100 கிலோ குறைவான எடையில் புதிய தலைமுறை ஆல்டோ ரெடியாகிட்டு இருக்கு.. மைலேஜ் 30கிமீ-க்கும் அதிகமா தருமா!
இந்தியர்களின் பேரன்புமிக்க கார் மாடலாக உள்ளது மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto). இந்த கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனையே சுஸுகி (Suzuki) நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. நாம் இதுவரை பார்த்திராத ஓர் ஆல்டோவாகவே இந்த புதிய தலைமுறை ஆல்டோ (New Gen Alto) இருக்கும் என கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலே தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, புதிய தலைமுறை ஆல்டோவின் குறிப்பிட்ட சில முக்கிய சிறப்புகள் பற்றிய விபரங்களே வெளியாகி உள்ளன.
அந்த தகவல்கள் அனைத்தும் நம்ப முடியாததாகவே உள்ளன. குறிப்பாக, புதிய தலைமுறை ஆல்டோ இப்போது சாலையில் வலம் வந்துக் கொண்டு இருக்கும் ஆல்டோ காரைக் காட்டிலும் 100 கிலோ எடைக் குறைவானதாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுவது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

Image Source: bestcarweb அதுமட்டுமல்ல அதிக ஆற்றல்மிக்க ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் இந்த புதிய தலைமுறை ஆல்டோவில் சுஸுகி வழங்க இருப்பதாக கூறப்படுகின்றது. இது இன்னும் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில் அமைந்திருக்கின்றது. 48 வோல்ட் சூப்பர் எனெர்ஜி சார்ஜ் சிஸ்டமே இதில் வழங்கப்பட இருப்பதாக தெரிகின்றது.
இந்த அம்சத்தினால் இன்னும் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக ஆல்டோ மாற இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஒரு லிட்டருக்கே அது 30 கிமீ அல்லது அதற்கும் அதிகமான மைலேஜை தரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இது உறுதியான தகவல் அல்ல.
அதேவேளையில், மூன்றாம் தலைமுறை ஆல்டோ லிட்டர் ஒன்றிற்கு 25.2 கிமீ முதல் 27.7 கிமீ வரையில் மைலேஜை தந்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மைலேஜை தருவதில் மட்டுமல்ல தோற்றத்திலும் மாபெரும் முன்னேற்றத்தை புதிய ஆல்டோ காண இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சொல்லப்போனால் மிகுந்த கவர்ச்சியான உருவத்தையே அது புதிய தலைமுறையின்கீழ் பெற இருக்கின்றது. அழகான ஹெட்லைட், கிரில், பம்பர், வீல் மற்றும் ரியர் பகுதியை அது பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த புதிய தலைமுறை ஆல்டோ முதலில் ஜப்பானிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றது.
2026 ஆம் ஆண்டில் இதன் அறிமுகம் அங்கு அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு பின்னரே உலக நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது இதுவரை தெரியவில்லை. இது வருவதற்கான சாத்தியக் கூறுகள் துளியும் தெரியவில்லை.
இருப்பினும், புதிய ஆல்டோ இந்தியாவைச் சேர்ந்த ஒட்டுமொத்த கார் காதலர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்தியாவில் ஆல்டோ விற்பனையில் இல்லை. ஆல்டோ கே10 மாடலே விற்பனையில் இருக்கின்றது. ஆகையால், புதிய தலைமுறை ஆல்டோ, ஆல்டோ கே10 மாடலுக்கு மாற்றாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இதுவும் உறுதியானது இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலே ஆல்டோ. சொல்லப்போனால் அடித்தட்டு மற்றும் எளிய மக்களால் எளிதில் வாங்கக் கூடிய இடத்திலேயே அது இருந்து வந்தது. ஆனால், பாதுகாப்பு மற்றும் புதிய மாசு உமிழ்வு விதி காரணமாக அது விற்பனையில் அகற்றப்பட்டுவிட்டது. இப்போது ஆல்டோ கே10 மாடல் மட்டுமே விற்பனையில் இருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








