ராணுவத்திற்காக பென்ஸ் தயாரித்த டிரக்குகள்.. முரட்டு வீரனைபோல ரெடி பண்ணியிருக்காங்க.. பாக்கவே பயமா இருக்கு..
சொகுசு கார்களை உற்பத்தி செய்வதில் பெயர்போன நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz). இந்த நிறுவனமே ராணுவ பயன்பாட்டிற்கு உகந்த டிரக் ஒன்றை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த டிரக்கை அது தற்போது உலக புகழ்பெற்ற கண்காட்சி ஒன்றில் காட்சியும் படுத்தி இருக்கின்றது. அபுதாபியில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடு (International Defence Exhibition & Conference)-இல் வைத்தே அது தன்னுடைய ராணுவ பயன்பாட்டிற்காக டிரக்கை காட்சிப்படுத்தி இருக்கின்றது.
ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு சார்ந்து பயன்படும் வாகனங்கள் மற்றும் கருவிகளைக் காட்சிப்படுத்துவதற்கான ஓர் பிரத்யேக நிகழ்ச்சியே தற்போது அபுதாபியில் நடைபெற்று வருகின்றது. உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தன்னுடைய ராணுவ பயன்பாட்டு டிரக்கை பென்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கின்றது.

ராட்சசனை போல தயாராகி இருக்கும் இந்த வாகனத்திற்கு அரோக்ஸ் 4042 ஏஎஸ் 6X6 (Arocs 4042 AS 6x6) என்கிற பெயரை மெர்சிடிஸ் நிறுவனம் சூட்டி இருக்கின்றது. பெயரில் மட்டுமல்ல பயன்பாட்டு விஷயத்திலும் இது தனித்துவமானதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
அதாவது, இதன் உருவம் எப்படி மிகவும் முரட்டுத் தனமானதாக இருக்கின்றதோ அதைப் போலவே மிகவும் சவாலான சாலைகளையும் டிரக் அசால்டாக சமாளித்துவிடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. தீவிர ஆஃப்-ரோடுகளில் உள்ள பணிகளை மேற்கொள்ளும் பொருட்டே இந்த டிரக்கை பென்ஸ் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.

Source: motor1 மூன்று-அச்சுகளைக் கொண்ட இந்த ராட்சத வாகனம், டாங்கிகளையே இழுத்துச் செல்லுமாம். செயலற்ற வாகனங்களை இழுத்துச் செல்வதற்கு என்றே இந்த வாகனத்தில் இரட்டை கேபிள் வின்ச் வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த டிரக் 8.2 மீட்டர் நீளம் மற்றும் 3.5 மீட்டர் உயரம் கொண்டிருக்கின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை அரோக்ஸ் ராணுவ டிரக்கில் 12.8 லிட்டர் இன்லைன்-6 டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 416 எச்பி வெளியேற்றும் திறன் கொண்டு என்பது கவனிக்கத்தகுந்தது. கியர்பாக்ஸாக இந்த டிரக்கில் 12 ஸ்பீடு பவர்ஷிஃப்டு 3 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மொத்தமாக இந்த டிரக்கில் பத்து வீல்கள் வழங்கப்பட்டு இருக்கும். முதல் வரிசையில் இரண்டும், மற்ற இரண்டு வரிசையிலும் தலா நான்கு வீல்களும் வழங்கப்பட்டு இருக்கும். அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்டவை ஆகும். இதற்காகவே 6X6 தொழில்நுட்பம் இந்த டிரக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மிகவும் சவால் நிறைந்த சாலைகளை சமாளிக்கும் பொருட்டே இந்த திறன் அதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதேமாதிரியான திறன் கொண்ட மற்றுமொரு டிரக்கையும் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டின் வாயிலாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கின்றது. அதனை ஸெட்ரோஸ் (Zetros) எனும் பெயரிலேயே அவர்கள் காட்சிப்படுத்தினர். இதுவும், ராணுவ பயன்பாட்டிற்கான வாகனம் ஆகும்.
இதன் தோற்றமும் எதிரிகளை மிரட்டும் வகையிலேயே உள்ளது. சொல்லப்போனால் அரோக்ஸ் இதற்கு முன்னால் மிகவும் சாதுவான வாகனத்தைப் போல தெரிகின்றது. அந்த அளவிற்கு மிக மிக முரட்டுத் தனமான லுக்கில் ஸெட்ரோஸ் டிரக்கை பென்ஸ் தயார் செய்திருக்கின்றது. ஆகையால், அரோக்ஸைக் காட்டிலும் ஸெட்ரோஸ்க்கு நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விரைவிலே இந்த இரண்டு டிரக்குகளும் ஏதேனும் ஓர் நாட்டின் ராணுவ படையுடன் இணைந்து மக்கள் பாதுகாப்பு பணியில் பணியாற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சவாலான சாலைகளில் பயணித்து பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட இந்த வாகனத்தை ராணுவ வீரர்கள் பயன்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் முரட்டுத் தனமான தோற்றத்திற்கே எதிரிகள் நடுங்கி ஓடுவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









