10 லட்ச ரூபாய்க்குள் தான் விலை... ஆகஸ்ட்டில் இந்த 4 கார்களுக்கு செம்ம டிமாண்ட்!
இந்தியாவில் சமீப காலமாக எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு தான் நல்ல சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேநேரம், ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களை வாங்குவதற்கு என்றும் எப்போதும் ஒரு கூட்டம் உள்ளது. ரூ.10 லட்சத்திற்குள் எக்ஸ்-ஷோரூம் விலையை (Ex-Showroom Price) கொண்ட ஹேட்ச்பேக் கார்களுள் மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி பலேனோ, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் டாடா டியாகோ ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.
மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki WagonR): "டால் பாய்" வடிவமைப்புடன் விசாலமான உட்புறம், சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகள் ஆகியவை வேகன்ஆர் காரின் முக்கிய அம்சங்கள் ஆகும். இதனாலேயே இந்த மாருதி காரை பலரும் விரும்பி வாங்குகின்றனர்.

நடந்து முடிந்த கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14 ஆயிரத்து 552 வேகன் ஆர் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. தற்சமயம் வேகன் ஆரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.79 லட்சமாக உள்ளது. அதிகப்பட்சமாக ரூ.7.62 லட்சம் வரையில் வேகன் ஆர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் உள்ளன.
மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): ரூ.6.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் கிடைக்கும் இது, பிரீமியம் ஹேட்ச்பேக் வகையைச் சேர்ந்தது. பிரீமியம் தரத்திலான கார்களுக்கே உண்டான ஸ்டைலான வடிவமைப்பு, விசாலமான உட்புறம் மற்றும் எரிபொருள் சிக்கனமான என்ஜின் ஆப்ஷன்கள் பலோனோவின் சிறப்பம்சங்கள் ஆகும்.

இருப்பினும், இதன் காரணமாகவே இந்த காரின் உயர்மட்ட வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் பட்ஜெட்டைத் தாண்டக்கூடும். கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் 12 ஆயிரத்து 549 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஜூலை மாதத்திலும் சரி, 2024ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலும் சரி கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான பலேனோ கார்கள் தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): வேகன் ஆரை போன்று குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட் காருக்கும் மக்கள் மத்தியில் எப்போதுமே சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.49 லட்சம் ஆகும்.

ஆகஸ்ட் மாதத்தில் 12 ஆயிரத்து 385 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு கணிசமான பங்களிப்பை கொடுத்துள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டில் ஸ்விஃப்ட் காரில் புதுப்பிக்கப்பட்ட தோற்றம் மற்றும் மேம்படுத்தப்பட்ட இசட்-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டது. இது ஸ்போர்ட்டியான ஓட்டுநர் அனுபவம் மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனத்திற்கு பெயர் பெற்றதாக விளங்குகிறது.
டாடா டியாகோ (Tata Tiago): மாருதி சுஸுகி கார் அல்லாமல், இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் ஒரே ஹேட்ச்பேக் கார் இதுவாகும். ஆனால், மேற்கூறப்பட்ட மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் கார்கள் அளவிற்கு டியாகோவின் விற்பனை இல்லை என்பது இதன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கையை பார்த்தாலே தெரிகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 5,250 டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த டாடா ஹேட்ச்பேக் காரின் விலை ரூ.5.00 லட்சம் முதல் தொடங்குகிறது. உறுதியான கட்டமைப்பு மற்றும் குறைந்த விலைக்காக மார்க்கெட்டில் டியாகோ பிரபலமானதாக உள்ளது. சிஎன்ஜி மற்றும் இவி வகைகளிலும் டியாகோ கிடைக்கும் நிலையில், டியாகோ இவி எலக்ட்ரிக் காரும் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான ஆரம்ப விலையில் வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இன்னும் பல ஹேட்ச்பேக் கார்கள் ரூ.10 லட்சத்திற்கு உள்ளான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லாததால், அவற்றை இந்த லிஸ்ட்டில் குறிப்பிடவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் தோராயமான எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இவை காரின் வேரியண்ட் மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications









