சென்னை ஃபேக்ட்ரியில் உருவாக்குன கையோடு சாலையில் ஓட்டி பார்க்க வந்தாச்சு! எல்லார் கண்ணும் கார் மீதுதான்!
2022 முதல் இந்தியாவில் விற்பனையில் இல்லாத ரெனால்ட் டஸ்டர் (Renault Duster), தனது மூன்றாவது தலைமுறை வடிவில் மீண்டும் வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கான பிரத்யேக மாற்றங்களுடன் அதன் சோதனை வாகனம் சென்னைக்கு அருகே தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏனெனில், ரெனால்ட்டின் கார் உற்பத்தி தொழிற்சாலை ஆனது சென்னைக்கு அருகே ஒரகடத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய ரெனால்ட் டஸ்டர் 2026 ஜனவரி 26 அன்று அறிமுகமாகிறது. இதற்கிடையில் தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்கள் காரின் ஹெட்லைட், 360-டிகிரி கேமரா, அடாஸ் சென்சார்கள் (ADAS Sensors) ஆகியவற்றை வெளிக்காட்டுகின்றன. சென்னைக்கு அருகே பிசியான சாலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்பை படங்கள் (Spy Images) ரெட்டிட் (Reddit) தளத்தில் 'கார் இந்தியா' (Carindia) என்கிற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் ADAS பாதுகாப்புடன் வெளிவரும் முதல் ரெனால்ட் கார், புதிய டஸ்டர் ஆகும். இந்த காரின் உட்புற வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பது இன்னும் தெரியவரவில்லை. தற்போதைய ஸ்பை படங்களில் காரின் முன்பக்கத்தில் மெல்லியதான ஹெட்லைட்கள் மற்றும் புருவம் வடிவ எல்இடி டி.ஆர்.எல்-கள் (LED DRLs) இடம்பெற்றுள்ளன. முன்பக்க பம்பர் மறைப்பால் மறைக்கப்பட்டு இருப்பினும், காற்று செல்ல அதன் மூன்று பிளவுகளை பார்க்க முடிகிறது.
மேலும், ஃபாக் விளக்குகளும் உள்ளன. முன்பக்க விண்ட்ஷீல்டில் ADAS-க்கான ரேடார் சென்சார் தெரிகிறது. பனோரமிக் சன்ரூஃபும் இருப்பது போன்றே தெரிகிறது. அலாய் சக்கரங்கள் மறைக்கப்பட்டாலும், வீல் ஆர்ச்களில் (wheel arches) பாடி கிளாடிங் (body cladding) மறைப்புகளை தாண்டி தெரிகிறது. காரின் C-பில்லரில் பொருத்தப்பட்டுள்ள பின்பக்க கதவு கைப்பிடிகள், நேர்த்தியான தோற்றத்தை வழங்குகின்றன.

மேற்கூரையில் பொருட்களை கட்டி எடுத்து செல்ல கம்பிகள் மற்றும் காரின் பின்புறத்தை காட்டும் பக்கவாட்டு மிரர்களில் கேமராக்களும் இடம்பெற்றுள்ளன. காரின் பின்பக்கத்தில், வ்ராப்-ஆல் சூழப்பட்ட டெயில்லைட்கள், ஸ்பாய்லர், பின்பக்க வைப்பர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் காணப்படுகின்றன. இந்தியாவுக்கான டஸ்டரின் உட்புறம் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், இது உலகளாவிய டஸ்டர் காரைப் போலவே, பிரீமியம் தொழிற்நுட்ப அம்சங்களுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்ப்ளே உடன்), 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜர் போன்ற அம்சங்கள் இந்த வகையில் இடம்பெறலாம். பழைய டஸ்டர் கார் டீசல் என்ஜின் உடன் வந்த நிலையில், புதிய இந்தியா-ஸ்பெக் பதிப்பு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களுடன் மட்டுமே அறிமுகமாகும் என தெரிகிறது.

சர்வதேச சந்தையில் உள்ள டஸ்டரின் 156 குதிரைத்திறனை வழங்கக்கூடிய 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் ரெனால்ட் கைகர் காரில் வழங்கப்பட்டுவரும் 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் (செயல்படுதிறன் மேம்படுத்தப்பட்டு புதிய டஸ்டரின் குறைந்த ரக வேரியன்ட்களுக்கு) புதிய டஸ்டரில் என்ஜின் ஆப்ஷன்களாக வழங்கப்படலாம். அறிமுகத்திற்கு பின் ஒரு வருடத்திற்குப் பிறகு, ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் வரலாம்.
2026 ரெனால்ட் டஸ்டரின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), டாடா சியரா (Tata Sierra), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வாகன் டைகன் (Volkswagen Taigan) போன்ற நடுத்தர அளவு எஸ்யூவி கார்களுடன் இது போட்டியிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமொபைல் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய கார்களின் தோற்றத்தை மறைத்து, எதிர்பார்ப்பை உருவாக்குவதோடு சோதனையையும் மேற்கொள்வதற்கு மறைப்பை பயன்படுத்துகின்றன. இது கார் அறிமுகத்திற்கு முன்பாகவே பெரும் வரவேற்பிற்கான சூழலை உண்டாக்கும். மேலும், நுட்பமான வடிவமைப்பு ஹைலைட்களை மறைத்து, போட்டி நிறுவனங்கள் காரின் தோற்றத்தை முன்கூட்டியே தெரிந்துக் கொள்வதை தடுக்கிறது.


Click it and Unblock the Notifications









