30 வருஷத்துக்கு முன்ன எவ்வளவு கனவோட இந்தியா வந்துருப்பாங்க! ரூ.3,200 கோடியை கார்களுக்காக கொட்டியது வீணா போகல!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), உலகின் மிக பிரபலமான சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, நம் இந்தியாவில் விலையுயர்ந்த கார்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யக்கூடிய நம்பர் ஒன் நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஸ் விளங்குகிறது. ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துக்கு நம் இந்தியா மிக முக்கியமான சந்தை ஆகும். இதனாலேயே நம் நாட்டில் புனேவில் சாகான் என்கிற பகுதியில் மெர்சிடிஸ் நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai) நிறுவனங்கள் அளவிற்கு இல்லையென்றாலும் மெர்சிடிஸ் நிறுவனமும் இந்தியாவில் பிரம்மாண்டமான தொழிற்சாலையை கொண்டுள்ளது.
மெர்சிடிஸ் கார்கள் அனைத்தும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது இல்லை என்றாலும், இந்திய அரசின் இறக்குமதி வரியை தவிர்க்க முடிந்தவரையில் பெரும்பாலான கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய மெர்சிடிஸ் விரும்புகிறது. அதன் முயற்சியாக, இந்தியாவில் கார்கள் உற்பத்தியில் மெர்சிடிஸ் நிறுவனம் பிரம்மாண்டமான மைல்கல்லை தற்போது கடந்துள்ளது.

ஒன்றல்ல, இரண்டல்ல... சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் அசத்தி உள்ளது. இதன் மூலமாக, உலகளவில் மெர்சிடிஸ் கார்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகளுள் ஒன்றாக இந்தியாவின் மெர்சிடிஸ் தொழிற்சாலை விளங்குகிறது.
இந்தியாவில் உள்ள மெர்சிடிஸ் தொழிற்சாலை ஆனது அதிக கார்கள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையாக இருப்பது மட்டுமின்றி, மெர்சிடிஸின் பெட்ரோல்/ டீசல் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்கள் என இரண்டையும் ஒரே இடத்தில் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் உள்ளது. அதுமட்டுமின்றி, பல விதங்களில் மெர்சிடிஸின் இந்திய தொழிற்சாலை ஆனது கார்களை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக உள்ளது.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்திய பென்ஸ் கார் தொழிற்சாலை ஆனது முழுக்க முழுக்க 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கக்கூடியதாக உள்ளது. உலகின் மிக பழமையான ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனமான மெர்சிடிஸ், இந்தியாவில் சுமார் 30 வருடங்களுக்கு முன் 1995ஆம் ஆண்டில் தொழிற்சாலையை திறந்தது.
இந்தியாவில் முதல் 50 ஆயிரம் கார்கள் உற்பத்தியை 2014ஆம் ஆண்டில் மெர்சிடிஸ் கடந்தது. அதாவது, 50 ஆயிரம் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய மெர்சிடிஸ் நிறுவனத்துக்கு 19 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. ஆனால், அதற்கடுத்த 1 லட்சம் கார்கள் உற்பத்தியை 9 வருடங்களிலேயே மெர்சிடிஸ் கடந்துவிட்டது.
2023ஆம் ஆண்டில் இந்தியாவில் கார்கள் உற்பத்தியில் 1.5 லட்சம் என்கிற எண்ணிக்கையை மெர்சிடிஸ் நிறுவனம் கடந்திருந்த நிலையில், அடுத்த 50 ஆயிரம் கார்களை வெறும் 2 வருடங்கள் 3 மாதங்களில் உற்பத்தி செய்து தற்போது 2 லட்சம் என்கிற இமாலய மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த 30 வருடங்களில் கார்கள் விற்பனையில் பல்வேறு சாதனைகளை மெர்சிடிஸ் புரிந்துள்ளது. அவற்றுள் முக்கியமானதாக சொல்ல வேண்டுமென்றால், ஜெர்மனியில் உற்பத்தி செய்யப்பட்டுவந்த உலகளவில் பிரபலமான மெர்சிடிஸ்-மேபக் எஸ்500 (Mercedes-Maybach S500) கார் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கப்பட்டது. அதன்பின், இந்தியாவில் முதல்முறையாக எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து உற்பத்தி செய்ய மெர்சிடிஸ் ஆரம்பித்தது.
அதே 2022ஆம் ஆண்டில் மெர்சிடிஸின் இந்திய கார்கள் தொழிற்சாலை முழுவதுமாக பசுமை ஆற்றலில் இயங்க துவங்கியது. இந்தியாவிலேயே எந்தவொரு லக்சரி கார் நிறுவனமும் செய்யாத அளவிற்கு கடந்த 2024ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்வதற்கு சுமார் ரூ.3,000 கோடியை முதலீடு செய்திருந்த மெர்சிடிஸ் நிறுவனம், கடந்த 2024இல் கூடுதலாக ரூ.200 கோடியை இந்தியாவில் முதலீடாக கொட்டியது.


Click it and Unblock the Notifications








