கம்பெனி சொல்ற 34 கிமீ மைலேஜ் அப்படியே கிடைக்குதா! இந்த காரை வாங்க லோன் கூட போட வேண்டியதில்ல! அவ்ளோ கம்மி!
2025ம் ஆண்டு வேகமாக நகர தொடங்கியுள்ளது. தற்போதுதான் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்தது போல் உள்ளது. ஆனால் அதற்குள்ளாக ஜனவரி முடிந்து பிப்ரவரி மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில், மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) கார் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்றாகும்.
மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் 17,756 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்திருந்தது. இதுவே அதிக எண்ணிக்கைதான். ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதாவது 24,078 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 36 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் இந்தியாவில் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி வேகன் ஆர் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. மாருதி சுஸுகி வேகன் ஆர் இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வரும் ஒரு கார் ஆகும்.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் கால் நூற்றாண்டு காலம் கடந்து விட்டது. ஆம், கடந்த 1999ம் ஆண்டின் இறுதியில்தான் மாருதி சுஸுகி வேகன் ஆர் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகள் கடந்திருந்தாலும் கூட தொடர்ச்சியான அப்டேட்கள் மூலமாக மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் காரை இன்னும் இளமையாகவே வைத்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை வெறும் 5.65 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே உங்களால் வாங்கி விட முடியும். இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 7.36 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இது விலை குறைவான கார் என்பதுடன், நல்ல மைலேஜ் (Mileage) வழங்க கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. இருப்பதிலேயே அதிகபட்சமாக மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன.
இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள மைலேஜ் ஆகும். எனவே நடைமுறை பயன்பாட்டில் மைலேஜ் குறையலாம் என நீங்கள் நினைக்கலாம். அது உண்மைதான். இருப்பினும் மாருதி சுஸுகி வேகன் ஆர் சிஎன்ஜி மாடலை வைத்துள்ள ஒரு சிலர் கிட்டத்தட்ட இதே அளவு மைலேஜ் கிடைப்பதாக கூறுகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் காரை எதிர்பார்க்க கூடிய நடுத்தர வர்க்க மக்களுக்கு மாருதி சுஸுகி வேகன் ஆர் நல்ல ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இந்த காரில் 5 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும். அத்துடன் இந்த விலைக்கு ஏற்ற வகையில் போதுமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








