எத்தனை நிறுவனங்களை இந்த கார் காவு வாங்க போகுதோ! விலை இவ்ளோதானா! மொத்த மார்க்கெட்டும் மிரண்டு போய் கெடக்கு!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) கார், நேற்று (செப்டம்பர் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சூழலில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் டெலிவரி பணிகள் எப்போது தொடங்கும்? என்ற கேள்வி வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின்படி பார்த்தால், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் வரும் செப்டம்பர் 22ம் தேதியில் (September 22) இருந்து தொடங்கப்படவுள்ளன. அன்றைய தினம் மிகவும் ஸ்பெஷலானது. அதாவது வரும் செப்டம்பர் 22ம் தேதிதான், நவராத்திரியின் (Navratri) முதல் நாள் ஆகும்.

அத்துடன் அன்றைய தினம்தான், இந்தியாவில் ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பு அமலுக்கு வரவுள்ளது. எனவே சிறப்பு வாய்ந்த ஒரு தினத்தில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்படவுள்ளன. மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் இதில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.

இதில், மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 21.18 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 21.06 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கூடிய ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.07 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதவிர மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் 1.5 லிட்டர் பெட்ரோல்/சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 27.02 கிலோ மீட்டர் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன், இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் கூடிய 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 28.65 கிலோ மீட்டர் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில், அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை. இதில், லெவல் 2 அடாஸ், டால்பி அட்மாஸ் உடன் இன்ஃபினிட்டி ஸ்பீக்கர்கள், டிரைவ் மோடுகள், ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
மேலும் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, சுஸுகி கனெக்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், 360 டிகிரி ஹெச்டி வியூ கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளையும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கொண்டுள்ளது.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.50 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.99 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மாருதி சுஸுகி விக்டோரிஸ் கருதப்படுகிறது.
மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்றுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். எனவே அந்த செக்மெண்ட்டை சேர்ந்த ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி விக்டோரிஸ் மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








