இந்த பொங்கலுக்கு புக்கிங் போட முதல் மாருதி எலெக்ட்ரிக் கார் ரெடி... பெட்ரோல் பங்க் மாதிரி சார்ஜிங் ஸ்டேஷன்ஸ்!!
இந்திய எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) தனது எலெக்ட்ரிக் பயணத்தைத் தொடங்க தயாராகிவிட்டது. அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ள இந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாரா (e-Vitara), நடுத்தர அளவிலான எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதாவது, முதல் காரையே சற்று விலைமிக்கதாக மாருதி சுஸுகி கொண்டுவர உள்ளது.
சமீபத்தில் விலைகள் அறிவிக்கப்பட்டு, இ-விட்டாரா வெளியீடு செய்யப்பட்ட நிலையில், எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) அறிவிக்கப்பட்டு கார் வருகிற 2026 ஜனவரி மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக, 2026 பொங்கல் திருநாளை டார்க்கெட் செய்து, அந்த சமயத்தில் புது கார் வாங்க விரும்புவோரை ஈர்க்கும் விதமாக இ-விட்டாராவுக்கான புக்கிங்கை மாருதி சுஸுகி துவங்கவுள்ளது.

மாருதி சுஸுகியின் விலையுயர்ந்த கார்கள் விற்பனை செய்யப்படும் நெக்ஸா டீலர்ஷிப் ஷோரூம்கள் (Nexa Dealership Showrooms) வாயிலாக இ-விட்டாரா விற்பனை செய்யப்படவுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு மாருதியின் முதல் முழு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இதுவாகும். வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் நிலைநிறுத்தப்படும் இ-விட்டாரா, ரூ.17 லட்சத்திற்கு (எக்ஸ்-ஷோரூம்) சற்று அதிகமான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் அறிமுகமாவதற்கு முன்பே, மாருதி சுஸுகியின் குஜராத் ஆலையில் இ-விட்டாராவின் பெருமளவிலான உற்பத்தி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், இங்கு உற்பத்தி செய்யப்படும் இ-விட்டாரா கார்கள் பிபாவவ் துறைமுகம் வழியாக பல சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளும் ஏற்கனவே துவங்கிவிட்டன. துறைமுகத்தில் ஏற்றுமதி செய்வதற்காக வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ-விட்டாரா கார்களின் படத்துடன், இதுகுறித்த விபரங்களை அந்த சமயத்தில் நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம்.

இவ்வாறான எலெக்ட்ரிக் கார் அறிமுகங்களுடன், எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஆதரிக்கும் வகையில், 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொது சார்ஜிங் மையங்களை உருவாக்கவும் மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இ-விட்டாரா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 543 கி.மீ வரை செல்லக்கூடிய திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது அதிவேக சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. இதனால், நீண்ட தூரப் பயணங்களுக்கும், தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்றதாக இந்த கார் விளங்குகிறது. பிஒய்டி (BYD) நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட இரண்டு லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் (LFP) பேட்டரி ஆப்ஷன்கள் இ-விட்டாராவில் வழங்கப்பட உள்ளன. வாடிக்கையாளர்கள் 48.8 kWh பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்ட 144 PS எலெக்ட்ரிக் மோட்டாரைத் தேர்வு செய்யலாம்.
இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 192.5 Nm வரையிலான டார்க் திறனை வழங்கக்கூடியதாக உள்ளது. பெரியதான 61.1 kWh பேட்டரி உடனும் இ-விட்டாராவை தேர்வு செய்யலாம். இது 174 PS பவரையும், அதே 192.5 Nm டார்க் திறனையும் வழங்கக்கூடியது. இந்த இரண்டு பேட்டரிகளும் DC அதிவேக சார்ஜிங்கை ஆதரிப்பதால், சுமார் 50 நிமிடங்களில் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

மாருதியின் பிரத்யேக ஹார்டெக்ட்-இ (Heartect-e) எலெக்ட்ரிக் இயங்குதளத்தின் கீழ் இந்த எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. வசதிகள் நிறைந்த இந்த காரில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளேயுடன் கூடிய 10.25 அங்குல தொடுதிரை, 10.1 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் முன் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா, ஏழு ஏர்பேக்குகள் மற்றும் கனெக்டட் கார் சூட் போன்ற அம்சங்கள் அடங்கும்.
அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், சாலையில் ஒரே பாதையை தொடர்வதற்கான உதவி, ஆட்டோமேட்டிக் அவசரகால பிரேக்கிங் மற்றும் முன்பக்கமாக மோதலுக்கு உள்ளாகுவது குறித்த எச்சரிக்கை போன்ற லெவல்-2 ADAS (மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பு)-களும் வழங்கப்படுகின்றன. மாருதி சுஸுகி இ-விட்டாரா ஏற்கனவே பாரத் NCAP கிராஷ் டெஸ்ட்டில் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32-க்கு 31.49 புள்ளிகளையும், குழந்தை பாதுகாப்பில் 49-க்கு 43 புள்ளிகளையும் பெற்று, மாருதி சுஸுகி இ-விட்டாரா மிகவும் பாதுகாப்பான எலெக்ட்ரிக் எஸ்யூவிகளில் ஒன்றாக திகழ்கிறது. இத்தகைய கார் ஒன்றுடன் 2026 பொங்கலை பண்டிகையை கொண்டாடலாம். பொங்கல் பண்டிகை காலத்தில் இ-விட்டாராவை டெலிவிரி (Delivery) பெற முடியவில்லை என்றாலும், குறைந்தது அந்த சமயத்தில் காரை புக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications









