விற்பனையில் விஸ்வரூபம் எடுக்கும் 27 கிமீ மைலேஜ் கார்! போட்டி நிறுவனங்களின் தூக்கத்தை கெடுத்துட்டாங்க!
இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாகும் எம்பிவி ரக கார் எது என கேட்டால், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) என தயங்காமல் சொல்லலாம். அந்த அளவிற்கு மாருதி சுஸுகி எர்டிகா வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஆனால் ஒரு சில வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி எர்டிகாவை விட, சற்று பிரீமியமான எம்பிவி ரக காரை எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்காக மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் ஒரு ஆப்ஷன்தான் எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6). பெயரிலேயே உள்ளபடி இது 6 பேர் பயணம் செய்ய கூடிய கார் ஆகும்.
மாருதி சுஸுகி எர்டிகா கார், மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார், அந்த நிறுவனத்தின் நெக்ஸா பிரீமியம் டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனையாகி கொண்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது பிரீமியமான கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காருக்கு சிறப்பான ஒரு மாதமாக அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள அந்த காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக நமக்கு இது தெரிய வந்துள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4,140 எக்ஸ்எல்6 கார்களை விற்பனை செய்துள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3,509 ஆக மட்டுமே இருந்தது. இது 18 சதவீத வளர்ச்சி ஆகும். கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மட்டுமல்லாது, நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டாலும் கூட, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 விற்பனையில் வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது.

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3,105 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த ஏப்ரல் மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 4,140 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த வகையில் பார்த்தால் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் விற்பனையில் 25 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் விலை 11.84 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை ஆகும். அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 14.84 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில், 1.5 லிட்டர் கே15சி ஸ்மார்ட் ஹைப்ரிட் மற்றும் 1.5 லிட்டர் கே15சி சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்படுகிறது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற பெரும்பாலான கார்களை போலவே, எக்ஸ்எல்6 காரும், சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடியது. இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.97 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.27 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகின்றன.
மறுபக்கம் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 26.32 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகின்றன. இவை மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் மைலேஜ் ஆகும். மைலேஜ் சிறப்பாக இருப்பதை போல், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் வசதிகளின் (Features) பட்டியலும் சிறப்பாக உள்ளது.
வசதிகளை பொறுத்தவரையில், 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட், சுஸுகி கனெக்ட், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட் கீ, புஷ் பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்றவை எல்லாம் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும்.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், பிரேக் அஸிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்றவை எல்லாம் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன.
ஆனால் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வசதி (அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள்) இல்லை என்பது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் குறை. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான கார்களில் (மிகவும் விலை குறைவான கார்களில் கூட), அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த வசதி மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில் இல்லை. இந்த குறை நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் தன்னுடைய அனைத்து கார்களிலும் ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வசதியை வழங்க தொடங்கியுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் இந்த பட்டியலில் ஒரு சில கார்கள் மட்டும் விடுபட்டுள்ளன. இதில், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரும் ஒன்று.
இருப்பினும் நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள், எக்ஸ்எல்6 உள்பட, மாருதி சுஸுகி நிறுவனத்தின் அனைத்து கார்களிலும், ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வசதி வழங்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடக்கும்பட்சத்தில், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் பாதுகாப்பு இன்னும் உயரும். இதன் காரணமாக இந்த காரின் விற்பனை எண்ணிக்கையும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.
மாருதி சுஸுகி எர்டிகா காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கருதப்படுகிறது. அத்துடன் கியா கேரன்ஸ் (Kia Carens) காருக்கும் கூட, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 நல்ல மாற்று ஆப்ஷன்தான். அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில், நல்ல மைலேஜ் மற்றும் வசதிகள் கொண்ட ஒரு பிரீமியம் காரை எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்கள் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications









