மற்ற எஸ்யூவி கார்களை விட புதிய ஹூண்டாய் வென்யூ ஏன் சிறந்தது? விலை மட்டுமில்லை, இவற்றையும் கவனிக்கனும்!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2025 வென்யூ ஃபேஸ்லிஃப்ட் (Venue Facelift) காரை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய, நவீன வெளிப்புற வடிவமைப்பு, பிரீமியம் உட்புற வசதிகள் மற்றும் சிறந்த தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கார் வெளிவந்துள்ளது. டாடா நெக்ஸான், ஸ்கோடா கைலாக், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகிய கார்களுக்கு இது போட்டியாக இருக்கும்.
சப்-4மீ காம்பாக்ட் எஸ்யூவி கார் பிரிவில் 2025 வென்யூ ஒரு புதிய பெஞ்ச்மார்க் ஆக மாறியுள்ளது. இதன் உட்புற வடிவமைப்பு செக்மென்ட்டிலேயே மிகவும் ஆடம்பரமானதாகக் கருதப்படுகிறது. டூயல்-டோன் லெதர் இருக்கைகள், பிரீமியம் லெதர் ஆர்ம்ரெஸ்ட்கள், ஸ்போர்ட்டியான டி-கட் ஸ்டீயரிங் சக்கரம் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

காபி டேபிள் பாணியில் வடிவமைக்கப்பட்ட சென்டர் கன்சோல், நிலா போன்றதான கேபின் விளக்குகள் ஆகியவை தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்கின்றன. முன் வரிசை வென்டிலேட்டட் இருக்கைகள், 2-ஸ்டெப் பின் சாய்வு இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற வசதிகள் இதில் அடங்கும். 2025 ஹூண்டாய் வென்யூ, செக்மென்ட்டிலேயே முதன்முறையாக லெவல்-2 ADAS பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது.
முன்பக்க கிராஷ் அலார்ட், லேன் கீப் அசிஸ்ட், ஓட்டுநர் கவன சிதறல் குறித்த எச்சரிக்கை, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஹை பீம் அசிஸ்ட், பயணத்தை துவங்குவதற்கு முன்பே காரில் இருக்கும் பிரச்சனை குறித்த அலர்ட், பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் ஆட்டோ பிரேக்கிங் போன்ற பல மேம்பட்ட அம்சங்கள் இதில் உள்ளன.

இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், சரவுண்ட்-வியூ மானிட்டர், ஹில் ஸ்டார்ட் கன்ட்ரோல் மற்றும் 3-பாயிண்ட் சீட் பெல்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பாதுகாப்பில் புதிய தரத்தை நிர்ணயிக்கின்றன. ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட், 12.3-இன்ச்சில் இரண்டு வளைந்த டிஸ்பிளேக்களுடன் வருகிறது.
இவை NVIDIA தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே ஆகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் செயல்படுகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஓவர்-தி-ஏர் அப்டேட்களையும் இது ஆதரிக்கிறது. ஹூண்டாய் ப்ளூ லிங்க் கனெக்டிவிட்டி மற்றும் 8-ஸ்பீக்கர் போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் இந்த டிஸ்பிளேக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

2025 வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரில் இரு பெட்ரோல் என்ஜின்கள் (1.2 லிட்டர் கப்பா MPi பெட்ரோல், 1.0 லிட்டர் கப்பா டர்போ GDi பெட்ரோல்) மற்றும் ஒரு 1.5 லிட்டர் யு2 CRDi VGT டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளன. 1.2 லிட்டர் MPi பெட்ரோல் என்ஜின் 83 பிஎஸ்/ 114.7 என்.எம் டார்க் திறனையும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 120 பிஎஸ்/ 172Nm டார்க் திறனையும், 1.5 லிட்டர் CRDi டீசல் என்ஜின் 116 பிஎஸ்/ 250 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கின்றன.
எச்.எக்ஸ்2, எச்.எக்ஸ்4, எச்.எக்ஸ்5, எச்.எக்ஸ்6, எச்.எக்ஸ்6டி, எச்.எக்ஸ்7, எச்.எக்ஸ்8 மற்றும் எச்.எக்ஸ்10 என மொத்தம் 8 வேரியண்ட்களில் புதிய வென்யூ கிடைக்கிறது. மேனுவல், ஆட்டோமேட்டிக் (AT) மற்றும் டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) போன்ற கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. பேடில் ஷிஃப்டர்கள், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் டிரைவிங் மோட்கள் (ஈகோ, நார்மல், ஸ்போர்ட்) ஆகியவையும் புதிய வென்யூ காரில் அடங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரின் ஆரம்ப விலை மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. 1.2 லிட்டர் MPI வேரியண்ட் ரூ.7.90 லட்சம் முதல் டீசல் என்ஜின் உடனான வேரியண்ட் ரூ.15.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலைகளில் கிடைக்கிறது. இந்த அளவிற்கு குறைவான விலை, அதிநவீன தொழிற்நுட்ப அம்சங்கள் அதிகம் உள்ளிட்டவை மற்ற சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார்களில் இருந்து புதிய ஹூண்டாய் வென்யூ காரை சிறப்புமிக்கதாக காட்டுகின்றன.


Click it and Unblock the Notifications









