பெருசா போட்டியே இல்லாமல் முதலிடத்தில் மாருதி... லிஸ்ட்டில் 6இல் முதல் 3 இடங்களில் மாருதி சுஸுகி கார்கள்!!
2025 அக்டோபரில், இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களில் மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் போன்ற மாருதி சுஸுகி கார்கள் முன்னணியில் உள்ளன. அதேநேரம், டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகியவையும் இந்த லிஸ்ட்டில் இடம்பிடித்து, ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் பிரபலமான தேர்வுகளாக விளங்குகின்றன. 2025 அக்டோபரில் அதிகம் விற்பனையான பத்து லட்ச ரூபாய் விலை கொண்ட ஹேட்ச்பேக் கார்களின் விவரங்களை இங்கே காணலாம்.

மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki WagonR): 2025 அக்டோபர் மாத ஒட்டுமொத்த கார்கள் விற்பனையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ள வேகன்ஆர், கடந்த மாதத்தில் மொத்தம் 18,970 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் உயரமான வடிவமைப்பு, சிறந்த மைலேஜ் (குறிப்பாக சிஎன்ஜி வகை) மற்றும் விசாலமான உட்புற கேபின் இடவசதி ஆகியவை ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): 2025 அக்டோபரில் 16,873 யூனிட்கள் விற்பனையாகி உள்ள பலேனோ 2024 அக்டோபரை காட்டிலும் வலுவான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மாருதியின் பிரீமியம் தரத்திலான இந்த ஹேட்ச்பேக் ரக காரில் 9-இன்ச் ஸ்மார்ட் பிளே புரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அதிக எரிபொருள் சிக்கனம் (சிஎன்ஜிக்கு 30.61 கிமீ/லி வரை) போன்ற அம்சங்கள் கிடைக்கின்றன.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): 2025 அக்டோபரில் 15,542 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள ஸ்விஃப்ட்டை கார் விமர்சகர்கள் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்று புகழ்கின்றனர். அதற்கேற்ப, இதன் கூர்மையான வடிவமைப்பு, வலுவான மறுவிற்பனை மதிப்பு மற்றும் நல்ல எரிபொருள் செயல்திறன் ஆகியவை மக்கள் மத்தியில் கடந்த பல வருடங்களாகவே வரவேற்பை பெற்று வருகிறது.

டாடா பன்ச் (Tata Punch): ஹேட்ச்பேக் காராக இது கருதப்பட்டாலும், உண்மையில் பன்ச் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலைப் பிரிவில் பிரபலமான தேர்வாக உள்ள மைக்ரோ-எஸ்யூவி ரக கார் ஆகும். 2025 அக்டோபரில் 16,810 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள இந்த டாடா காரின் எஸ்யூவி போன்ற ஸ்டைலிங், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் உறுதியான கட்டமைப்பு ஆகியவை குடும்பங்களுக்கு ஏற்ற தேர்வாக அமைகின்றன.

டாடா டியாகோ (Tata Tiago): 2024 அக்டோபரில் 4,682 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த இந்த கார், கடந்த மாதத்தில் 8,850 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.4.57 லட்சத்தில் தொடங்கி மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஹேட்ச்பேக் கார் இது ஆகும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும், ஆட்டோமேட்டிக் பிரிவில் இது ஒரு வலுவான எண்ட்ரி-லெவல் கார் ஆகும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS): பிரீமியம் அம்சங்கள் மற்றும் நடைமுறைத் தேவைகளுக்கு இடையே சமநிலையை வழங்கக்கூடிய விலை குறைவான ஹூண்டாய் காராக இது விளங்குகிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற இந்த கார் கடந்த அக்டோபர் மாதத்தில் 5,426 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலை கொண்ட ஹேட்ச்பேக் பிரிவில் இது ஒரு வலுவான போட்டியாளராகக் கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீப காலங்களில் எஸ்யூவி கார்களுக்கு வரவேற்பு அதிகரித்து இருந்தாலும், ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. இதனாலேயே கார் நிறுவனங்கள் முடிந்தவரையில் ரூ.10 லட்சத்திற்குள் குறைந்த விலையில் ஹேட்ச்பேக் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்ய விரும்புகின்றன. அவ்வாறு விற்பனை செய்யப்படும் மேற்கூறப்பட்ட ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றை ரூ.10 லட்சத்திற்குள் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









