சென்னையில் வித்தியாசமான தோற்றத்தில் சுற்றி திரிந்த கார்! 7 பேர் போகக்கூடிய காரும் வர போகுது!
ரெனால்ட் (Renault) நிறுவனத்தின் புதிய தலைமுறை டஸ்டர் (New-Gen Duster) கார், சென்னை உற்பத்தி தொழிற்சாலைக்கு அருகே பொது சாலையில் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில் புதிய டஸ்டர் கார் முழுவதும் மறைக்கப்பட்டு இருந்த போதிலும், அதன் வடிவமைப்பு நமக்கு இலை மறை காயாக தெரிகிறது.
அதன் மூலம், இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ள புதிய டஸ்டர் கார் அதன் சர்வதேச வெர்சனை பிரதிபலிப்பதாக தெளிவாகத் தெரிந்தது. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவி கார் 2026 ஜனவரி 26 அன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஏழு இருக்கைகள் கொண்ட டஸ்டர் காரை பின்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் ரெனால்ட் திட்டமிட்டுள்ளது.

முந்தைய டஸ்டர் காரைப் போல் அல்லாமல், வரவிருக்கும் புதிய டஸ்டர், தனது முன்னோடியில் இருந்து எந்த இயந்திர மற்றும் வடிவமைப்பு அம்சங்களையும் பெற்றுவர போவது இல்லை. மாறாக, இது ரெனால்ட்-நிசான் கூட்டணி நிறுவனத்தின் இந்திய மார்க்கெட்டிற்கு மாற்றப்பட்ட சி.எம்.எஃப்-பி (CMF-B) பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டதாக இருக்கும்.
இதனால்தான், தற்போது சோதனை ஓட்டத்தில் காரின் வடிவமைப்பு யாருக்கும் தெரிந்துவிட கூடாது என்பதற்காக கார் முழுக்க முழுக்க மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளித்துள்ளது. இந்திய சந்தைக்கு டஸ்டர் காரின் மறுவருகை, வளர்ந்து வரும் சந்தைகளில் கவனம் செலுத்தும் ரெனால்ட்டின் உலகளாவிய 'இன்டர்நேஷனல் கேம் பிளான் 2027' இன் முக்கிய பகுதியாகும்.

புதிய டஸ்டருடன், இந்தியா போன்ற பிராந்தியங்களுக்காக ஒரு பட்ஜெட் நகர்ப்புற எலெக்ட்ரிக் கார் (Electric Car) மற்றும் மூன்று இருக்கை வரிசைகளை கொண்ட எஸ்யூவி கார் ஒன்றையும் அறிமுகம் செய்ய ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய கைகர் (Kiger) காரை மட்டுமே கொண்ட ரெனால்ட்டின் எஸ்யூவி கார்கள் வரிசையை மறுசீரமைப்பதற்கான புதிய உத்தியின் முதல் படியாக புதிய டஸ்டர் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் ரெனால்ட் டஸ்டர் முதல்முறையாக 2012இல் அறிமுகமானதில் இருந்து இந்திய எஸ்யூவி கார்கள் பிரிவு பெரிய அளவில் மாறிவிட்டது. அப்போது, நடுத்தர எஸ்யூவி கார் இடத்தை டஸ்டர் தனியாகவே பெற்று இருந்தது. அதாவது, அப்போது டஸ்டருக்கு போட்டியளிக்கும் வகையில் எந்த காரும் மார்க்கெட்டில் இல்லை. ஆனால் இன்றோ, ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) முன்னிலை வகிக்கும் ஒரு கடும் போட்டிக் களத்தில் இது நுழைகிறது.

புதிய ரெனால்ட் டஸ்டர் காரின் உட்புறத்தில் இந்த முறை மேலும் மேம்பட்ட மற்றும் தொழில்நுட்பங்கள் நிறைந்த கேபினை ரெனால்ட் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பம்சங்களாக, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கொண்ட 10.1-இன்ச் ஓபன்-ஏர் தொடுதிரை, 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, எலக்ட்ரானிக் கியர் செலக்டர் கொண்ட உயரமான சென்டர் கன்சோல் & டேஷ்போர்டு மற்றும் கதவு பேனல்களில் Y-வடிவ வடிவமைப்புகள் ஆகியவை அடங்கும்.
வயர்லெஸ் சார்ஜிங், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள், லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் சக்கரம் மற்றும் 360-டிகிரி கேமரா அமைப்பு போன்ற அம்சங்களும் இதில் நிரம்பியிருக்கும். பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் லேன்-கீப்பிங் அசிஸ்ட், பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் ஆட்டோமேட்டிக் அவசர கால பிரேக்கிங் ஆகியவை அடங்கிய லெவல்-2 ADAS உள்ளிட்டவற்றை புதிய டஸ்டரை வாங்குவோர் எதிர்பார்க்கலாம்.

என்ஜின் ஆப்ஷன்களை ரெனால்ட் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், புதிய தலைமுறை டஸ்டர் எஸ்யூவி கார் இரண்டு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உடன் வழங்கப்படும். இவற்றுடன், டஸ்டர் ஹைப்ரிட் (Hybrid) காரும் எதிர்காலத்தில் வரக்கூடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய தலைமுறை டஸ்டர் காரை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரெனால்ட் களமிறக்குகிறது. முற்றிலும் புதிய பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படுவது மட்டுமின்றி, இந்த கார் சென்னை ஒரகடம் ஆலையில் தயாரிக்கப்படுவதும் ஒரு சிறப்பாகும். இது டஸ்டர் பெயர்ப்பலகைக்கும், இந்தியாவில் ரெனால்ட் பிராண்டிற்கும் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது, மேலும் பல புதிய மாடல்கள் இந்த வரிசையில் காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications









