காரின் மதிப்பு என்னனு தெரியாம அழுக்கா நிறுத்தி வெச்சி இருக்காங்க! இந்தியாவில் இந்த காரை பார்க்குறது ரொம்ப ரேர்
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக எம்9 (M9) என்கிற விலையுயர்ந்த சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. நீண்ட ஆலோசனைகளுக்கு பின் இந்தியாவில் விலையுயர்ந்த கார்களை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. பிரிட்டிஷ் கார் நிறுவனமான எம்ஜி மோட்டார், தற்போது சீனாவின் SAIC உதவியின் கீழ் செயல்பட்டு வருகிறது. எம்ஜி மோட்டாருக்கும் இந்தியாவின் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்திற்கும் இடையே சமீபத்தில்தான் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
இந்த கூட்டணிக்கு பிறகு எம்ஜி நிறுவனத்தில் இருந்து கோமெட் இவி (Comet EV), விண்ட்சர் இவி (Windsor EV) என தொடர்ச்சியக விலை குறைவான எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) அறிமுகம் செய்யப்பட்டன. அதேநேரம், எம்ஜி மோட்டாரில் இருந்து விலையுயர்ந்த கார்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவற்றுள் முக்கியமானது, எம்ஜி சைபர்ஸ்டர் (Cyberster) ஆகும்.

எம்ஜி மோட்டாரின் விலையுயர்ந்த லக்சரி எலக்ட்ரிக் காரான சைபர்ஸ்டருக்கு முன்னதாக, எம்ஜி நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் விலையுயர்ந்த கார் தான், எம்9 ஆகும். இந்த காருக்கான முன்பதிவுகள் சமீபத்தில்தான் ரூ.51,000 என்கிற டோக்கன் தொகை உடன் இந்தியாவில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. எம்ஜி மோட்டாரின் சொகுசு கார்களை விற்பனை செய்யும் புதிய ஷோரூம்களான செலக்ட் (SELECT)-இல் எம்9 கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த நிலையில், எம்9 கார்கள் இந்தியாவில் காட்சித்தர ஆரம்பித்துள்ளன. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களில், நம்பர் பிளேட் (Number Plate) இல்லாத பிரம்மாண்டமான எம்9 காரை பார்க்க முடிகிறது. இதில் ஒரு படத்தில் காருக்கு முன்பாக லாரி ஒன்று நிற்பதை பார்க்கலாம். இவ்வாறு லாரியில் கொண்டு செல்லப்படும் கார்களுக்கு நம்பர் பிளேட் அவசியமில்லை.

ஆனால், ஷோரூமுக்கு காரை சாலையில் ஓட்டிக் கொண்டு செல்வதாக இருந்தாலோ அல்லது ஷோரூம் மூலம் நடத்தப்படும் சோதனை ஓட்டமாக இருந்தாலோ சிவப்பு நிற நம்பர் பிளேட்டை கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், சாலையில் ஓடும் அனைத்து வாகனங்களிலும் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். லாரியில் ஏற்றப்பட்ட இந்த கருப்பு நிறத்திலான எம்ஜி எம்9 கார் எந்த ஷோரூமுக்கு கொண்டு செல்லப்பட்டது என்கிற விபரம் இல்லை.
படங்களில் எம்ஜி எம்9 எலக்ட்ரிக் கார் எந்தவொரு மறைப்பும் இன்றி காட்சியளிக்கிறது. காரின் முன்பக்கத்தில் மெல்லியதான வடிவிலான எல்இடி டி.ஆர்.எல்-களை பொனெட்டின் இரு பக்கங்களிலும் பார்க்க முடிகிறது. காரில் இருந்து தனியாக தெரியக்கூடிய வகையில் பளிச்சிடும் நிறத்தில் க்ரோம் பார் (Chrome bar) ஒன்று முன்பக்க பம்பரின் முழு அகலத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
பம்பரின் இரு முனைகளில் இருந்தும் இந்த க்ரோம் பார் மீசை போன்று மேல் நோக்கி செல்வதை படங்களில் காணலாம். காரின் பக்கவாட்டை பார்த்தால், எம்9 கார் எந்த அளவிற்கு நீளமானது என்பதை அறிய முடிகிறது. முன்பக்கத்தை போலவே எம்9 காரின் பக்கவாட்டிலும் கதவு பேனல்களிலும், ஜன்னல் ஃப்ரேம்களிலும் பளபளப்பான க்ரோம் ஹைலைட்களை பார்க்க முடிகிறது.
காரின் பின்பக்கம் நன்கு தட்டையானதாக உள்ளது. பின் இருக்கை வரிசையில் அமர்பவர்களுக்கு நிறைய இடவசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக எம்9 காரை இவ்வாறு எம்ஜி வடிவமைத்துள்ளது. காரின் பின்பக்கத்தில் மேற்கூரையில் ஸ்பாய்லர் (Spoiler) பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி டெயில்லைட்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தை போலவே, பின்பக்க பம்பரிலும் க்ரோம் பார் உள்ளதை காணலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் காரின் வெளிப்பக்க தோற்றத்தை மட்டுமே பார்த்துள்ளோம். உட்புற தோற்றம் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் உள்ளிட்டவற்றை எல்லாம் பார்த்தால் லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகும். அந்த அளவிற்கு பிரம்மாண்டமான காரை தான் அடுத்ததாக இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. தற்போது இந்த விலையுயர்ந்த எம்ஜி எலக்ட்ரிக் கார் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதால், டெலிவிரிகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








