33 கிமீ மைலேஜ்! விலை வெறும் நாலே கால் லட்சம்தான்! ஆனாலும் இந்த காரை ஒருத்தரும் சீண்ட மாட்றாங்க! ஏன் தெரியுமா?
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ (Maruti Suzuki S-Presso). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகும்.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிதில், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காருக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்தது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து, வெறும் 2 வாரங்களுக்கு உள்ளாகவே, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காருக்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் (Bookings) குவிந்து விட்டன.

ஆனால் நாளடைவில், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காருக்கு வரவேற்பு குறைய தொடங்கியது. இதன் காரணமாக தற்போதெல்லாம் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் ஒவ்வொரு மாதமும் மிகவும் குறைவான விற்பனை எண்ணிக்கையை மட்டுமே பதிவு செய்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதமும் விதிவிலக்கு அல்ல.
மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), வி3 கார்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில், மாருதி சுஸுகி நிறுவனம் வெறும் 912 எஸ்-பிரெஸ்ஸோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் காரின் விற்பனை எண்ணிக்கை, இந்த அளவிற்கு சரிவை சந்தித்திருப்பது, அந்நிறுவனத்திற்கு சற்று கவலை அளிக்க கூடிய விஷயமாகவே இருக்கும்.
இத்தனைக்கும் இது 33.38 சதவீத வீழ்ச்சி ஆகும். ஏனெனில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 1,369 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த ஜூலையில் இந்த எண்ணிக்கை மேலும் சரிந்து வெறும் 912 ஆக குறைந்துள்ளது. அதாவது ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூலையில் 457 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக இந்திய சந்தையில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக எஸ்-பிரெஸ்ஸோ மாறியுள்ளது. இத்தனைக்கும் இது நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகும். இதன் ஆரம்ப விலை வெறும் 4.27 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இது விலை குறைவானது என்பதுடன் மட்டுமல்லாது, அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாகவும் திகழ்கிறது. இதன் சிஎன்ஜி வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர்கள் என்று மாருதி சுஸுகி தெரிவிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் தற்போது மிகவும் விலை குறைவான ஆரம்ப நிலை கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் விருப்பம் காட்டுவதில்லை. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் வீழ்ச்சிக்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை நீங்கள் வாங்க விரும்பினால், மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ நல்ல ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.
மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஆடியோ மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ என ஏராளமான வசதிகள் (Features), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரில் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








