வெறும் நாலே கால் லட்சத்துக்கு 33 கிமீ மைலேஜ் குடுக்கற காரா! ஷோரூம்ல கூவி கூவி வித்துட்டு இருக்காங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் விலை குறைவான கார்களை தேடி தேடி வாங்கி கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் அது தற்போது மலையேறி விட்டது. உண்மையில் 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட கார்களின் விற்பனை தற்போது குறைந்து கொண்டே வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியே (Maruti Suzuki) கடந்த காலங்களில் கவலை தெரிவித்துள்ளது. விலை குறைவான கார்களை வாங்குவதை மக்கள் தவிர்ப்பதால், பாதிக்கப்பட்ட கார்களில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோவும் (Maruti Suzuki S-Presso) ஒன்று.
இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஆனால் இதன் டிசைன் எஸ்யூவி (SUV) கார்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பார்ப்பதற்கு மினி எஸ்யூவி கார் போல தோற்றமளிக்கும். ஆனால் என்ன பயன்? இந்த கார் மாருதி சுஸுகி நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டில் பெரிய எண்களை கொண்டு வந்து சேர்க்கவில்லை.

விலை குறைவான கார்களை வாங்குவதை மக்கள் தவிர்க்க தொடங்கியது என்ற ஒற்றை காரணத்தை மட்டும் இதன் தோல்விக்கு காரணமாக கூறி விட முடியாது. க்ராஷ் டெஸ்ட்டில் சொதப்பியது என இதற்கு பின்னால் இன்னும் ஒரு சில காரணங்களும் உள்ளன. இந்த கார் கடந்த 2019ம் ஆண்டுதான் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் விற்பனையில் சோபிக்கவில்லை. எனவே இதன் விற்பனை நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ந்து எஸ்-பிரெஸ்ஸோ காரை இந்தியாவில் விற்பனை செய்து கொண்டுதான் உள்ளது.

இருப்பினும் இதன் விற்பனை எண்ணிக்கை உயர்வதாக தெரியவில்லை. ஆம், நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதமும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை 'டல்' அடித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 2,895 எஸ்-பிரெஸ்ஸோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 3,454 ஆக இருந்தது. இது 16 சதவீத வீழ்ச்சி ஆகும். இந்த வருட ஜனவரியுடன் ஒப்பிடும்போது, கடந்த வருட ஜனவரி விற்பனை எவ்வளவோ மேல் என்பது போல்தான் சூழல் உள்ளது.
மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரை வெறும் 4.26 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே உங்களால் வாங்கி விட முடியும். இது ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை ஆகும். டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 6.11 லட்ச ரூபாய் மட்டும்தான். இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இது மிகவும் விலை குறைவான கார் என்பதுடன், நல்ல மைலேஜ் வழங்க கூடிய ஒன்றாகவும் உள்ளது. இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. இருந்தாலும் எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை 'டல்' அடித்து கொண்டிருப்பது, மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு நிச்சயம் கவலையளிக்க கூடிய ஒன்றாகவே இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எஸ்-பிரெஸ்ஸோ கார் தற்போது ஐசியூ-வில் உயிருக்கு போராடி கொண்டுள்ளது. புதிய டிசைன், புதிய அதிநவீன மற்றும் பாதுகாப்பு வசதிகள் போன்ற மருந்துகளை எல்லாம் வழங்கினால் மட்டுமே, மாருதி சுஸுகி நிறுவனத்தால் எஸ்-பிரெஸ்ஸோ காரை உயிர்ப்புடன் வைத்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








