13.50 லட்ச ரூபாய் எலக்ட்ரிக் காராக விற்பனைக்கு வந்துச்சு... ஆனால் இனிமே இதுதான் விலை!!
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'விண்ட்சர் இவி' (Windsor EV) என்கிற பெயரில் அதன் புதிய எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ அறிமுகம் செய்தது. வழக்கமாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் என எம்ஜி விண்ட்சர் இவி -ஐ நாம் அசால்ட்டாக எண்ணிவிட முடியாது. ஏனெனில், அந்த அளவிற்கு மக்கள் அதிகம் பேரால் விற்பனையில் ஜொலித்து வருகிறது. எம்ஜி விண்ட்சர் இவி மார்க்கெட்டுக்கு வந்ததும் செய்த தரமான சம்பவம் என்றால், அது டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலக்ட்ரிக் காரை விற்பனையில் முந்தியது ஆகும்.
அதுவரையில் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் நம்பர் ஒன் எலக்ட்ரிக் காராக டாடா நெக்ஸான் இவி இருந்துவந்த நிலையில், எம்ஜி விண்ட்சர் இவி -இன் அறிமுகத்திற்கு பிறகு அந்த நிலை மாறியது. தொடர்ச்சியாக 2 மாதங்களாக இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்பட்ட எலக்ட்ரிக் காராக விண்ட்சர் இவி முதலிடத்தை பிடித்தது.

டாடா நெக்ஸான் இவி காருக்கு கூட அறிமுகமான பின்பு மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க சில மாதங்கள் தேவைப்பட்டது. ஆனால், எம்ஜி விண்ட்சர் இவி உடனடியாக எலக்ட்ரிக் கார் சந்தையை புரட்டிப் போட்டதற்கு காரணம், பேட்டரி இல்லாமல் காரை விற்பனை செய்ய எம்ஜி மோட்டார் மேற்கொண்ட யுக்தி ஆகும். அதாவது, பேட்டரியை குத்தகை முறையில் வாங்க வேண்டும்.
இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், சார்ஜ் காலியான பேட்டரியை கொடுத்து கட்டணத்துடன் சார்ஜ் நிரம்பிய பேட்டரியை வாங்கி செல்லலாம். கிட்டத்தட்ட சமையல் எரிவாயு சிலிண்டருக்கு பின்பற்றப்படும் அதே யுக்திதான். பேட்டரியை இந்த முறையில் வாங்கினால், எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சம் ஆகும்.

எம்ஜி விண்ட்சர் இவி போன்ற அளவில் பெரியதான எலக்ட்ரிக் எம்பிவி (MPV) கார் வெறும் ரூ.9.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைத்தது, வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்தது. அதுமட்டுமின்றி, சார்ஜ் நிரப்ப வேண்டிய பிரச்சனையும் இல்லாததால், இவ்வாறான முறையில் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை வாங்க பலரும் முனைப்பு காட்டினர். அதேநேரம், மற்ற எலக்ட்ரிக் கார்களை போன்று இந்த எம்ஜி எலக்ட்ரிக் காரை பேட்டரி உடன் வாங்கலாம்.
பேட்டரி உடன் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது அறிமுகத்தின் போது ரூ.13.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அப்போதே இது காரின் அறிமுக விலை தான் என்றும், விண்ட்சர் இவி காரை பேட்டரி உடன் வாங்கும் முதல் 10 ஆயிரம் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த விலையில் கார் வழங்கப்படும் என எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிவித்து இருந்தது.

10 ஆயிரம் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுவதற்கு தாமதமாகினாலும், டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே விண்ட்சர் இவி காருக்கு ரூ.13.49 லட்சம் என்பது ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக இருக்கும் எனவும், அதன்பின் காரின் விலை ரூ.50,000 அதிகரிக்கப்படும் எனவும் அறிவித்தது. அதன்படி, விண்ட்சர் இவி-இன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை இந்த ஜனவரியில் இருந்து ரூ.13.99 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது எக்ஸ்சைட் வேரியண்ட்டின் விலை ஆகும். எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் விலை ரூ.14.99 லட்சமாகவும், எஸ்சென்ஸ் வேரியண்ட்டின் விலை ரூ.15.99 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. விலை அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன், எம்ஜி இ-ஹப் செயலி மூலமாக விண்ட்சர் இவி-ஐ இலவசமாக சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதியும் நிறுத்தப்பட்டு, கட்டணமாக்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸின் ஆதிக்கத்தையே ஒரு எலக்ட்ரிக் கார் முறியடிக்கிறது என்றால், நிச்சயமாக அதில் பல சிறப்புகள் உள்ளன என்று அர்த்தம். ரூ.50,000 விலை அதிகரிப்பு எல்லாம் எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனையை பாதிக்காது என நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications









