கிமீ-க்கு ரூ.2.5 மட்டுமே செலவு! எலக்ட்ரிக் கார் வாங்கும் ஆசையை நிஜமாக்கும் நேரம் வந்தாச்சு
எம்ஜி மோட்டார் (MG Motor), பிரிட்டிஷ் கார் நிறுவனம். இந்தியாவில் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்தின்கீழ் எம்ஜி செயல்படுகிறது. இந்தியாவில் சமீப காலமாக புது, புது எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-ஐ அறிமுகம் செய்யும் திட்டத்தில் எம்ஜி மோட்டார் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி எலக்ட்ரிக் கார் தான், கோமெட் இவி (Comet EV) ஆகும். இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் காராக விளங்கும் இதில் புதியதாக பிளாக்ஸ்டோர்ம் (Blackstorm) எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கோமெட் இவி எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
எம்ஜி கோமெட் இவி பிளாக்ஸ்டோர்ம் எடிசன் ஆனது பெயருக்கேற்ப முழுவதுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டதாக உள்ளது. இந்த கருப்பு நிறத்தை 'ஸ்டார்ரி பிளாக்' (Starry Black) என எம்ஜி நிறுவனம் அழைக்கிறது. கார் முழுக்க கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே பளிச்சிடும் வகையில் சிவப்பு நிறத்தில் ஹைலைட்களை பார்க்க முடிகிறது.

அதேபோல், காருக்கு உள்ளேயும் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் அலங்கரித்துள்ளனர். காருக்குள் முன் இருக்கைகளின் தலையணைகளில் 'Blackstorm' என்கிற முத்திரை தையலிடப்பட்டு உள்ளது. கோமெட் இவி காரின் சிறப்பு பதிப்பான இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.7.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் காருக்கான பேட்டரியின் விலை உட்படவில்லை.
அதாவது, பேட்டரியை குத்தகை முறையில் பெறுவதற்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, குத்தகை முறையில் பெறப்படும் பேட்டரியில் இருந்து எந்த அளவிற்கு சார்ஜை பயன்படுத்தி உள்ளோம் என்பதை பொறுத்து அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். கோமெட் இவி எலக்ட்ரிக் காரின் பேட்டரிக்கு கிமீ-க்கு ரூ.2.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பேட்டரி இல்லாமலேயே ரூ.7.8 லட்சத்தில் விலையை கொண்டுள்ள புதிய கோமெட் இவி பிளாக்ஸ்டோர்ம் எடிசனின் விலை ஆனது இந்த எலக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டான எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் விலையை காட்டிலும் ரூ.30,000 அதிகம் ஆகும். இதனால், தற்போதைக்கு அதிக விலையில் விற்பனை செய்யப்படும் எம்ஜி கோமெட் இவி கார், இந்த பிளாக்ஸ்டோர்ம் எடிசன் ஆகும்.

இருப்பினும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் அடிப்படையில் தான் இந்த புதிய பிளாக்ஸ்டோர்ம் எடிசனை உருவாக்கி உள்ளனர். அதாவது, எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டில் கிடைக்கும் அத்தனை அம்சங்களையும் இந்த புதிய ஸ்பெஷல் எடிசனிலும் பெறலாம். இந்த வகையில் கோமெட் இவி பிளாக்ஸ்டோர்ம் எடிசனில் 17.4kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.
இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 230கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இந்த எலக்ட்ரிக் காரின் பின்பக்கத்தில் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 41 பிஎச்பி மற்றும் 110 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முற்றிலுமாக அடர் கருப்பு நிறத்தில் எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் கார் பார்ப்பதற்கே மிகவும் அருமையானதாக உள்ளதை கூறியே ஆக வேண்டும். இதனால், புதிய பிளாக்ஸ்டோர்ம் எடிசனினால் கோமெட் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனை அதிகரிக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.


Click it and Unblock the Notifications








