பாதுகாப்பில் டாடாவிற்கே சிம்ம சொப்பனமாக மாறும் மாருதி! முதல் எலெக்ட்ரிக் காரே பெரிய சம்பவத்த பண்ணியிருக்கு!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் கார்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்து கொண்டிருந்த ஒரே ஒரு குற்றச்சாட்டு, அவை மோதல் சோதனைகளில் (Crash Test) நல்ல பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற தவறுகின்றன என்பதுதான். ஆனால் அந்த காலம் தற்போது மலையேறி விட்டது.
உலகம் முழுக்க பல்வேறு அமைப்புகளின் மோதல் சோதனைகளில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள், தற்போது சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று வருகின்றன. குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு நடத்திய மோதல் சோதனையில், மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) கார் முழுமையாக 5 ஸ்டார் (5 Star) பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று, விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்தது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) கார் கூட, பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனையில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றது. இந்த வரிசையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இ விட்டாராவும் (Maruti Suzuki eVitara), தன் பங்கிற்கு தற்போது விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளது.
மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார், இந்திய சந்தையில் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும் கூடிய விரைவில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இந்தியாவில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார்கள், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கும் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த சூழலில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார், யூரோ என்சிஏபி (Euro NCAP) அமைப்பின் மோதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில், 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று, மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் அசத்தியுள்ளது. நூலிழையில் மட்டுமே மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற தவறியுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் சற்றே தடுமாறியதுதான் இதற்கு காரணம்.
அதாவது பெரியவர்களுக்கான பாதுகாப்பில், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் 77 சதவீதம் ஸ்கோர் செய்தது. ஒருவேளை 80 சதவீதம் ஸ்கோர் செய்திருந்தால், ஒட்டுமொத்த பாதுகாப்பு ரேட்டிங் 5 ஸ்டார்களாக மாறியிருக்கலாம். இருப்பினும் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் என்பதே சிறப்பான ஒன்றாகதான் கருதப்படுகிறது.
மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் குஜராத்தில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. சமீபத்தில் அரிய வகை கனிமங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட பிரச்னை உங்களுக்கு நினைவிருக்கலாம். இதன் காரணமாக மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனால் தற்போது அந்த பிரச்னை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதால், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே கூடிய விரைவில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 500 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனேகமாக இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 17 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி இ விட்டாரா வடிவில் மிகப்பெரிய சவால் காத்து கொண்டுள்ளது என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








