26 வருடங்களாக விற்பனையில் அசைக்க முடியாத மாருதி கார்! ஆலையில் உற்பத்தி நிக்காம ஓடுது!
இந்தியாவின் ஹேட்ச்பேக் (Hatchback) கார்கள் பிரிவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) நீண்ட காலமாகவே ஒரு முக்கிய பயணிகள் கார் வரிசையாகத் திகழ்கிறது. அதன் வெளிப்பாடாக, இந்தியாவில் இதன் ஒட்டுமொத்த உற்பத்தி 35 லட்சம் யூனிட்களைக் கடந்து ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
தொடர்ச்சியான பல தலைமுறை அப்கிரேட்கள், பரந்த மார்க்கெட் நெட்வொர்க் மற்றும் நிலையான உற்பத்தி மூலம் காலத்தின் சவால்களை சமாளித்து வேகன்ஆர் இப்போதும் நிற்கிறது. இது ஆல்டோ (Alto) மற்றும் ஸ்விஃப்ட் (Swift) போன்ற மற்ற மாருதி சுஸுகி கார் மாடல்களுக்கு இணையாக, உள்ளூரில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படும் பயணிகள் கார்களில் ஒன்றாக உள்ளது.

வேகன்ஆர் காரின் உலகளாவிய பயணம் ஜப்பானில் 1993 செப்டம்பரில் தொடங்கியது. இந்தியாவில் இதன் அறிமுகம் 1999 டிசம்பரில் நிகழ்ந்தது. இது உள்நாட்டு வேகன்ஆர் கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையின் தொடக்கமாக அமைந்தது. காலப்போக்கில், இதன் சந்தைப் பரவல் ஐரோப்பா மற்றும் பிற பிராந்தியங்களுக்கும் விரிவடைந்தது. 75 நாடுகளுக்கு மேல் கிடைக்கும் வேகன்ஆர், 2025 ஆகஸ்ட் நிலவரப்படி உலகம் முழுவதும் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.
இந்த உலகளாவிய விற்பனையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா மட்டுமே கொண்டுள்ளது. இந்தியாவில் இதுவரையில் விற்பனையான பயணிகள் கார்கள் தரவுகளின் அடிப்படையில், வேகன்ஆர் நான்கு நிதியாண்டுகளில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அதாவது, அந்த 4 வருடங்களிலும் ஆக்டோ, ஸ்விஃப்ட் உள்ளிட்ட மற்ற அனைத்து கார்களை விடவும் வேகன்ஆர் அதிகமாக விற்பனையாகி உள்ளது. இந்தியாவில் வேகன்ஆர் அதன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு மேம்பாடுகளைச் சந்தித்துள்ளது.
இரண்டாவது தலைமுறை வேகன்ஆர் 2010இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 2019இல் மூன்றாவது தலைமுறை வேகன்ஆர் வெளிவந்தது. மேலும், 2022ஆம் ஆண்டிலும் இந்த மாருதி காரில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த அனைத்து அப்கிரேட்களிலும் வேகன்ஆர் காரின் பெட்டகம் வடிவிலான வடிவமைப்பு அப்படியே தொடரப்பட்டு இருந்தாலும், மாசு உமிழ்வு உள்ளிட்ட விதிமுறை இணக்கங்கள் மற்றும் தொழிற்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்ப இது மூன்று தலைமுறைகளாக வளர்ந்துள்ளது.
வேகன்ஆரில் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் காலப்போக்கில் மெதுவாக விரிவடைந்தன. 2004இல் டியோ எல்பிஜி (Duo LPG) என்ஜின் ஆப்ஷன் இந்த காரில் சேர்க்கப்பட்டது. சிஎன்ஜி (CNG) வசதி 2010இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2015இல் ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்ட் (AGS) என்கிற பிரத்யேகமான கியர்பாக்ஸ் ஆப்ஷன் இணைக்கப்பட்டது.
இது குறைந்த விலையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காரை வாங்க விரும்பியவர்களின் தேவையை பூர்த்தி செய்தது. வேகன்ஆரின் பாதுகாப்பு உபகரணங்களும் காலத்திற்கு ஏற்ப பின்பற்றப்பட்டன. முக்கியமான, இரட்டை ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் (ABS) 2015இல் வேகன்ஆரில் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்ட் அம்சமாக வேகன்ஆரில் வழங்கப்படுகின்றன.

அதேபோல், இபிடி (EBD) உடன் கூடிய ஏபிஎஸ் இப்போது விற்பனையில் இருக்கும் வேகன்ஆரின் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) ஆனது வேகன்ஆரின் தற்போதுள்ள பாதுகாப்பு அமைப்புகளில் முக்கிய அம்சமாக உள்ளது. தற்போதைய வேகன்ஆர் கார் ஆனது ஐந்தாம் தலைமுறை ஹார்ட்டெக்ட் (HEARTECT) தளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ஆகும்.
இந்த தளம் ஆனது காரின் எடையையும், கட்டமைப்பையும் எதிர்பார்த்தப்படி தீர்மானிக்க உதவுவது மட்டுமன்றி, உற்பத்தியைத் தரப்படுத்துவதற்கும் உதவுகிறது. இது சுஸுகி கார்களை ஒரே வரிசையில் ஒருங்கிணைக்க வழிவகை செய்கிறது. வேகன்ஆரின் தற்போதைய இன்ஃபோடெயின்மென்ட் வசதிகளில் ஸ்மார்ட்ப்ளே ஸ்டுடியோ (SmartPlay Studio) டச்ஸ்கிரீன் அடங்கும். இதன் திரை அளவு 17.78 செ.மீ (7 இன்ச்) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் கார்கள் உற்பத்தி ஹரியானாவில் அமைந்துள்ள குர்கான் மற்றும் மனேசர் ஆலைகளில் நடைபெறுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வேகன்ஆர் கார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், வெளிநாடுகளுக்காக ஜப்பான், ஹங்கேரி மற்றும் இந்தோனேசியாவில் உள்ள சுஸுகி ஆலைகளிலும் வேகன்ஆர் வெவ்வேறான பெயர்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது வேகன்ஆர் 35 லட்சம் உற்பத்தியை எட்டியிருப்பது இந்தியாவில் மட்டும் ஆகும்.


Click it and Unblock the Notifications








