டாடாவின் சோலியை மொத்தமா முடிக்க போகும் புதிய எம்ஜி எலக்ட்ரிக் கார்! ஷோரூமுக்கு போனா காரை பார்க்காம வராதீங்க!!
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து தற்சமயம் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வரும் எலக்ட்ரிக் கார் (Electric Car) விண்ட்சர் இவி (Windsor EV) ஆகும். எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையிலான மக்களால் வாங்கப்படும் எலக்ட்ரிக் காராக எம்ஜி விண்ட்சர் இவி விளங்குகிறது. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் எம்ஜியின் விண்ட்சர் இவி மிக சிறப்பாக விற்பனையாகுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பேட்டரி இல்லாமல், குறைந்த விலையில் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை வாங்கலாம் என்பதுதான் இந்த காரை மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலப்படுத்தியது. விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் முயற்சியாக, இந்த காரில் புதியதாக 'புரோ' (Pro) வேரியண்ட்டை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் தயாராகி வருகிறது.

அறிவித்தப்படி நாளை (மே 6) விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் கார் ஒன்று பெரியதாக எந்தவொரு மறைப்பும் இல்லாமல், பொது வெளியில் காட்சி தந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த படங்களில், கிரே நிறத்தில் காட்சியளிக்கும் புதிய விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காரின் முன்பகுதி மட்டும் சிறிய மறைப்புகளால் மறைக்கப்பட்டு உள்ளதை காண முடிகிறது. ஆக, வழக்கமான விண்ட்சர் இவி காருக்கும், புதிய விண்ட்சர் இவி புரோ காருக்கும் இடையே முன்பக்கத்தில் மட்டுமே முக்கியமான வித்தியாசங்கள் இருக்கும் என்பதை அறிய முடிகிறது.

புதிய விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காரின் முன்பக்கத்தில் அப்படி என்ன மாதிரியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை அறிய காரின் அதிகாரப்பூர்வ அறிமுகம் வரையில் காத்திருக்க வேண்டும். முன்பக்க தோற்றத்தில் மட்டுமின்றி, புதிய விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காரில் அலாய் சக்கரங்களையும் புதிய டிசைனில் எம்ஜி மோட்டார் நிறுவனம் வழங்கியுள்ளது.
இதே டிசைனிலான அலாய் சக்கரங்களை எம்ஜி ஹெக்டர் (Hector) காரில் பார்க்க முடியும். இந்த அப்டேட்கள் எல்லாவற்றையும் விட முக்கியமாக, புதிய விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காரில் அடாஸ் (ADAS) வழங்கப்பட உள்ளது. இதனை தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் விண்ட்சர் இவி காரின் ஸ்பை படங்களில் காரின் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள 'ADAS' பேட்ஜ் மூலமாக அறிய முடிகிறது.
புதிய விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காருக்கு உள்ளே பழுப்பு நிறத்தில் இருக்கைகள் வழங்கப்பட உள்ளன. இதில், முன் இருக்கைகள் வெண்டிலேஷன் (Ventilation) வசதி உடன் இருக்கும் என கூறப்படுகிறது. விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் தற்போதைய வசதிகள் பலவற்றை புதிய விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காரிலும் எம்ஜி நிறுவனம் வழங்கும்.
இதன்படி, பெரிய அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் திரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனோராமிக் கண்ணாடி ரூஃப், ஆட்டோ-டிம்மிங் IRVM, கேபினை சுற்றிலும் விளக்குகள் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்டவற்றை புதிய விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காரிலும் எதிர்பார்க்கலாம். இந்த புதிய காரில் பெரிய அளவிலான 50.6kWh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட உள்ளது. இது சிங்கிள் சார்ஜில் அதிகப்பட்சமாக 460கிமீ தொலைவிற்கு காரை இயக்கி செல்லக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை பேட்டரி உடன் அல்லது பேட்டரி இல்லாமல் வாங்கலாம். பேட்டரி இல்லாமல் வாங்கினால், பேட்டரியை குத்தகை முறையில் வாங்க வேண்டியதாக இருக்கும். இதேபோன்று இரு விதமான ஆப்ஷன்களில் புதிய எம்ஜி விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காரும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். தற்போது இந்த புதிய விண்ட்சர் இவி புரோ காரின் படங்கள் ஆனது எம்ஜி டீலர்ஷிப் ஷோரூம் வளாகத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.
Source: Team BHP


Click it and Unblock the Notifications








