டாடாவோட இடத்தை வாயில போட்டுகிட்டது போதாதுனு ஆடி, பென்ஸ் நிறுவனங்களின் இடத்திற்கும் ஆசைப்படுறாங்க..
இந்தியாவின் மின்சார கார் மார்க்கெட்டை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஆட்சி செய்து வந்த நிலையில், அதன் இடத்தை எம்ஜி (MG) தட்டி பறித்திருக்கின்றது. நாட்டின் நம்பர் 1 விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) இருந்தது. இதன் இடத்தை எம்ஜி விண்ட்ஸர் (MG Windsor EV) தற்போது தன் வசம் வளைத்துப் போட்டுள்ளது. நிறுவனத்தின் மற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களான கோமெட் இவி மற்றும் இசட்எஸ் இவி-க்கும் கணிசமான நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே இந்த நிறுவனம் மேலும் சில மின்சார வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் அடுத்ததாக சூப்பர் கார் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டை தன் வசம் வளைத்துப் போடும் விதமான ஓர் தயாரிப்பையே அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

அது சைபர்ஸ்டர் இவி (Cyberster EV) ஆகும். இந்த காரின் இந்திய வருகையை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவில் நடைபெற்று வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025)-இல் வைத்து எம்ஜி வெளியீடு செய்து இருக்கின்றது.
இந்த காரை தங்களுடைய வழக்கமான எம்ஜி கார் ஷோரூம் வாயிலாக இல்லாமல், எம்ஜி செலக்ட் எனும் ஷோரூம் வாயிலாகவே விற்பனைச் செய்ய இருக்கின்றனர். இந்த ஷோரூமில் சைபர்ஸ்டர் வெளியில் வரும் வகையிலேயே பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல் எம்ஜி காட்சிப்படுத்தியது.
இந்த கார் விற்பனைக்கு வரும் எனில் ஆடி மற்றும் பென்ஸ் நிறுவனங்களின் சூப்பர் கார்களுக்கு, குறிப்பாக, எலெக்ட்ரிக் சூப்பர் கார்களுக்கு போட்டியாக அமையும். இரண்டு பேர் மட்டுமே இந்த காரில் அமர்ந்து பயணிக்க முடியும். இதேபோல் மற்ற விஷயங்களிலும் இந்த கார் மாடல் தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றது.
மிக முக்கியமாக லுக்கில் இது முற்றிலும் மாறுபட்டதாகக் காட்சியளிக்கின்றது. இது ஓர் கன்வெர்டபிள் கார் மாடல் ஆகும். தேவை என்றால் மேற்கூரையை விரித்தும், தேவை இல்லை எனில் அதை மடக்கி வைத்துவிட்டு வானத்தை ரசித்தபடியும் பயணிக்க முடியும். கவர்ச்சி மற்றும் முரட்டுத் தனமான தோற்றம் இரண்டையும் இந்த கார் மாடல் தாங்கி இருக்கின்றது.
குறிப்பாக, இந்த காரின் கவர்ச்சிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் விதமாக கத்தரிக்கோல் போன்று திறக்கும் டோர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதேவேளையில், இதன் முன் பக்கமே மிகவும் முரட்டுத் தனமான லுக்கைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இந்த காரை எம்ஜி நிறுவனம் ஒற்றை பேக் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
77 kWh பேட்டரி பேக் தேர்வு மட்டுமே இந்த காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் முழு சார்ஜில் 443 கிமீ வரையில் ரேஞ்ச் தரும். இத்துடன், 510 பிஎஸ் மற்றும் 725 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் இந்த சூப்பர் கார் ரக எலெக்ட்ரிக் காருக்கு மற்ற சூப்பர் கார் மாடல்களைக் காட்டிலும் குறைவான விலையே எம்ஜி நிர்ணயம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ரூ. 70 லட்சம் தொடங்கி ரூ. 80 லட்சம் வரையிலான விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








