மொபைல் போன் கம்பெனி கார் மார்க்கெட்டில் இறங்கினால் இதுதான் நடக்கும்! வருஷத்துக்கு ஒரு காரை கொண்டு வந்துருது!!
சுருக்கமாக எம்.ஐ (mi) என அழைக்கப்படும் சியோமி (Xiaomi) நிறுவனத்தை நம்மில் நிறைய பேருக்கு மொபைல் போன் (Mobile Phone) கம்பெனியாக தான் தெரியும். ஆனால், இந்த நிறுவனத்தில் இருந்து சிறிய ரக கை கடிகாரத்தில் இருந்து பெரிய அளவிலான ஆட்டோமொபைல் வாகனங்கள் வரையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கை தலைமையிடமாக செயல்படும் சியோமி நிறுவனம் கார்கள் உற்பத்தியில் சில வருடங்களுக்கு முன்பே இறங்கிவிட்டது. தற்போது இரண்டாவது கார் சியோமி நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்தியாவில் அல்ல, சீனாவில்.
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துவருவது பல கார்ப்பிரேட் நிறுவனங்களுக்கு ஆட்டோமொபைல் துறையில் கதவை திறந்துள்ளது. இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), ஏத்தர் எனர்ஜி (Ather Energy) மற்றும் அல்ட்ராவொய்லெட் (Ultraviolette) போன்ற 50க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் 2-வீலர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய கடந்த சில வருடங்களில் களத்தில் இறங்கி உள்ளன.

இந்திய எலக்ட்ரிக் 2-வீலர்கள் மார்க்கெட் இப்படி என்றால், எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, எம்ஜி மோட்டார் (MG Motor), பி.ஒய்.டி (BYD) போன்ற சீன நிறுவனங்களின் கை ஓங்க ஆரம்பித்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டே இந்த அளவிற்கு உள்ளது என்றால், உலகிலேயே போட்டி மிகுந்த சீன ஆட்டோமொபைல் சந்தையை பற்றி சொல்லவே வேண்டாம்.
நம்மை விட பல வருடங்கள் முன்னோக்கி இருக்கும் சீனாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு கடந்த பல வருடங்களாகவே அதிகமாக இருந்து வருவதால், சியோமி போன்ற மிக பெரும் நிறுவனங்கள் நேரடியாக எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியில் இறங்கியுள்ளன. இந்த வகையில், எஸ்.யூ7 (SU7) என்கிற பெயரில் தனது முதல் எலக்ட்ரிக் காரை கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சியோமி அறிமுகம் செய்தது.

இந்த சியோமி எஸ்யூ7 எலக்ட்ரிக் காரில் புதியதாக விலைமிக்க எஸ்யூ7 அல்ட்ரா (Ultra) கார் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைவிட முக்கியமானது என்னவென்றால், சியோமி நிறுவனம் தனது 2வது எலக்ட்ரிக் காரை ஒய்.யு7 (YU7) என்கிற பெயரில் சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
2 லட்சத்து 53 ஆயிரத்து 500 சீன யுவான் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.28.50 லட்சம்) விலையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஒய்யு7 எலக்ட்ரிக் காருக்கு புக்கிங் துவங்கப்பட்ட வெறும் 18 மணிநேரத்திற்குள் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் முன்பதிவுகள் மக்களிடம் இருந்து கிடைத்துள்ளன. இதன் விளைவாக, சியோமி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு வர்த்தகத்தில் அதிகரித்துள்ளது.

சீன மக்களிடம் இருந்து ஒய்யு7 எலக்ட்ரிக் காருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்காத சியோமி நிறுவனம், ஒய்யு7 எலக்ட்ரிக் கார்களின் உற்பத்தியை அதிகரித்துள்ளது. சியோமி ஒய்யு7 காரின் விலை உடன் ஒப்பிடுகையில், டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் மாடல் ஒய் (Model Y) எலக்ட்ரிக் கார் இதற்கு விற்பனையில் போட்டியாக இருக்கும். டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காரும் சீனாவில் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் இறங்குவதற்கு மிகவும் யோசித்த சியோமி நிறுவனம் இறங்கிய பின் அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து மார்க்கெட்டை தெறிக்கவிட்டுள்ளது. இருப்பினும், இந்த சீன நிறுவனம் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









