கம்மி விலையில் கார்களை மாருதி விற்பனை செய்வதன் பலன்... ஹூண்டாய், டாடாவுக்கு தண்ணி காட்டும் மஹிந்திரா!!
உலகின் மிக பெரிய கார் சந்தைகளுள் நமது இந்தியாவும் ஒன்று என சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கிலான கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் மட்டும் ஒவ்வொரு மாதத்திலும் 1 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நடந்து முடிந்த கடந்த 2025 ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த முதல் 10 நிறுவனங்கள் எவை? அவை விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை எத்தனை? என்பது உள்ளிட்ட விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் தற்போதைக்கு மொத்தம் 14 கார் நிறுவனங்களில் இருந்து கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த 14 நிறுவனங்களில் இருந்து மொத்தமாக கடந்த ஜூன் மாதத்தில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 757 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை இதுவாகும்.

ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டில் இதே ஜூன் மாதத்தில் 21 ஆயிரத்து 661 கார்கள் அதிகமாக, 3 லட்சத்து 39 ஆயிரத்து 418 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு ஜூன் உடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூனில் இந்தியாவில் கார்கள் விற்பனை 6.38% குறைந்துள்ளது. வழக்கம்போல், அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனமாக முதலிடத்தை மாருதி சுஸுகி பிடித்துள்ளது.
மாருதி சுஸுகியில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 906 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2024 ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 160 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், மாருதி சுஸுகி கார்களின் விற்பனை 13.31% குறைந்துள்ளது.

மாருதி சுஸுகிக்கு அடுத்து மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனங்களை முந்தி திடீரென எழுச்சி பெற்றுள்ள மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் 47 ஆயிரத்து 306 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மஹிந்திராவுக்கு அடுத்து 3வது இடத்தில் ஹூண்டாய் (Hyundai) 44 ஆயிரத்து 24 கார்கள் விற்பனை உடன் உள்ளது. ஆனால், 2024 ஜூன் மாதத்தில் 50 ஆயிரத்து 103 கார்கள் விற்பனை உடன் ஹூண்டாய் நிறுவனம் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்து இருந்தது. அந்த மாதத்தில் மஹிந்திரா 40 ஆயிரத்து 22 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இவற்றிற்கு அடுத்து 4வது இடத்தில் டாடா மோட்டார்ஸ் 37 ஆயிரத்து 83 கார்கள் விற்பனை உடன் உள்ளது. இது வழக்கத்தை காட்டிலும் மிக மிக குறைவாகும். 5வது இடத்தில் உள்ள டொயோட்டா கடந்த மாதத்தில் 26,453 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி ஐந்து இடங்களில் முறையே கியா (20,625), எம்ஜி மோட்டார் (5,829), ஸ்கோடா (5,014), ஹோண்டா (4,618) மற்றும் ஃபோக்ஸ்வேகன் (3,089) உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் விற்பனை மெதுவாக அதிகரித்து வருகிறது. ஆனால், ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் விற்பனை தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது. அதிலிலும் குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதத்தில் வெறும் 37 ஆயிரம் கார்களை மட்டுமே விற்பனை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதில் இருந்து, ஹூண்டாய் மற்றும் டாடா கார் கஸ்டமர்களை மஹிந்திரா மெல்ல மெல்ல தன் பக்கம் இழுத்து வருவதை அறிய முடிகிறது.
Source: Rushlane (https://www.rushlane.com/)


Click it and Unblock the Notifications









