மாருதியின் இந்த காரில் ஏறி, இறங்குவது ஏற்கனவே ஈசியா இருந்துச்சு! வயசானவங்க இருக்கும் வீட்டு குடும்பத்தார்க்கு!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் பிரபலமான வேகன் ஆர் (WagonR) ஹேட்ச்பேக் காருக்கான, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி இறங்குவதற்கு உதவும் 'சுழலும் முன் இருக்கை' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம், ஆரம்ப கட்டமாக 11 நகரங்களில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மாருதி சுஸுகியின் அரீனா (Arena) ஷோரூம்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பொறுத்து நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. மாருதி சுஸுகி வேகன் ஆர் காருக்கான இந்த சுழலும் இருக்கையின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2019ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய காலங்களில் உருவாக்கப்பட்ட வேகன் ஆர் கார்களில் இந்த சுழலும் இருக்கையை பொருத்திக்கொள்ள முடியும்.

இந்த இருக்கையை பொருத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரமே தேவைப்படும். மேலும், காரின் அமைப்பிலோ அல்லது ஏற்கனவே உள்ள இருக்கையிலோ எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை. வேகன் ஆர் காரின் 'டால் பாய்' (Tall Boy) வடிவமைப்பு ஏற்கனவே எளிதாக ஏறி இறங்க உதவியாக இருக்கும் நிலையில், சுழலும் இருக்கை இந்த வசதியை மேலும் அதிகரிக்கிறது.
இந்த சுழலும் இருக்கை, இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கம் (ARAI) நடத்திய பாதுகாப்புச் சோதனைகளில் தேர்ச்சி பெற்று, தேவையான பாதுகாப்புத் தரங்களுடன் இணங்குவதாக மாருதி சுஸுகி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், உற்பத்தி குறைபாடுகளை தவிர்ப்பதற்காக இந்த பிரத்யேக சுழலும் இருக்கைக்கு 3 ஆண்டுகள் உத்தரவாதமும் கிடைக்கும்.

இந்த இருக்கைகளை உருவாக்குவதற்காக, NSRCEL-IIM பெங்களூருவின் ஸ்டார்ட்அப் இன்குபேஷன் திட்டத்தின் கீழ் பெங்களூரைச் சேர்ந்த ட்ரூ அசிஸ்ட் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் (TRUEAssist Technology Private Limited) நிறுவனத்துடன் மாருதி சுஸுகி கூட்டு சேர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் மாருதி சுஸுகி அரீனா டீலர்ஷிப்களில் சுழலும் இருக்கையை, காரை வாங்கிய பின்பும் ஆர்டர் செய்து வாங்கி பொருத்திக் கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, இந்த முன்முயற்சியின் மூலம் பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு வேகன்ஆரில் எளிதாக பயணிக்க வழிவகுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜப்பானின் சுஸுகி குழுமத்தின் சர்வதேச தாரக மந்திரமான 'By Your Side'-ஆல் ஈர்க்கப்பட்டு, ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கை அடையும் வகையில் இந்த பிரத்யேக இருக்கை உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் வேகன் ஆர் ஹேட்ச்பேக் காரின் மூன்று தலைமுறைகளையும் சேர்த்து மொத்தம் 35 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் உற்பத்தி செய்து ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியதை சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம். இந்தியாவில் 1999 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட வேகன் ஆர் ஆனது ஆல்டோ மற்றும் ஸ்விஃப்ட் போன்ற பிரபலமான மாருதி சுஸுகி கார்களுக்கு இணையாக உற்பத்தி & விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவிற்கான வேகன்ஆர் கார்கள் தற்போது அரியானாவில் உள்ள குர்கான் மற்றும் மானேசர் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. ஜப்பானில், சுஸுகி வேகன் ஆர் முதன்முதலில் 1993 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு செமி-பொனெட் ஸ்டைல் மினி வேகன் ஆக உருவாக்கப்பட்டு, இது ஒரு வசதியான மற்றும் பயன்படுத்த எளிதான காராக உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்றுள்ளது.
ஜப்பான், இந்தியா, ஹங்கேரி மற்றும் இந்தோனேசியா உட்பட பல நாடுகளில் வேகன்ஆர் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இடங்களில் உற்பத்தி செய்யப்பட்டு மாருதி வேகன் ஆர் கார்கள் தற்சமயம் ஜப்பான், இந்தியா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட உலகின் 75க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2025 ஆகஸ்ட்டில், உலகளவில் சுஸுகி வேகன் ஆர் 1 கோடி யூனிட்கள் என்கிற இமாலய விற்பனையை கடந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








