உள்ளே இருப்பவங்களுக்கு கார் ஓடுறது கூட தெரியாது! மினி தியேட்டர் நீளத்துக்கு எலக்ட்ரிக் கார்
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் 'எம்9' (M9) என்கிற பெயரில் அதன் புதிய எலக்ட்ரிக் எம்பிவி காரை காட்சிக்கு நிறுத்தி உள்ளது. முன்னதாக, மிஃபா 9 (Mifa 9) என்கிற பெயரில் முந்தைய 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த எம்பிவி கார் (MPV Car)-ஐ பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பிரிட்டிஷ் நாட்சை சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி மோட்டார் சமீபத்தில்தான் இந்தியாவில் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் இணைந்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த இணைவுக்கு பின், இந்தியாவில் எம்ஜி மோட்டாரின் நடவடிக்கையே மொத்தமாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

கோமெட் இவி, விண்ட்சர் இவி என தொடர்ச்சியாக எலக்ட்ரிக் கார்கள் மூலமாக அடித்து ஆட ஆரம்பித்திருக்கும் எம்ஜி மோட்டார் நிறுவனம் டெல்லியில் நடைபெறும் 2025 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிவித்தப்படி பங்கேற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், எம்ஜி சார்பில் சைபர்ஸ்டர் (Cyberster) என்கிற எலக்ட்ரிக் கார் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
சைபர்ஸ்டர் எலக்ட்ரிக் கார் மட்டுமின்றி, எம்9 என்கிற மற்றொரு பிரீமியம் தரத்திலான எம்பிவி காரும் எம்ஜி சார்பில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின் எம்ஜி மோட்டாரின் செலக்ட் பிரீமியம் ஷோரூம்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கவுள்ள புதிய எம்9 எலக்ட்ரிக் காருக்கான ப்ரீ-புக்கிங்ஸ் துவங்கப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து, வருகிற மார்ச் மாதத்தில் இருந்து இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட உள்ளன. அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் இருந்து புக் செய்தவர்களுக்கு இந்த எலக்ட்ரிக் கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றத்தை பொறுத்தவரையில், எம்9 ஆனது பெட்டகம் வடிவிலான எலக்ட்ரிக் கார் ஆகும்.
முன்பக்கத்தில் மெல்லியதான வடிவத்தில் எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்களை பம்பருக்கு மேலே கொண்டிருக்கும் புதிய எம்ஜி எம்9 எலக்ட்ரிக் காரை சுற்றிலும் க்ரோம்கள் பளபளக்கின்றன. இந்த காரின் பின்பக்கத்தில் செங்குத்தான டிசைன் எல்இடி டெயில்லைட்கள் இடம்பெற்று உள்ளன. ஆனால், இவற்றைவிட எம்9 காரின் முக்கியமான சிறப்பம்சம் என்றால், அது பின் கதவுகள் ஆகும்.

ஏனெனில், இந்த எலக்ட்ரிக் காரில் பின்கதவுகள் தள்ளக்கூடியவைகளாக உள்ளன. மேலும், இந்த கதவுகளை மிகவும் அகலமாக தள்ளி திறக்க முடிகிறது. எந்த அளவிற்கு என்றால், 2வது வரிசையில் இருக்கும் கதவுகளை முழுவதுமாக சாய்த்தாலும், வெளியில் இருந்து பார்த்தால் முழு இருக்கையும் தெரியும். ஒட்டோமேன் (Ottoman) இருக்கைகள் என அழைக்கப்படும் இந்த இருக்கைகள் வெண்டிலேஷன் மற்றும் மசாஜ் வசதிகளுடன் உள்ளன.
மொத்தம் 3 வரிசையில் இருக்கைகளை கொண்ட இந்த எம்பிவி எலக்ட்ரிக் காரில் மொத்தம் 7 பேர் வரையில் சவுகரியமாக அமரலாம். இவற்றுடன் பல்வேறு தொழிற்நுட்ப வசதிகளை கொண்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் காரில் 90kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 430கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என எம்ஜி தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அடுத்தடுத்து புதியது, புதியதாக எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் நிறுவனமாக எம்ஜி மோட்டார் உருவெடுத்து வருகிறது. அந்த வரிசையில் புதியதாக வெளியீடு செய்யப்பட்டுள்ள சைபர்ஸ்டர் எலக்ட்ரிக் காரும் சரி, எம்9 எலக்ட்ரிக் காரும் சரி இந்தியர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









