முக்காடு போட்டுனு போனால் மட்டும் விட்ருவோமா... கேமராவில் சிக்கிய விசித்திரமான கார்! உருவாக்குறது யார் தெரியுமா
எம்ஜி மோட்டார் (MG Motor), சீனாவின் SAIC மோட்டார் நிறுவனத்தின் கீழ் செயல்படும் பிரிட்டிஷ் கார் நிறுவனம் ஆகும். இந்தியாவில் சமீபத்தில்தான் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட துவங்கியது. இந்த கூட்டணிக்கு பிறகு இந்தியாவில் எம்ஜி மோட்டாரின் செயல்பாடுகள் யாவும் அப்படியே மொத்தமாக மாறிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, எலக்ட்ரிக் கார் (Electric Car)-களில் எம்ஜி மோட்டார் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. அதிலிலும் குறிப்பாக, கோமெட் இவி (Comet EV), விண்ட்சர் இவி (Windsor EV) போன்ற விலை குறைவான எலக்ட்ரிக் கார்கள் எம்ஜி மோட்டாரில் இருந்து அறிமுகமாகின.
இதைவிட முக்கியமானது என்னவென்றால், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரியை BaaS எனப்படும் வாடகை முறையில் வழங்க எம்ஜி ஆரம்பித்தது. அதாவது, எம்ஜி எலக்ட்ரிக் கார்களை பேட்டரி இல்லாமல் வாங்கலாம். பின்னர், பேட்டரியை வாடகை முறையில் வாங்கி பயன்படுத்தலாம். பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துப்போனால், அதனை கொடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்தி சார்ஜ் நிரம்பிய பேட்டரியை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த முறையில், பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான நேரம் குறைவது மட்டுமின்றி, எலக்ட்ரிக் கார்களின் விலைகளும் குறைந்துள்ளதால், மக்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு எம்ஜி எலக்ட்ரிக் கார்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், இந்தியாவில் எம்ஜி மோட்டாரின் அடுத்தக்கட்ட திட்டம், விலைமிக்க முற்றிலும் புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்வது ஆகும். அதுதான், எம்ஜி மஜெஸ்டர் (Majestor) கார் ஆகும்.
மஜெஸ்டர் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தில் கடந்த சில வருடங்களாகவே எம்ஜி மோட்டார் நிறுவனம் உள்ளது. அதன் வெளிப்பாடாகவே, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் மஜெஸ்டர் காரை எம்ஜி நிறுவனம் காட்சிக்கு நிறுத்தியது. இந்த நிலையில், இந்தியாவில் மஜெஸ்டர் கார் ஒன்று சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் விமான நிலையத்திற்கு அருகே மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை ஓட்டத்தில் மஜெஸ்டர் கார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டு இருப்பதை யாஷ் திவாரி என்பவரால் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பினும், இந்த எம்ஜி எஸ்யூவி காரின் தோற்றத்தை கடந்த ஜனவரி மாதத்தில்தான் ஆட்டோ எக்ஸ்போவில் பார்த்து இருந்தோம்.
மஜெஸ்டர் ஆனது எம்ஜி மோட்டாரின் அளவில் பெரியதான & பிரீமியம் தரத்திலான எஸ்யூவி கார் ஆகும். ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் மஜெஸ்டரை எம்ஜி அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, அந்த அளவிற்கு மஜெஸ்டர் கார் அதிக நீளமானது, உயரமானது மற்றும் அகலமானது ஆகும். இதற்கேற்ப இந்த காரின் முன்பகுதி நன்கு நிமிர்ந்ததாக வடிவமைக்கப்படுகிறது. காரின் முன்பக்கத்தில் பெரிய அளவில் பம்பர் மற்றும் முற்றிலும் கருப்பு நிறத்தில் கிரில் வழங்கப்படுகிறது.

கியாவின் புதிய எஸ்யூவி கார்களில் வழங்கப்படுவதை போன்று, மஜெஸ்டரிலும் எல்இடி ஹெட்லைட்கள் செங்குத்தான டிசைனில் பொருத்தப்படுகின்றன. காரின் பிரம்மாண்டமான உருவத்திற்கு ஏற்ப பெரிய அளவிலான அலாய் சக்கரங்கள் மற்றும் தடிமனான பாடி கிளாடிங்க்ஸ் வழங்கப்படுகின்றன. ஜன்னல் கண்ணாடிகள், பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் மற்றும் கதவு கைப்பிடிகளில் கருப்பு நிறத்திலான எலிமெண்ட்கள் கொடுக்கப்படுகின்றன.
பின்பக்கத்தில், எல்இடி டெயில்லைட்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படுவதை தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில் கூட காணலாம். மேலும், மஜெஸ்டர் காரின் பெரிய உருவத்திற்கு ஏற்ப வித்தியாசமான வடிவத்திலான க்ரோம் எக்ஸாஸ்ட் குழாய்கள் வழங்கப்படுவதையும் இந்த வீடியோவில் காணலாம். இந்த புதிய எம்ஜி காருக்கு உள்ளே டேஸ்போர்டில் 12.3 இன்ச்சில் பொழுதுப்போக்கிற்கான டச் ஸ்க்ரீன் மற்றும் முழுவதும் டிஜிட்டல் தரத்தில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை கொடுக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த பிரிவில் ஏற்கனவே எம்ஜி நிறுவனம் அதன் க்ளோஸ்டர் (Gloster) காரை விற்பனை செய்துவரும் நிலையில், இத்தகைய எஸ்யூவி கார்களை வாங்க விரும்பும் மக்களை மேலும் ஈர்க்கும் விதமாக, மஜெஸ்டரை களமிறக்க தயாராகி வருகிறது. தற்போது சோதனை ஓட்டங்கள் துவங்கி உள்ளதால், விரைவில் எம்ஜி மஜெஸ்டர் காரின் அறிமுகத்தை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









