பல கோடி ரூபாய் சொத்து வைத்திருந்தாலும் இந்த காரை வாங்குவது கஷ்டம்! விலை என்னமோ ரூ.2.9 கோடி மட்டும்தான்!
ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவில் புதிய 'ஜி450 டி' (G 450d) எஸ்யூவி காரை ரூ.2.9 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இது, இந்தியா உள்பட உலகளவில் பிரபலமான மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் (G-Class) காரின் புதிய டீசல் வேரியண்ட் ஆகும்.
இந்திய சந்தைக்காக, முதற்கட்டமாக 50 ஜி450டி கார்கள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன. மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் காரில் முன்னதாக ஏற்கனவே டீசல் வேரியண்ட் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் விற்பனை சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், குறுகிய கால இடைவெளிக்குப் பிறகு, ஜி-கிளாஸ் வேரியண்ட்டில் ஆறு சிலிண்டர் என்ஜின் கொண்ட டீசல் வேரியண்ட் மீண்டும் களமிறங்கப்பட்டு உள்ளது.

இது மெர்சிடிஸ் இ-கிளாஸின் பெட்ரோல் ஜி400 மற்றும் எலக்ட்ரிக் ஜி580 இ.க்யூ.ஜி (EQG) வேரியண்ட்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புதிய மெர்சிடிஸ் ஜி450 டி ஆனது, முற்றிலும் புதிய 3.0 லிட்டர் இன்லைன்-சிக்ஸ் டர்போசார்ஜ்டு டீசல் ஜெலண்டேவேகன் (Gelandewagen) என்ஜின் மற்றும் 48V மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டம் மூலம் இயங்கக்கூடியதாக உள்ளது.
இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 362bhp ஆற்றலையும், 750Nm டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த என்ஜின் ஆற்றல், 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் காரின் நான்கு சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. ஜி-கிளாஸின் புதிய ஜி450 டி வேரியண்ட், மணிக்கு 0-100 கி.மீ வேகத்தை 5.8 வினாடிகளில் எட்டிவிடும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 210 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது என்றும் மெர்சிடிஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

சாலைகளில் அதன் அசத்தலான செயல்பாடு ஒருபுறம் இருக்க, ஜி450 டி ஆனது G-கிளாஸின் பிரத்யேக ஆஃப்-ரோடு திறன்களைக் கொண்டுள்ளது. தரையில் இருந்து 241மிமீ உயர கிரவுண்ட் கிளியரன்ஸ் (Ground Clearance) உடன் அடிப்பகுதியை கொண்ட இந்த புதிய ஜி-கிளாஸ் வாகனத்தில் அதிகப்பட்சமாக 700மிமீ ஆழம் கொண்ட நீரிலும் கடக்க முடியும்.
புதிய ஜி450 டி காரின் வெளிப்புற வடிவமைப்பு ஆனது சில நுட்பமான மேம்பாடுகளுடன் ஜி-கிளாஸ் வடிவமைப்பை அப்படியே கொண்டுள்ளது. ஜி-கிளாஸ் இப்போது இந்த புதிய டீசல் வேரியண்ட்டின் மூலம் நான்கு கிடைமட்ட க்ரோம் ஸ்லேட்டுகள் உடன் மாற்றியமைக்கப்பட்ட கிரில், டிசைன் திருத்தப்பட்ட பம்பர்கள் மற்றும் புதிய 20-இன்ச் ஏஎம்ஜி (AMG) அலாய் சக்கரங்களைப் பெற்றுள்ளது.
ஜி450 டி கார் உட்புறத்தில், மெர்சிடிஸின் சமீபத்திய எம்பக்ஸ் என்.டி.ஜி7 சாஃப்ட்வேர் (MBUX NTG7 Software) கொண்ட இரு 12.3-இன்ச் டிஜிட்டல் திரைகளை டேஸ்போர்டில் கொண்டுள்ளது. வாகனத்தின் முன்பக்க பொனெட்டை மறைத்து, வாகனத்திற்கு முன்னால் என்ன உள்ளது என்பதை காட்டக்கூடிய திறன் கொண்ட இந்த டிஸ்பிளே (Display) மூலமாக பயணத்திற்கான ரியாலிட்டி நேவிகேஷனையும் பெறலாம்.

இந்த டிஸ்பிளே ஆனது டால்பி அட்மாஸ் கொண்ட 760W 18-ஸ்பீக்கர் பர்ம்ஸ்டர் 3D சவுண்ட் சிஸ்டம் உடன் இணைக்கப்பட்டு உள்ளது. இவற்றுடன் புதிய ஜி450 டி கார் நப்பா லெதர் அப்ஹோல்ஸ்டரி, வண்ண கேபின் விளக்குகள் மற்றும் மின்சாரம் மூலம் அட்ஜெஸ் செய்யக்கூடிய இருக்கைகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
மேலும், லெவல்-2 ADAS அம்சங்கள், அடாப்டிவ் டாம்பர்கள், 360 டிகிரி கேமராக்கள் மற்றும் பல ஆஃப்-ரோடு டிரைவிங் மோட்கள் போன்ற விரிவான உபகரணங்களும் புதிய ஜி450 டி வேரியண்ட்டில் இடம்பெற்று உள்ளன. மூன்று லாக்கிங் டிஃபரன்ஷியல்கள் மற்றும் ஒரு லேடர்-ஃபிரேம் சேசிஸ் (ladder-frame chassis) பாரம்பரியமாக இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஜி-கிளாஸ் வாகனம் இப்போது டீசல், பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் என பல விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஜி-கிளாஸின் எலக்ட்ரிக் ஜி580 இக்யூஜி காரை விட சுமார் ரூ.20 லட்சம் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள புதிய மெர்சிடிஸ் ஜி450 டி ஆனது டீசல் என்ஜின்களின் செயல்திறன் மற்றும் நன்மைகளை விரும்பும் கார் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த சாய்ஸ் ஆகும்.


Click it and Unblock the Notifications









