டாடா காரை யாரும் கண்டுக்குறது இல்ல... இந்த மாருதி காரில் அப்படி என்ன தான் இருக்கு?
இந்தியாவில் சில காரணங்களால், கடந்த ஆகஸ்ட் மாத பயணிகள் கார்கள் விற்பனை சற்று சரிவை கண்டுள்ளது. இதனால் கார் உற்பத்தியாளர்கள் விநியோகத்தை மறுசீரமைக்க வேண்டியுள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி திருத்தம் மற்றும் பண்டிகை கால சலுகைகள் இதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவை செடான் (Sedan) ரக கார்களின் விற்பனையில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடந்த 2025 ஆகஸ்ட் மாத கார்களின் விற்பனை தரவுகளின்படி, இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான செடான் கார்களாக மாருதி சுஸுகி டிசையர், ஹூண்டாய் அவ்ரா மற்றும் டாடா டிகோர் ஆகியன விளங்குகின்றன. இந்த செடான் கார்களை பற்றியும், அவற்றின் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கைகளை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஒரேயொரு செடான் கார், டிசையர் ஆகும். அதாவது, ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனையாகும் செடான் கார், டிசையர் ஆகும். இதனாலேயே இந்த காரை அவ்வப்போது மாருதி சுஸுகி நிறுவனம் மறக்காமல் அப்கிரேட் செய்துவிடுகிறது.
தொடர்ந்து பிரபலமாக இருக்கும் இந்த காம்பாக்ட் செடான் கார், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 11,885 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இதன் நம்பகத்தன்மை, அதிக எரிபொருள் திறன் (CNG-யில் 33.73 கி.மீ/கி.கி வரை) மற்றும் ரூ.6.84 லட்சம் முதல் துவங்கும் மலிவான விலை ஆகியவையே இதன் பிரபலத்திற்கான காரணங்கள் ஆகும்.

ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura): டிசையருக்கு போட்டியாக ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் செடான் கார், அவ்ரா ஆகும். டிசையரை போன்று, அவ்ரா காரையும் ஹூண்டாய் நிறுவனம் அவ்வப்போது அப்கிரேட் செய்துவிடுகிறது. டிசையர் அளவிற்கு இல்லையென்றாலும், அவ்ரா கார்களையும் ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வாங்குகின்றனர்.
ரூ.5.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையுடன், தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த இந்த காம்பாக்ட் செடான் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 7,495 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. வாடிக்கையாளர்கள் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் இதைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் கேபின் தரம் மிகவும் பாராட்டப்படுகிறது.

டாடா டிகோர் (Tata Tigor): இந்த பிரிவில் உள்ள பாதுகாப்பான கார்களில் டாடா டிகோரும் ஒன்று. இது குளோபல் NCAP பாதுகாப்பு மதிப்பீட்டில் 4 நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது. இருப்பினும், இதன் விற்பனை பெரியதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக, கடந்த சில மாதங்களாக டிகோரின் விற்பனை அதாள பாதாளத்திற்கு சரிந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 2025-ல் இதன் விற்பனை வெறும் 805 யூனிட்களாக பதிவாகி உள்ளது. ஸ்டைலான வடிவமைப்புடன், ரூ.6.00 லட்சம் முதல் துவங்கும் போட்டி விலையில் டாடா டிகோர் சிறப்பான மதிப்பை வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, விசாலமான கேபின் மற்றும் வசதியான சவாரி அனுபவத்திற்கு பெயர் பெற்ற ஹோண்டா அமேஸ் 3,465 யூனிட்களும், சிறந்த மைலேஜ் மற்றும் வசதியான சவாரி அனுபவத்தை வழங்கும் பிரீமியம் தரத்திலான மிட்-சைஸ் செடான் காரான மாருதி சுஸுகி சியாஸும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கணிசமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இவற்றின் சில வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்தை தாண்டி செல்கின்றன.


Click it and Unblock the Notifications









