சென்னையில் இந்த கார் வாங்க ஆள் இல்லைனு நெனைச்சிட்டாங்களா? தென்னிந்தியாவில் இங்க மட்டும் ஷோரூம் திறக்கல!!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), உலகளவில் பிரபல சொகுசு கார் நிறுவனம். ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்வதில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இந்தியா முழுவதுமே மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது.
இருப்பினும், தென்னிந்தியாவில் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தீவிரமாக உள்ளது. இதன் வெளிப்பாடாக, தென்னிந்தியாவில் புதியதாக 3 ஷோரூம்களை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் திறந்துள்ளது. இதில் இரு ஷோரூம்கள் ஹைதராபாத்திலும், ஒரு ஷோரூம் பெங்களூருவிலும் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இந்த இரு நகரங்களில் பென்ஸ் கார்களை வாங்கும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூருவின் வட பெங்களூர் பகுதியில் சர்வதேச விமான நிலையம் சாலையில் சேல்ஸ் & சர்வீஸை வழங்கக்கூடிய புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஷோரூம் ஆனது டெலிவிரி பே (Delivery Bay) இடவசதி உடன் திறக்கப்பட்டுள்ளது. டெலிவிரி பே இடவசதி உடன் ஷோரூம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பென்ஸ் கார்களை ஷோரூமுக்கு உள்ளேயே கஸ்டமர்களுக்கு டெலிவிரி கொடுக்க முடியும்.
சுந்தரம் மோட்டார்ஸ் (Sundaram Motors) நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட உள்ள இந்த புதிய பெங்களூர் பென்ஸ் கார் ஷோரூம் ஆனது மெர்சிடிஸின் 'ஏரோ ஹப்' (Aero Hub) மற்றும் 'பிட் ஷாப்' (Pit Shop) கான்செப்ட்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் நீண்ட கால பார்ட்னராக சுந்தரம் மோட்டார்ஸ் விளங்குகிறது. சுந்தரம் மோட்டார்ஸிடம் மட்டும் 10 மெர்சிடிஸ்-பென்ஸ் கார் ஷோரூம்கள் தென்னிந்தியாவில் செயல்படுகின்றன.

சுமார் 47 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான மெர்சிடிஸ் கார் ஷோரூமாக இது விளங்குகிறது. இந்த ஷோரூம் வளாகத்திற்குள் இடம்பெற்றுள்ள சர்வீஸ் செண்டரில் வருடத்திற்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமாக கார்களை பழுது பார்க்க முடியும். ஹைதராபாத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய ஷோரூம்களுள் ஒன்று மஹாவீர் மோட்டார்ஸ் (Mahavir Motors) நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட உள்ளது.
தொழிற்நுட்ப வசதிகள் மூலமாக இந்த ஷோரூமில் கஸ்டமர்கள் காரை டெலிவிரி செய்யும்போது லக்சரியான உணர்வை பெறலாம் என தெரிவிக்கும் மெர்சிடிஸ் நிறுவனம், இந்த ஹைதராபாத் ஷோரூமையும் டெலிவிரி பே உடன் வடிவமைத்துள்ளது. ஹைதராபாத்தின் வேகமாக வளர்ந்துவரும் ஐடி பார்க் பகுதியில் அமைந்துள்ள இந்த ஷோரூமில் காரை வாங்க வரும் கஸ்டமர்கள் உடன் ஷோரூம் அதிகாரிகள் தனியாக அமர்ந்து கலந்துரையாடும் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
ஹைதராபாத்தில் திறக்கப்பட்டுள்ள மற்றொரு மெர்சிடிஸ் ஷோரூமை லேண்ட்மார்க் கார்ஸ் (Landmark Cars) என்கிற நிறுவனம் நிர்வகிக்க உள்ளது. ஆனால், இந்த புதிய மெர்சிடிஸ் ஷோரூமில் டெலிவிரி பே இடவசதி இல்லை. ஆனால், 6 சர்வீஸ் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமின் சர்வீஸ் செண்டரில் ஒவ்வொரு மாதமும் 150க்கும் அதிகமான கார்களை பழுது பார்க்க முடியும்.
இந்த மூன்று புதிய மெர்சிடிஸ் ஷோரூம்களிலும் கார்களை விற்பனை செய்வதுடன், கார்களுக்கான பராமரிப்பு சேவைகளையும் பெறலாம். மேலும், இந்த ஷோரூம்களில் கஸ்டமர்கள் காரை பற்றிய விபரங்களை தாங்களாக பார்த்து தெரிந்துக் கொள்ளவும் 8 திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஷோரூம்கள் மூலமாக மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஷோரூம்களின் எண்ணிக்கை 50க்கும் மேற்பட்ட நகரங்களில் 125க்கும் மேல் சென்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களுக்கு ஏற்கனவே நம் நாட்டில் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது புதிய ஷோரூம்களை திறந்து இருப்பதன் மூலம் அந்த வரவேற்பு மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. இருந்தாலும், நமது சென்னையில் புதிய ஷோரூமை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் திறக்காதது சற்று வருத்தமளிக்கிறது.


Click it and Unblock the Notifications








