வேலை தேடி இனி வெளியூர்களுக்கு போக வேண்டியதில்லை! சென்னைக்கு அருகே பிளான் பண்ணி ஆலையை திறந்து இருக்காங்க
முருகப்பா க்ரூப் (Murugappa Group), சுமார் 125 ஆண்டுகால வரலாற்றை கொண்ட, 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புமிக்க இந்தியாவின் பழமையான & அனுபவமிக்க தொழில் குழுமம். சென்னையில் வளர ஆரம்பித்து, இன்று டெல்லி வரையில் தனக்கென பிரத்யேகமான அலுவலகத்தை கொண்டிருக்கும் முருகப்பா க்ரூப்பின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் செயல்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், ட்யூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் க்ளீன் மொபிலிட்டி (Tube Investments Clean Mobility) ஆகும். மாசற்ற பசுமையான போக்குவரத்துக்கான தீர்வுகளை கண்டுப்பிடிப்பதுதான் இந்த நிறுவனத்தின் பணி ஆகும்.
அதன்படி, மோண்ட்ரா எலக்ட்ரிக் (Montra Electric) என்கிற எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் நிறுவனம் ட்யூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் க்ளீன் மொபிலிட்டி நிறுவனத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்கள், சிறிய கமர்ஷியல் வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்டவை மோண்ட்ரா எலக்ட்ரிக் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.

இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு வாகனத்தை தயாரிப்பதற்கு என தனியாக ஒரு நிறுவனத்தை மோண்ட்ரா எலக்ட்ரிக் நிறுவியுள்ளது. அவ்வாறு, எலக்ட்ரிக்கில் இயங்கக்கூடிய சிறிய ரக கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக மோண்ட்ரா எலக்ட்ரிக் நிறுவிய நிறுவனம் தான், டிவோல்ட் எலக்ட்ரிக் வைகல்ஸ் (Tivolt Electric Vehicles) ஆகும்.
தற்போது புதிய தொழிற்சாலை திறக்கப்பட்டு இருப்பதும் இந்த டிவோல்ட் எலக்ட்ரிக் வைகல்ஸ் நிறுவனத்தின் கீழ் தான். டிவோல்ட் எலக்ட்ரிக் வைகல்ஸ் நிறுவனம் தனது புதிய வாகன உற்பத்தி தொழிற்சாலையை நம் தமிழ்நாட்டில் நிறுவி உள்ளது. தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் புதிய தொழிற்சாலையை டிவோல்ட் எலக்ட்ரிக் வைகல்ஸ் நிறுவனம் திறந்துள்ளது.
இந்த புதிய தொழிற்சாலை திறப்பு நிகழ்ச்சியில் ட்யூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக செயல் இயக்குனர் அருண் முருகப்பன், ட்யூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் க்ளீன் மொபிலிட்டியின் நிர்வாக இயக்குனர் ஜலாஜ் குப்தா மற்றும் டிவோல்ட் எலக்ட்ரிக் வைகல்ஸ் நிறுவனத்திற்கான சிஇஓ சஜு நாயர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பத்தில் செயல்படக்கூடிய தொழிற்சாலையான இது சுமார் 5 லட்ச சதுர கிமீ பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வருடத்திற்கு 50 ஆயிரம் எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க முடியும். ஏற்கனவே கூறியதுபோல், இங்கு முழுக்க முழுக்க எடை குறைவான எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன. குறிப்பாக, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்திருக்கும் எவியடர் (Evitor) வாகனங்கள் இங்குதான் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
எலக்ட்ரிக் கனரக வாகனங்களை உருவாக்குவதற்கு என தனியாக ஒரு தொழிற்சாலையை மோண்ட்ரா எலக்ட்ரிக் கொண்டுள்ளது. மேலும், 3-சக்கர எலக்ட்ரிக் வாகனங்களை சிறிய ரக எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனமாக மோண்ட்ரா எலக்ட்ரிக் கருதாததால் பொன்னேரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில் மோண்ட்ராவின் 3-சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட போவதில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மோண்ட்ரா எலக்ட்ரிக்கின் இந்த புதிய வாகன உற்பத்தி தொழிற்சாலை திருவள்ளூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டு இருந்தாலும், சென்னையில் இருந்து இந்த தொழிற்சாலை ஆனது வெறும் 35கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, பொன்னேரிக்கு அருகே காட்டுப்பள்ளியில் அதானி குழுமம் (Adani Group) தனது துறைமுகத்தை விரிவுப்படுத்தி வருகிறது. இதற்காக துறைமுகத்தை இணைக்கும் விதமாக பல புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கெல்லாம் கணக்கு போட்டுதான் மோண்ட்ரா எலக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய தொழிற்சாலையை பொன்னேரியில் அமைத்துள்ளது போல. அதுமட்டுமில்லாமல், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ள நகரமான பொன்னேரி வழியாக தான் சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலை செல்வது குறிப்பிடத்தக்கது. மறுப்பக்கம், மோண்ட்ரா எலக்ட்ரிக்கின் வருகையால் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








