ரூ.7.90 லட்சத்தில் கிடைக்கும் புதிய வென்யூ கார் பார்க்க இப்படித்தான் இருக்குமா? இதைவிட குறைவான விலை கிடையாது!
ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India), அதன் புதிய 2026 வென்யூ (Venue) காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். பெரும்பாலான மக்களால் ஏற்கக்கூடிய பட்ஜெட் விலையில் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள் மிகுந்ததாக புதிய வென்யூ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், இதன் விலை குறைவான ஆரம்ப நிலை எச்.எக்ஸ்2 (HX2) வேரியண்ட் கூட, பல சிறப்பம்சங்களுடன் களமிறங்கியுள்ளது.
சிறிய ரக எஸ்யூவி (SUV) கார்கள் பிரிவில் புதிய தர நிலையை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய வென்யூ காரின் எச்.எக்ஸ்2 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.90 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன. வென்யூ எச்.எக்ஸ்2, பாதுகாப்பு, வடிவமைப்பு மற்றும் வசதி ஆகியவற்றின் சிறந்த கலவையை வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப மூன்று என்ஜின் ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

ஆனால், பெரும்பாலான கார்களில் ஆரம்ப நிலை வேரியண்ட்களில் ஒரேயொரு என்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய வென்யூ காரின் எச்.எக்ஸ்2 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் ரூ.7.90 லட்சமாகவும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் ரூ.8.80 லட்சம் ஆகவும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் ரூ.9.70 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைத்தாலும், வென்யூவின் இந்த எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டை மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே வாங்க முடியும். சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வென்யூ காரின் எச்.எக்ஸ்2 வேரியண்ட்கள் அதற்குள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கிவிட்ட நிலையில், அவ்வாறு ஷோரூமுக்கு வந்த எச்.எக்ஸ்2 காரின் படங்கள் நமக்கு 'டீம்ஆட்டோடிரெண்ட்' (TeamAutoTrend) என்கிற யூடியூப் சேனல் மூலம் கிடைத்துள்ளன.

புதிய வென்யூ எச்.எக்ஸ்2 கார், அதன் உயர் ரக வேரியண்ட்களின் நவீன வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், LED DRLs, LED டெயில் லேம்ப்கள் மற்றும் LED பின்புற ஸ்டாப் லேம்ப்கள் ஆகியவை ரூ.7.90 லட்சம் விலை வரம்பில் கிடைப்பது அரிது. இருப்பினும் அவற்றுடன் இந்த எஸ்யூவி காரில் பாடி கலர் ORVMகள், டோர் ஹேண்டில்கள், முன் & பின்பக்க ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா ஆகியவை உள்ளன.
வென்யூ எச்.எக்ஸ்2 காரை பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கினால் 15-இன்ச் இரும்பு சக்கரங்களும், டர்போ-பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் உடன் வாங்கினால் 16-இன்ச் டூயல்-டோன் இரும்பு சக்கரங்களும் கிடைக்கின்றன. உட்புறத்தில், எச்.எக்ஸ்2 வேரியண்ட் பல நவீன வசதிகளுடன் ஆச்சரியப்படுத்துகிறது. இந்த காரின் கேபின் முழுவதும் கருப்பு நிறத்தில், ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

காருக்குள் ஆடியோ மற்றும் ப்ளூடூத் கட்டுப்பாடுகளுடன் கூடிய பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் சக்கரம் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்பிளேவை ஏற்கக்கூடிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன. மேலும், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் 4.2-இன்ச் மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே, காருக்குள் முன் & பின்பக்கத்தில் ஸ்பீக்கர்களும் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றுடன், மேனுவல் க்ளைமேட் கண்ட்ரோல், பின்பக்க ஏசி வென்ட்கள் மற்றும் இரண்டு இருக்கை வரிசைகளுக்கும் டைப்-சி USB சார்ஜிங் போர்ட்களும் இடம்பெற்றுள்ளன. பவர் விண்டோஸ், சாய்த்து அட்ஜெஸ் செய்யக்கூடிய பவர் ஸ்டீயரிங், எலக்ட்ரிக் அட்ஜஸ்டபிள் ORVMகள் மற்றும் 12 வோல்ட் பவர் அவுட்லெட் போன்ற அம்சங்களும் இந்த காரில் அடங்குகின்றன.

ஆரம்ப நிலை எச்.எக்ஸ்2 வேரியண்ட்டிலும், ஹூண்டாய் பாதுகாப்பு அம்சங்களில் சமரசம் செய்யவில்லை. இந்த காம்பாக்ட் எஸ்யூவி காரில் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்பட்டுள்ளன. ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), வைகில் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM), ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் (HAC) மற்றும் முன் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்கள், இந்தியாவின் சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் பாதுகாப்பான ஆரம்ப நிலை வேரியண்ட்டாக வென்யூ எச்.எக்ஸ்2-ஐ முன்னிலைப் படுத்துகின்றன. பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்கள் கலவையுடன், வென்யூ எச்.எக்ஸ்2 பல போட்டி கார்களை விட சிறந்ததாக உள்ளது. வென்யூ எச்.எக்ஸ்2 காருக்கு மூன்று என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவது, நகர்ப்புற பயனர்கள் முதல் நீண்ட தூரப் பயணிகள் வரையிலானோரின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









