மஹிந்திரா பெருசா ஒண்ணுக்கு ரெடியாகிட்டு இருக்கு... அறிமுகத்துக்கு முன் நடத்தப்பட்ட சோதனை ஓட்டம்!
மஹிந்திரா பொலேரோ (Mahindra Bolero) கார் 25 வருடங்களுக்கும் மேலாக இந்தியச் சந்தையில் நீடித்து வருகிறது. இந்த 25 வருட காலகட்டத்தில் பெரிய அளவில் பொலேரோவின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்படாவிட்டாலும், இதன் தனித்துவமான கவர்ச்சி குறையாமல் உள்ளது. தற்போது, பொலேரோவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 பொலேரோவில் முக்கியமான பெரிய மாற்றங்களை மஹிந்திரா நிறுவனம் கொண்டுவரவுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வெளியாகியுள்ள 2025 மஹிந்திரா பொலேரோவின் முதல் ஸ்பை படங்களில் புதிய பொலேரோவின் தோற்றம் தற்போதைய மாடலை ஒத்திருந்தாலும், இதில் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளதை பார்க்க முடிகிறது. பொலேரோ கார் 2000ஆம் ஆண்டில் 'ஆர்மடா' (Armada) காருக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்பின், இந்திய அளவில் மிகவும் பிரபலமான மற்றும் உணர்வுபூர்வமான கார்களில் ஒன்றாக பொலேரோ உருவெடுத்தது. 2025 மஹிந்திரா பொலேரோ அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாகவே தற்போதைய ஸ்பை படங்கள் மூலம் காட்சித் தந்துள்ளது. இதன் மூலம், பொலேரோ தனக்கே உண்டான பெட்டகம் வடிவிலான தோற்றத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது.
மேலும், இந்த புதிய மாடலும் தற்போதைய பொலேரோவின் வடிவமைப்பு அம்சங்களான முன் பகுதி, க்ரில், பம்பர் வடிவம், கண்ணாடிகள், வீல் ஆர்ச் கிளாடிங், மழை நீர் வடிகால்கள், கதவு கீல்கள் மற்றும் கதவு கைப்பிடிகள் போன்றவற்றையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த கார் நான்கு மீட்டருக்கும் குறைவான நீளத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களால் குறைந்த வரிச் சலுகைகளைப் பெறும் 'பி எஸ்யூவி' பிரிவில் தொடர்ந்து பொலேரோ விற்பனை செய்யப்படும். வழக்கம்போல், ஸ்பேர் வீல் (கூடுதல் சக்கரம்) டெயில்கேட்டில் பொருத்தப்பட்டுள்ளது. சக்கரங்களின் அளவு 15 அங்குலமாகவே இருக்கும். புதிய பொலேரோவின் மாற்றங்கள் தெரியாத அளவிற்கு, மஹிந்திரா இந்த சோதனை வாகனத்தை முழுமையாக மறைத்திருந்தது.
2025 பொலேரோவில் புதிய நிறங்கள், பினிஷ்கள் மற்றும் கிராபிக்ஸ் சேர்க்கப்படலாம். பம்பர்கள் உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும், இது பொலேரோவின் பலங்களில் ஒன்றாகும். வெளிப்புறத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும், உட்புறத்தில் ஒரு முழுமையான மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பை படங்கள் உட்புற விவரங்களை வெளிப்படுத்தவில்லை என்றாலும், பெரிய மேம்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், பின்பக்க ஏசி வென்ட்கள், ஆறு ஏர்பேக்குகள் (எல்லா வேரியண்ட்களிலும்), முன் மற்றும் பின்பக்க ஆர்ம்ரெஸ்ட், கூல்டு க்ளவ்பாக்ஸ், யூஎஸ்பி போர்ட்கள் மற்றும் டிஎஃப்டி எம்ஐடி ஸ்கிரீன் ஆகியவை புதிய பொலேரோவில் இடம்பெறலாம்.
2025 மஹிந்திரா பொலேரோவின் மூன்றாவது வரிசையில் ஜம்ப் சீட் அமைப்பு தொடரப்படலாம். என்ஜின், அதே 1.5 லிட்டர் mHawk 75 டர்போ டீசல் எஞ்சினாக (சுமார் 75 பிஹெச்பி பவர், 210 என்எம் டார்க்) 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் வரும். பொலேரோ நியோவில் உள்ள mHawk 100 எஞ்சின் பொலேரோ (கிளாசிக்) காரிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா பொலேரோ நியோ ஒரு பெரிய மேம்பாட்டிற்கு தயாராகி வருகிறது என்பதை இந்த ஸ்பை படங்களின் மூலம் அறிய முடிகிறது. இதன் மூலம், வரும் மாதங்களில் மஹிந்திரா கார்களின் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் உறுதி. ஏனெனில், மஹிந்திராவின் சிறந்த விற்பனை காராக பொலேரோ விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பொலேரோ கார்களை வாங்கிவரும் நிலையில், புதிய பொலேரோவின் அறிமுகத்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









