பயோ கேஸ் மூலம் இயங்கும் மாருதி சுஸுகி கார் அறிமுகம்! விற்பனைக்கு வந்துச்சுனா போட்டி நிறுவனங்கள் எல்லாம் காலி!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris). மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் தற்போதைய நிலையில் பெட்ரோல், பெட்ரோல்/சிஎன்ஜி மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆகிய 3 இன்ஜின் ஆப்ஷன்களில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில், ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025 (Japan Mobility Show 2025) வாகன திருவிழாவில், புதிய விக்டோரிஸ் காரை, சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் விற்பனையில் உள்ள மாடலை போல் அல்லாமல், இது பயோ கேஸ் (Biogas) மூலம் இயங்க கூடியது ஆகும். சுஸுகி நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டில் இருந்து பயோ கேஸ் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள பயோ கேஸ் தொழில்நுட்பம், ஏற்கனவே இருந்து வரும் சிஎன்ஜி தொழில்நுட்பத்தில் இருந்துதான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் பயோ கேஸ் தொழில்நுட்பத்தில், அதன் பவர்ட்ரெயின், மீத்தேன் மூலம் இயங்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இந்த மீத்தேன் (Methane) ஆனது, இயற்கை கழிவுகளில் (Organic Waste) இருந்து பெறப்படுவது ஆகும்.

மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் பயோ கேஸ் வெர்ஷனில், சிங்கிள் சிலிண்டருக்கு பதிலாக, ட்யூயல் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய வெர்ஷனின் நீளம் 4,360 மிமீ ஆக உள்ளது. அதே நேரத்தில் இதன் அகலம் 1,795 மிமீ ஆகவும், உயரம் 1,655 மிமீ ஆகவும் உள்ளது.
சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனங்களை காட்டிலும், பயோ கேஸ் சுற்றுச்சூழலுக்கு மிகவும் நட்பானதாக கருதப்படுகிறது. அதே சமயம் இந்த பயோ கேஸ் தொழில்நுட்பம், இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இங்கு பயோ கேஸ் உருவாக்குவதற்கான வளங்கள் மிகவும் அதிகமாக உள்ளன.
மாருதி சுஸுகி நிறுவனம் கூட இந்தியாவில் மனேசரில் உள்ள தனது தொழிற்சாலையில், பயோ கேஸ் பிளாண்ட் ஒன்றை அமைத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். கடந்த 2024ம் ஆண்டில் இருந்து, மனேசர் தொழிற்சாலையில் இந்த பயோ கேஸ் ஆலை செயல்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025 வாகன திருவிழாவில் தற்போது மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் பயோ கேஸ் வெர்ஷன் காட்சிக்கு மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. எனவே மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் பயோ கேஸ் வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு வருமா? என்பதை தற்போது உறுதியாக சொல்ல முடியாது.
ஒருவேளை பயோ கேஸ் உள்கட்டமைப்பு வசதிகள் வெகுவாக முன்னேற்றம் கண்டால், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் பயோ கேஸ் வெர்ஷனை நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். அத்துடன் பயோ கேஸ் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்தால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற கார்களிலும் கூட, பயோ கேஸ் வெர்ஷனை நாம் எதிர்பார்க்கலாம்.
ஒருவேளை மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் பயோ கேஸ் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், அது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோஸ்வேகன் டைகுன் போன்ற மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு எல்லாம் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








