் மாருதி சுஸுகி ஈக்கோ காரை 11,678 பேர் வாங்கியுள்ளனர். ஆனால் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10,034 பேர் மட்டுமே இந்த காரை வாங்கியிருந்தனர். அதாவது இம்முறை 1,644 பேர் அதிகமாக வாங்கியுள்ளனர்.
இதன் மூலம் மாருதி சுஸுகி ஈக்கோ கார் விற்பனையில் 16 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான மாருதி சுஸுகி ஈக்கோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரியவந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஈக்கோ காருக்கு நேரடி போட்டி என எந்தவொரு காரும் இல்லை. மாருதி சுஸுகி ஈக்கோ கார் தனி சாம்ராஜ்யம் நடத்தி கொண்டிருப்பதற்கு இதுவும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








