கொல்லிமலையில் சுற்றி திரிந்த விசித்திரமான கார்! ஹூண்டாய், கியா கார்களை ஓட விட போகும் புது மஹிந்திரா கார்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார், புதிய தலைமுறை பொலேரோ நியோ (Bolero Neo) ஆகும். முன்பு ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த மஹிந்திரா டியூவி300 (TUV300) காரின் அடுத்த தலைமுறை மாடலாக பொலேரோ நியோ 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் எப்போதுமே பொலேரோ காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், அதனை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக அதன் பெயரில் 2021இல் மேம்படுத்தப்பட்ட டியூவி300 கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தோற்றத்தில் பொலேரோவுக்கும் பொலேரோ நியோவுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன.

பொலேரோ நியோ கார் அறிமுகம் செய்யப்பட்டு 4 வருடங்களாகி விட்ட நிலையில், இந்த காரை அப்டேட் செய்ய மஹிந்திரா நிறுவனம் தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அறிமுகத்திற்கு முன்னதாக புதிய பொலேரோ நியோ கார் ஒன்று முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் புதிய பொலேரோ நியோ காரின் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், வித்தியாசமான தோற்றத்திலான புதிய பொலேரோ நியோ காரை முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காணலாம். எந்த அளவிற்கு வித்தியாசமான தோற்றம் என்றால், இந்த காரை பேபி லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) கார் என நெட்டிசன்கள் அழைக்க துவங்கி உள்ளனர்.

ஒட்டுமொத்த தோற்றத்தில் பார்க்கும்போது, அமெரிக்காவில் விற்பனையில் உள்ள பிரபலமான ஃபோர்டு பிரான்கோ (Ford Bronco) காரின் பெட்டகம் வடிவிலான தோற்றத்தை புதிய பொலேரோ நியோ கார் பெற்றுள்ளது. இதற்கேற்ப நன்கு உயரமான பொனெட், சதுர வடிவிலான ஜன்னல் கண்ணாடி லைன்கள் மற்றும் பெரிய அளவில் 18-இன்ச்சில் அலாய் சக்கரங்களை புதிய பொலேரோ நியோ கொண்டுள்ளது.
இவை எல்லாவற்றையும் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (XUV700) காரில் பார்க்க முடியும். நன்கு பெட்டகம் போன்றதான தோற்றத்தை கொண்டிருப்பினும், புதிய பொலேரோ நியோ ஆனது நீளத்தில் சற்று சிறியதாக காட்சியளிக்கிறது. அதாவது, அந்த அளவிற்கு காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் நறுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய பொலேரோ நியோ காருக்கு விற்பனையில் ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காரும் போட்டியாக இருக்கும்.
மஹிந்திராவில் இருந்து தற்போதைக்கு ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) கார்களுக்கு நேரடியாக போட்டியளிக்கும் வகையில் எந்த காரும் விற்பனையில் இல்லை. புதிய பொலேரோ நியோ காரில் முக்கியமான அம்சமாக லெவல்-2 அடாஸ் (ADAS) வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ள கார்களை அதற்கு முன்னதாக சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்வது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும், சமீப காலமாக இவ்வாறான சோதனை ஓட்டங்களை லடாக், தார் பாலைவனம், தற்போது கொல்லிமலை போன்ற சவாலான பயண சூழலை கொண்ட பகுதிகளில் மேற்கொள்ள கார் நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளன. காரின் முழு திறனை அறிய இவ்வாறான சவாலான பயணங்களை மேற்கொள்கின்றனர் போல...
Source: Cartog (https://www.cartoq.com/)


Click it and Unblock the Notifications








