5 லட்ச ரூபாயில் காரை கொண்டுவரும் போதே தெரியும் இதெல்லாம் நடக்கும்னு! எம்ஜி இப்படி பண்ணும்னு எதிர்பார்க்கல!
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் கோமெட் இவி (Comet EV) எலக்ட்ரிக் கார் (Electric Car) தான் இந்தியாவிலேயே தற்போதைக்கு விலை குறைவான எலக்ட்ரிக் கார் ஆக விளங்குகிறது. ஏழை, எளியோரும் எலக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் வெறும் ரூ.4.99 லட்சம் என்கிற குறைவான விலையில் கோமெட் இவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனாலேயே பலரும் கோமெட் இவி எலக்ட்ரிக் காரை விரும்பி வாங்கிவரும் நிலையில், யார் கண் பட்டதோ தெரியவில்லை இந்த எலக்ட்ரிக் காரின் விலையை ரூ.15,000 வரையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் அதிகரித்துள்ளது. கோமெட் இவி எலக்ட்ரிக் காரை பேட்டரி உடன் அல்லது பேட்டரி இல்லாமல் என இரு விதமான ஆப்ஷன்களில் வாங்கலாம். இதில் பேட்டரி இல்லாமல், BaaS முறையில் கோமெட் இவி கிடைக்கும்.

அதாவது, பேட்டரியை சார்ஜ் காலியான பின் அருகில் உள்ள மையத்தில் கொடுத்து கட்டணத்தை செலுத்தி சார்ஜ் நிரப்பப்பட்ட வேறொரு பேட்டரியை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலமாக, சார்ஜ் ஆகும் வரையில் காத்திருக்க வேண்டிய நேரம் மிச்சமாகுவதாலும், குறைந்த விலையில் கார் கிடைப்பதாலும் பலரும் BaaS முறையில் கோமெட் இவி எலக்ட்ரிக் காரை வாங்கி வருகின்றனர்.
இந்த முறையை தனது மற்ற எலக்ட்ரிக் கார்களுக்கும் விரிவுப்படுத்தி வரும் எம்ஜி நிறுவனம், இருப்பினும் தற்போது வேறு வழியில்லாமல் கோமெட் இவி காரின் விலைகளை அதிகரித்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட ரூ.4.99 லட்சம் விலையானது பேட்டரி இல்லாமல் கோமெட் இவி காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

நல்லவேளையாக இந்த வேரியண்ட்டின் விலையில் மட்டும் எந்த மாற்றத்தையும் எம்ஜி நிறுவனம் கொண்டுவரவில்லை. இதனால், கோமெட் இவி காரின் ஆரம்ப விலை மட்டும் ரூ.4.99 லட்சமாக அப்படியே தொடர்கிறது. மற்ற வேரியண்ட்கள் அனைத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகளும் ரூ.15,000 வரையில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. சில வேரியண்ட்களின் விலைகள் ரூ.14,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பேட்டரி உடன் கோமெட் இவி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையும் ரூ.7.36 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாக அதிகரித்துள்ளது. பேட்டரி இல்லாமல் BaaS முறையில் கோமெட் இவி எலக்ட்ரிக் காரின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.4.99 லட்சத்தில் இருந்து ரூ.7.63 லட்சம் வரையில் ஆகும்.
அதுவே, பேட்டரி உடன் ரூ.7.50 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைவிட முக்கியமானது என்னவென்றால், BaaS முறையில் கோமெட் இவி காரை வாங்குபவர்கள் பேட்டரி வாடகை கட்டணமாக செலுத்த வேண்டிய தொகையும் கிமீ-க்கு ரூ.2.9இல் இருந்து ரூ.3.1 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை அதிகரிப்புக்கு ஏற்ப காரில் எந்த அப்டேட்களும் கொண்டுவரப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் என்கிற அடையாளத்துடன் தான் கோமெட் இவி காரை எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்தை தொட்டுவிட்டன. தொடர்ந்து அதிகரித்துவரும் உற்பத்தி செலவுகளினாலும், போக்குவரத்து செலவுகளினாலும் தான் இந்த நடவடிக்கையை எம்ஜி கையில் எடுத்திருக்கும் என நம்புகிறோம்.
Source: CarDekho


Click it and Unblock the Notifications








