மாருதி தன்னோட இடத்தை யாருக்கும் விட்டு கொடுக்குற மாதிரி இல்ல! ஹூண்டாய் எல்லாம் ஏணி வெச்சாலும் கிட்டவர முடியாது
இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய கார்களாக ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்கள் விளங்குகின்றன. இதனாலேயே பெரும்பாலான கார் நிறுவனங்களில் இருந்து ஒன்றிற்கும் மேற்பட்ட ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, மாருதி சுஸுகி (Maruti Suzuki)-இல் இருந்து மட்டும் 7 விதமான ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நடந்து முடிந்த 2025 ஜனவரி மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குவதற்கு அந்த நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விலை குறைவான ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்படுவது முக்கிய காரணமாகும். ஏனெனில், இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்களை விற்பனை செய்வதில் மாருதி சுஸுகி நிறுவனம் வலுவான ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

எந்த அளவிற்கு என்றால், கடந்த ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட முதல் 4 ஹேட்ச்பேக் கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையது ஆகும். இன்னும் சொல்லப்போனால், இந்த முதல் 4 ஹேட்ச்பேக் கார்கள் மட்டுமே கடந்த மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.
கடந்த 2025 ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் காராக முதலிடத்தை மாருதி சுஸுகி வேகன்ஆர் (WagonR) பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட வேகன்ஆர் கார்களின் எண்ணிக்கை சுமார் 24 ஆயிரத்து 78 ஆகும். ஹேட்ச்பேக் கார்கள் என்று மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்தமாக கடந்த ஜனவரி மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக வேகன்ஆர் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெறும் 17 ஆயிரத்து 756 வேகன்ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. வேகன்ஆருக்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தில் மாருதி சுஸுகியின் பலேனோ (Baleno) ஹேட்ச்பேக் கார் உள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த ஜனவரியில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட 2வது காரும் பலேனோ ஆகும்.
கடந்த மாதத்தில் மொத்த 19 ஆயிரத்து 965 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 ஜனவரியிலும் ஏறக்குறைய இதே எண்ணிக்கையிலான பலேனோ கார்களையே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்து, 3வது மற்றும் 4வது இடங்களில் உள்ள மாருதி ஹேட்ச்பேக் கார்கள், ஸ்விஃப்ட் மற்றும் ஆல்டோ ஆகும். இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 17,081 மற்றும் 11,352 ஆகும்.

5வது இடத்தில் டாடா டியாகோ 6,807 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 6வது மற்றும் 7வது இடங்களில் ஹூண்டாயின் ஹேட்ச்பேக் கார்களான ஐ10 நியோஸ் மற்றும் ஐ20 முறையே 5,311 மற்றும் 4,741 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களில் மாருதி சுஸுகி இக்னிஸ் (3,780), டொயோட்டா க்ளான்ஸா (3,455) மற்றும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (2,895) உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 10 ஹேட்ச்பேக் கார்களுக்கு அடுத்து, மேலும் 6 ஹேட்ச்பேக் கார் மாடல்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றின் விற்பனை எண்ணிக்கை 2 ஆயிரம் அல்லது அதற்கும் கீழே உள்ளது. ஹேட்ச்பேக் கார்கள் தான் மாருதி சுஸுகியின் மிக பெரிய பலம் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications









