இன்னும் எத்தன வருஷம் ஆனாலும் இந்த கார்தான் வேணும்னு இந்திய மக்கள் ஒத்த கால்ல நிப்பாங்கலாட்ட இருக்கு!
இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் கார்களை வாங்குபவர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக இருப்பது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் கடந்த 2005ம் ஆண்டுதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த கார் விற்பனைக்கு வந்து 2 தசாப்தங்கள் (20 வருடங்கள்) கடந்து விட்டன. ஆனால் தற்போதும் கூட ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரை சீரான இடைவெளிகளில் அப்டேட் செய்து கொண்டே வருவதுதான் இதற்கு காரணம்.
இந்த வரிசையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் கடைசியாக கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மிகப்பெரிய அளவிலான அப்டேட் செய்யப்பட்டது. அந்த மாதத்தில்தான் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த புதிய மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) இதை நமக்கு மிகவும் தெளிவாக எடுத்து காட்டுகிறது.
இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 17,746 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 15,728 ஆக மட்டுமே இருந்தது. இது 13 சதவீத வளர்ச்சி ஆகும்.

இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் என்ற பெருமையையும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சொந்தமாக்கியுள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை வாடிக்கையாளர்கள் விரும்புவதற்கு அதன் விலை மற்றும் மைலேஜ் ஆகிய 2 அம்சங்களும்தான் மிகவும் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 9.50 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. மறுபக்கம் இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 24.80 கிலோ மீட்டர் ஆகவும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 25.75 கிலோ மீட்டர் ஆகவும் உள்ளது.
இவை அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே நடைமுறை பயன்பாட்டில் மைலேஜ் சற்று குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் மைலேஜ் திருப்திகரமாக இருப்பதாக அதன் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விலை மற்றும் மைலேஜ் ஆகியவை சிறப்பாக இருப்பதுடன், அதன் டிசைன் மற்றும் வசதிகளின் பட்டியலும் வாடிக்கையாளர்களை கவர கூடியதாக உள்ளன. இதன் காரணமாகவே இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆதிக்கம் செலுத்துவதாக நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








