மிடில்-கிளாஸ் மக்களுக்காக கொண்டுவரப்பட்ட கார்! கஸ்டமர்கள் வராமல் ஷோரூம்களில் ஈ ஆடுது
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் 2021ஆம் ஆண்டில் மிகவும் நம்பிக்கை உடன் இந்தியாவில் அறிமுகம் செய்த கார், அஸ்டர் (Astor) ஆகும். ஆனால், இந்திய கார்கள் வரலாற்றிலேயே மிகவும் மோசமான தோல்வியை சந்தித்த கார்களுள் எம்ஜி அஸ்டரையும் சொல்லலாம். எம்ஜி மோட்டார் நிறுவனம் 2019இல் ஹெக்டர் (Hector) காரில் இருந்து சமீபத்திய விண்ட்சர் இவி (Windsor EV) எலக்ட்ரிக் கார் வரையில் பல தரமான கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதே நம்பிக்கை உடன் தான் அஸ்டர் காரையும் களமிறக்கியது. ஆனால், இந்த காரின் கடந்த 2025 பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கை சிரிப்பாய் சிரிக்கிறது.
2020இல் கொரோனா காலக்கட்டம் உலகையே ஆட்டிப்படைத்த பின், 2021இல் நிலைமை ஓரளவிற்கு சரியாகிக் கொண்டிருந்த சமயத்தில், படுத்துக்கிடந்த கார்கள் மார்கெட்டை மீட்டெடுக்க போகும் கார் என்கிற அளவிற்கு பரபரப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட கார், எம்ஜி அஸ்டர் ஆகும். ஏனெனில், அந்த அளவுக்கு பெரிய எதிர்பார்ப்பை எம்ஜி நிறுவனம் உருவாக்கி வைத்திருந்தது.

இந்தியாவிலேயே முதல்முறையாக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு வசதி உடன் அறிமுகம் செய்யப்பட்ட கார் எம்ஜி அஸ்டர் ஆகும். 2019இல் ஹெக்டரை இந்தியாவின் முதல் இணைய வசதி கொண்ட காராக அறிமுகம் செய்த எம்ஜி நிறுவனம், 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் லெவல்-1 அடாஸ் (ADAS) வசதியை கொண்ட காராக க்ளோஸ்டர் (Gloster)-ஐ அறிமுகம் செய்தது.
அந்த வரிசையில் 2021இல் அஸ்டர் இந்தியாவின் முதல் ஏஐ வசதி கொண்ட காராக களமிறக்கப்பட்டது. இத்தனைக்கும் 4 மீட்டருக்கும் கொஞ்சம் அதிகமான நீளம் கொண்ட காம்பெக்ட் எஸ்யூவி கார் தான், எம்ஜி அஸ்டர் ஆகும். இருப்பினும், இந்த காரில் பனோராமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜர், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், பவர்டு டிரைவர் சீட் மற்றும் 360-டிகிரி கேமரா என ஏகப்பட்ட தொழிற்நுட்ப வசதிகளை எம்ஜி வழங்குகிறது.

இவை அனைத்தையும் அஸ்டர் போன்ற அளவில் சற்று சிறியதான எஸ்யூவி காரில் பெறுவது என்பது அந்த சமயத்தில் மிகவும் ஆச்சிரியமாக பார்க்கப்பட்டது. இதனை மேலும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக வெறும் ரூ.10 லட்சத்தில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இத்தனை சிறப்பம்சங்கள் வழங்கப்பட்ட போதிலும் நம் இந்தியர்கள் யாரும் எம்ஜி அஸ்டரை கண்டுக்கொள்வது இல்லை என்பதுதான் ஆச்சிரியமாக உள்ளது.
மற்ற எல்லா கார்களையும் போலவே, அறிமுகம் செய்யப்பட்ட புதியதில் அஸ்டரின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாகவே இருந்தது. ஆனால், அதன்பின் விற்பனை மெல்ல மெல்ல குறைய துவங்கியது. கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 1,036 அஸ்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. மற்ற எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில் இதுவே குறைவு எனும்போது, கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் இன்னும் குறைவாக வெறும் 264 அஸ்டர் கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரியை விட இந்த ஆண்டு பிப்ரவரியில் சுமார் 772 அஸ்டர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் மொத்தம் 47 ஆயிரத்து 55 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் என்பன 4.2 மீட்டரில் இருந்து 4.4 மீட்டர் வரையில் நீளம் கொண்டவை ஆகும்.
47 ஆயிரத்து 55 கார்களில் வெறும் 264 எம்ஜி அஸ்டர் கார்கள் மட்டுமே அடங்குகின்றன. அதாவது, காம்பெக்ட் எஸ்யூவி காரை வாங்க விரும்பும் 200 பேர்களில் ஒருவர் மட்டுமே எம்ஜி அஸ்டரை தேர்வு செய்கிறார். எம்ஜி இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் கார் (MG ZS EV Electric Car) கூட கடந்த பிப்ரவரி மாதத்தில் 399 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலைமிக்க எலக்ட்ரிக் கார் கூட கிட்டத்தட்ட 400 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அஸ்டர் மட்டும் வெறும் 264 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருப்பது இந்த காரில் ஏதோ குறை இருப்பதை காட்டுகிறது. அது என்ன என்பதை எம்ஜி மோட்டார் உடனே சரிசெய்ய வேண்டும். இல்லையேல், ஒவ்வொரு மாதமும் கஸ்டமர்களின் எண்ணிக்கை இதைவிட குறைய துவங்கும்.


Click it and Unblock the Notifications








