மாருதி கார்னு சொன்னாலே வாங்கிடுவாங்க போல... அதிக பேரால் வாங்கப்படும் கார் எதுனு தெரிஞ்சிக்கிட்டு புக் பண்ணுங்க
உலகளவில் மக்கள் அதிகம் பேரால் கார்கள் வாங்கப்படும் நாடுகளுள் ஒன்றாக நமது இந்தியா உள்ளது. இதனாலேயே உலகின் வெவ்வேறான பகுதிகளில் இருக்கும் கார் நிறுவனங்கள் கூட இந்தியாவில் வணிகத்தை துவங்க விரும்புகின்றன. நடந்து முடிந்த 2025 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் மக்களால் அதிகம் தேர்வு செய்யப்பட்ட 10 கார் மாடல்களை பற்றியும், அவை கடந்த ஜனவரி மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றியும் தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
பொதுவாகவே, இவ்வாறான டாப்-10 கார்கள் லிஸ்ட்டில் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-இன் கார்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது வழக்கம். அது கடந்த ஜனவரி மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தின் டாப்-10 லிஸ்ட்டில் 6 மாருதி சுஸுகி கார்கள் இடம்பெற்றுள்ளன. டாடா மோட்டார்ஸில் இருந்து 2 கார்கள் உள்ளன.

ஹூண்டாய் மற்றும் மஹிந்திராவில் இருந்து தலா 1 கார் மாடல்கள் இந்த டாப்-10 லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், முதல் 2 இடங்களை மாருதி சுஸுகியின் வேகன்ஆர் (WagonR) மற்றும் பலேனோ (Baleno) கார்கள் பிடித்துள்ளன. முதலிடத்தில் உள்ள வேகன்ஆர் கடந்த ஜனவரி மாதத்தில் 24 ஆயிரத்து 78 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே ஜனவரி மாதத்தில் 17 ஆயிரத்து 756 வேகன்ஆர் கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரியில் சுமார் 6,322 வேகன்ஆர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கூட 17 ஆயிரத்து 303 வேகன்ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. வேகன்ஆர்-க்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ள மற்றொரு மாருதி காரான பலேனோ கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 965 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 2024 ஜனவரி மாதத்திலும் கிட்டத்தட்ட இதற்கு இணையாக 19,630 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இவற்றிற்கு அடுத்து 3வது இடத்தில் ஹூண்டாயின் கிரெட்டா கார் 18,522 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. கிரெட்டா கார்கள் விற்பனை எப்போதும் அதிகமாக இருப்பது வழக்கம்தான்; ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக பதிவாகி உள்ளது. இதற்கடுத்து 4வது இடத்தில் மாருதி சுஸுகியின் ஸ்விஃப்ட் கார் 17,081 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

5வது இடத்தில் உள்ள டாடா பஞ்ச் காரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 16,231 ஆகும். 6வது மற்றும் 7வது இடங்களில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ உள்ளது. இவற்றின் கடந்த ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 15,784 மற்றும் 15,442 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களில் முறையே டாடா நெக்ஸான் (15,397), மாருதி சுஸுகி டிசைர் (15,383) மற்றும் மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (15,192) உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எப்போதும் போல் மாருதி சுஸுகி கார்களின் ஆதிக்கம் கடந்த ஜனவரி மாதத்திலும் தொடர்ந்துள்ளது. இருப்பினும், ஹூண்டாய் கிரெட்டா காரின் வளர்ச்சியையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டே ஆக வேண்டும். கிரெட்டா எலக்ட்ரிக் காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், வரும் மாதங்களில் கிரெட்டா கார்களின் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









