சென்னையிலேயே கார் தொழிற்சாலை இருக்குறதுனால ஈஸியா ஓட்டி பார்க்க முடியுது! ஜனவரி 26 தான் டார்க்கெட்!
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) மீண்டும் களமிறங்குகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் 2026 ஜனவரி 26 அன்று நடைபெற உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக புதிய டஸ்டர் தயாராகி வரும் நிலையில், முழுவதும் தோற்றம் மறைக்கப்பட்ட நிலையில் சென்னைக்கு அருகே பொது சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட புதிய டஸ்டர் காரின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஸ்பை படங்கள் காரின் வடிவமைப்பு குறித்த முக்கிய விவரங்களை வெளிப்படுத்தியுள்ளன. இந்திய சந்தைக்கென இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 'சி.எம்.எஃப்-பி' (CMF-B) பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்படும் புதிய தலைமுறை டஸ்டர் எஸ்யூவி கார், ரெனால்ட்டின் 'ரெனால்ட். ரீதிங்க்.' (Renault. Rethink.) என்ற இந்திய யுக்தியின் முக்கிய அம்சமாகும்.

சமீபத்திய தகவல்களின்படி, இந்தியப் பதிப்பு உலகளாவிய ஐரோப்பிய டஸ்டரை வெகுவாக ஒத்திருக்கும்; அதே வேளையில், இந்தியாவுக்கென சில பிரத்யேக மாற்றங்களையும் கொண்டிருக்கும். இவ்வாறான எதிர்பார்ப்புக்கு மத்தியில், சென்னையில் நெடுஞ்சாலை ஒன்றில் முழுவதும் கருப்பு நிற மறைப்பால் மறைக்கப்பட்ட நிலையிலான புதிய டஸ்டர் கார் அறிமுகத்திற்கு முன்னதாக காட்சி தந்துள்ளது.
தெரியாதவர்களுக்காக, ரெனால்ட் நிசான் ஆட்டோமொபைல் கூட்டணி நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஆனது சென்னைக்கு அருகே ஒரகடத்தில் உள்ளது. குறிப்பிடத்தக்கது. புதிய டஸ்டர் எஸ்யூவி காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதன் முன்புறத்தில், பகல்நேரத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த LED விளக்குகள் (DRL) மற்றும் நேர்த்தியான LED ஹெட்லேம்ப்கள் கொண்ட கூர்மையான முகப்புப் பகுதி தனித்துவமாக இருக்கும்.

பெரிய 18-இன்ச் டைமண்ட்-கட் Y-பேட்டர்ன் அலாய் சக்கரங்கள், சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள் மற்றும் தடிமனான பாடி கிளாடிங் ஆகியவை இதன் கம்பீரமான தோற்றத்திற்கு வலு சேர்க்கின்றன. இதன் ஒட்டுமொத்த தோற்றமும் ஆஃப்-ரோடு பயணங்களுக்குத் தயாரான நிலையில் காட்சியளிக்கிறது. பின்புறத்தில், உலகளாவிய டஸ்டர் மாடலில் உள்ள கவர்ச்சியான Y-வடிவ LED டெயில் லேம்ப்கள் மற்றும் உறுதியான மேற்கூரை கம்பிகள் சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டஸ்டரிலும் தென்படுகின்றன.
2026 டஸ்டரின் உட்புறம், பிரீமியம் அனுபவம் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காருக்குள் கேபினில் டாஷ்போர்டில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதியுடன் கூடிய 10.1 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உடன் கூடிய இரட்டை ஸ்கிரீன் அமைப்பு இதில் முக்கிய அம்சமாக இருக்கும்.
மறுவடிவமைக்கப்பட்ட சென்டர் கன்சோலில், எலக்ட்ரானிக் கியர் செலக்டர் மற்றும் தனித்துவமான 'Y' வடிவமைப்புடன் கூடிய பிரத்யேக அலங்காரங்கள் இடம்பெறும். ட்யூயல்-ஸோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் பல எண்ணிக்கைகளில் டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட்கள் போன்ற உயர் ரக வசதிகளும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிய ரெனால்ட் டஸ்டரின் அதிகாரப்பூர்வ என்ஜின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்தியாவுக்கான டஸ்டர் ஆரம்பத்தில் இரண்டு பெட்ரோல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் அறிமுகமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது, சுமார் 156 பிஎச்பி ஆற்றலை உற்பத்தி செய்யும் முதன்மை என்ஜினாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது, செயல்திறன் மற்றும் டிரைவிங் அனுபவம் என இரண்டிலும் சிறந்த சமநிலையை வழங்கும். கைகர் காரில் இருந்து பெறப்பட்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், எரிபொருள் சிக்கனத்தில் கவனம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு என்ட்ரி-லெவல் விருப்பமாக வரக்கூடும். இவற்றுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் (CVT/ DCT) ஆகிய இரு வகையான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா போன்ற வலுவான போட்டியாளர்களுக்கு இது கடும் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச டஸ்டர் காரின் பெரும்பாலான அம்சங்கள் இந்தியாவிற்கான புதிய மாடலிலும் தொடர்வது, டஸ்டரின் பாரம்பரியமான கரடுமுரடான அடையாளத்தைப் பாதுகாக்கிறது. இது நவீன அழகியலுடன் டஸ்டரின் புகழ்பெற்ற வலிமையைப் பிரதிபலிக்கிறது.


Click it and Unblock the Notifications









