30 வருஷத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் செய்யாத சாதனை... மிடில்-கிளாஸ் மக்கள் கூட வாங்க ஆரம்பிச்சிட்டாங்க போலயே!!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), ஜெர்மனியை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனம். இந்தியாவில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் சுமார் கடந்த 30 வருடங்களாக கார்களை விற்பனை செய்துவரும் மெர்சிடிஸ் நிறுவனம், இந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடந்த 2024ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து அசத்தி உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக இந்திய மார்க்கெட்டில் புதியதாக இரு கார்களை மெர்சிடிஸ் அறிமுகம் செய்துள்ளது. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஜெர்மனி தான் ஆட்டோமொபைலின் பிறப்பிடம் என சொன்னால் அதில் மிகையில்லை. குறிப்பாக, மெர்சிடிஸ் நிறுவனம் இன்று உலகளவில் பரந்து விரிந்த நெட்வொர்க் உடன் உள்ளது. 3 அம்புகளை கொண்ட நட்சத்திரத்திலான லோகோவை பார்த்தாலே எல்லாரும் சொல்லி விடுவார்கள், இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் கார் என்று.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் இந்தியா ஆனது மெர்சிடிஸ் நிறுவனத்துக்கு கொஞ்சம் ஸ்பெஷலான மார்க்கெட் என்றுதான் சொல்ல வேண்டும். இதனால்தான், இந்தியாவில் சுமார் 30க்கும் அதிகமான கார் மாடல்களை மெர்சிடிஸ் விற்பனை செய்கிறது. இந்த கார்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது அப்கிரேட் செய்யவும் மெர்சிடிஸ் மறந்தது இல்லை. இதனாலேயே ஒவ்வொரு வருடமும் மெர்சிடிஸ் கார்கள் விற்பனை ஆனது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டில் ஒருபடி மேலே சென்று, இதுவரையில் அதிக எண்ணிக்கையில் மெர்சிடிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்ட ஆண்டாக உள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 19 ஆயிரத்து 565 கார்களை இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது, 2023ஆம் ஆண்டை காட்டிலும் 12.4% அதிகமாகும். ஏனெனில், அந்த ஆண்டில் 17 ஆயிரத்து 408 கார்களை மட்டுமே மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

கடந்த 2024ஆம் ஆண்டில் குறிப்பாக, கடைசி 6 மாதங்களில் மெர்சிடிஸ் கார்களின் விற்பனை 2023ஐ விட 16% அதிகரித்துள்ளது. அதேபோல், மெர்சிடிஸ் நிறுவனம் விற்பனை செய்வதிலேயே விலையுயர்ந்த கார்களின் விற்பனையும் 30% அதிகரித்துள்ளது. கடந்த 2024இல் விற்பனை செய்யப்பட்ட 4இல் 1 மெர்சிடிஸ் கார் ஆனது அதன் விலையுயர்ந்த கார்கள் ஆகும்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, மெர்சிடிஸ் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனை ஆனது 2023ஐ காட்டிலும் சுமார் 94% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த மெர்சிடிஸ் கார்களில் 6% எலக்ட்ரிக் கார்கள் ஆகும். இந்த விற்பனை முன்னேற்றங்களை கொண்டாடும் விதமாக ஜி580 (G580) மற்றும் இ.க்யூ.எஸ்450 (EQS 450) என புதிய கார்களை மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதில் ஜி580 கார் ஆனது இ.க்யூ டெக்னாலஜி உடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2025ஆம் ஆண்டில் மொத்தம் 8 புதிய கார்களை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை எலக்ட்ரிக் கார்களும், விலையுயர்ந்த கார்களும் ஆகும். இவை மட்டுமின்றி, இந்த 2025ஆம் ஆண்டில் 20 புதிய லக்சரி கார் ஷோரூம்கள் (Showrooms)-ஐயும் திறக்க மெர்சிடிஸ் தயாராகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ் போன்ற விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் இருந்து ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் கார்கள் விற்பனை என்றால் ஆச்சிரியமான விஷயம் ஆகும். இந்த 2025ஆம் வருடத்தில் எலக்ட்ரிக் கார்களில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக மெர்சிடிஸ் தெரிவித்துள்ளதால், இந்த வருடத்தில் இந்த நிறுவனத்தின் விற்பனை மேலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









