கேரள மக்கள் இப்போவே காரை புக் பண்ண ரெடியாகி இருப்பாங்க! BMW கார் அளவுக்கு இந்த கார்களை பார்க்க முடியுறதில்ல
பி.எம்.டபிள்யூ குழுமத்தின் (BMW Group) கீழ் செயல்படும் மினி (MINI) நிறுவனம் இந்தியாவில் புதிய ஜான் கூப்பர் ஒர்க்ஸ் கன்ட்ரிமேன் ஆல்4 (MINI John Cooper Works Countryman ALL4) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.64.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கார், இந்திய சந்தையில் மினியின் லேட்டஸ்ட் ஆல்-வீல்-டிரைவ் (AWD) எஸ்யூவியாக களமிறக்கப்பட்டு உள்ளது. இதனால்தான், காரின் பெயரில் கடைசியில் 'ஆல்4' என்கிற வார்த்தை சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த காரின் முன்பதிவுகள் (Bookings) இன்று முதல் தொடங்கியுள்ளன. இந்த புதிய கன்ட்ரிமேன் ஆல்4 கார், அமெரிக்க சந்தை தரநிலைகளின்படி ஒரு முழு அளவிலான எஸ்யூவி என்ற வகையில் அதன் நீளம், அகலம், உயரம் உள்ளிட்ட அளவுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

இதன் மிக முக்கியமான அம்சம் பெட்ரோல் என்ஜின் ஆகும். தற்போது இந்தியாவில் கிடைக்கும் ஒரே ஒரு பெட்ரோல் கன்ட்ரிமேன் மாடலாக இது உள்ளது. இந்த கார், சிபியூ (Completely Built-Up) வழித்தடத்தின் மூலம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி (Delivery) செய்யப்பட உள்ளது.
புதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் கன்ட்ரிமேன் ஆல்4, புதுமையான மற்றும் துணிச்சலான வடிவமைப்புடன் வந்துள்ளது. இதன் புதிய எண்கோண வடிவிலான முன்பக்க கிரில், சிவப்பு-கருப்பு-வெள்ளை வண்ணங்களில் மறுவடிவமைக்கப்பட்ட JCW லோகோ மற்றும் மிளகாய் சிவப்பு நிற மேற்கூரை ஆக்சென்ட்கள் ஆகியவை இதற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை அளிக்கின்றன.

மினியின் பாரம்பரிய சிறிய அளவிலான தோற்றத்தை பராமரித்துக்கொண்டே, புதிய ஜான் கூப்பர் ஒர்க்ஸ் கன்ட்ரிமேன் ஆல்4 கார் ஒரு துணிச்சலான தோற்றத்தை தருகிறது. உட்புறத்தில், மோட்டார்ஸ்போர்ட் (Motorsport) கார்களை போன்று சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. டாஷ்போர்டு மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் துணியால் ஆனதாக உள்ளது.
காரின் உட்புற கேபின் முன்பை விட விசாலமானதாக உள்ளது. இதன் மூலம், பின்பக்கத்தில் தற்போது 1,450 லிட்டர்கள் வரை லக்கேஜ் கொள்ளளவை வழங்குகிறது. சமீபத்தில் ஜிஎஸ்டி மாற்றத்தால் மினி கூப்பர் விலை ரூ.3 லட்சம் வரை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் கன்ட்ரிமேன் ஆல்4 காரில், 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் ட்வின் பவர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில், இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 5750- 6500 ஆர்பிஎம்மில் 312 பிஎச்பி பவரையும், 2000- 4500 ஆர்பிஎம்மில் 400 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இது வெறும் 5.4 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ/ மணி வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

இந்த மினி காரின் அதிகபட்ச வேகம் 250 கிமீ/மணி ஆகும். ஏரோ டைனாமிக் ரீதியாக மேம்படுத்தப்பட்ட 19 மற்றும் 20 அங்குல சக்கரங்கள் அகலமான டயர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை மேம்பட்ட ஹேண்ட்லிங் மற்றும் பிடிமானத்தை உறுதிசெய்து, எந்த சாலை நிலைமைகளிலும் காரை உறுதியாக உணர வைக்கின்றன.
காருக்குள் டாஷ்போர்டின் மையத்தில் வட்ட வடிவில் OLED டிஸ்ப்ளே உள்ளது. இது இன்ஃபோடெயின்மென்ட், மினி எக்ஸ்பீரியன்ஸ் மோட்ஸ் மற்றும் கேபினின் வண்ண விளக்குகள் போன்றவற்றை கட்டுப்படுத்தும் மையமாக செயல்படுகிறது. மேலும், டாஷ்போர்டு முழுவதும் டைனமிக் லைட்டிங் எஃபெக்ட்களை உருவாக்கும் இந்த டிஸ்ப்ளே ஆனது வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் செயல்படக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஜேசிடபிள்யூ கன்ட்ரிமேன் ஆல்4, மினியின் ரேசிங் பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதோடு, செயல்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான பலன்களையும் வழங்குகிறது. குறிப்பாக இந்த காரின் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் நெடுஞ்சாலைகளில் மேம்பட்ட நிலைத்தன்மையையும், சவாலான சாலைகளிலும் சிறந்த டிராக்ஷன் கண்ட்ரோலையும் உறுதி செய்கிறது.


Click it and Unblock the Notifications









