காரின் அளவை பார்த்து எடை போடாதீங்க... அதிக மைலேஜிற்காகவே டாடா உருவாக்கும் புது கார்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் மிகவும் விரும்பப்படும் கார்களில் ஒன்றான டாடா பன்ச் (Punch), இந்தியச் சந்தையில் சிறந்த சப்-4-மீட்டர் எஸ்யூவி (SUV) கார்களில் முன்னணியில் உள்ளது. இந்த காரின் புதுப்பிக்கப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு விரைவில் களமிறங்கவுள்ளது. இதற்கிடையில் சமீப மாதங்களாக பல பகுதிகளில் புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் தற்போது கேரளாவின் மூணாறில், புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் சிஎன்ஜி (CNG) வெர்சன் தென்பட்டிருப்பது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல், வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் பல்வேறு மேம்பட்ட மாற்றங்களுடன் வரவுள்ளது. வெளிப்புற வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கொண்டிருக்கும்.

புதிய பம்பர் மற்றும் கிரில் அமைப்பு, புதிய வடிவமைப்புடன் கூடிய எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டாடா நெக்ஸான், ஹாரியர் கார்களைப் போலவே முக்கோண வடிவிலான லைட்டிங் அமைப்பு ஆகியவை இதில் இடம்பெறலாம். கீழ் கிரில் பகுதியும் மெருகூட்டப்பட்டு, கிடைமட்ட ஸ்லேட்களுடன் வரக்கூடும். பக்கவாட்டுத் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும், புதிய அலாய் சக்கரங்கள் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
மேம்பட்ட பாதுகாப்பிற்காக 360° பார்வை கேமரா ஒரு முக்கிய அம்சமாக இருக்கலாம். என்ஜின் அமைப்பைப் பொறுத்தவரை, டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் ஆனது தற்போதைய 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜினையே தக்கவைக்கும். இது 87.8 பிஎஸ் திறனையும் 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

சிஎன்ஜி முறையில் இயங்கும் போது, இதன் திறன் 73.5 பிஎஸ் ஆகவும், டார்க் 103 என்எம் ஆகவும் குறையும். இதன் மூலமாக, பன்ச் சிஎன்ஜி காரில் அதிக மைலேஜ் பெற முடிகிறது. டாடாவின் இரட்டை டேங்க் சிஎன்ஜி அமைப்பு புதிய பன்ச் சிஎன்ஜி ஃபேஸ்லிஃப்ட் காரிலும் தொடரும். இது பூட் ஸ்பேஸ் (Boot Space) இட பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
உட்புறத்தில், பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனத்தின் மற்ற எஸ்யூவிகளில் காணப்படுவது போல, ஒளிரும் லோகோவுடன் கூடிய புதிய ஸ்டீயரிங் சக்கரமும் இதில் இருக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்களில் காற்றோட்டமான முன் இருக்கைகள் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் போன்ற பிரீமியம் அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிய ஃபேஸ்லிஃப்ட் பன்ச் காரில், அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்பட்டு, பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும் எனத் தெரிகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் சன்ரூஃப், ஃபாஸ்ட் யுஎஸ்பி சார்ஜர், பின் இருக்கைகளுக்கும் ஏசி வென்ட்கள், வயர்லெஸ் சார்ஜர் போன்ற தற்போதைய அம்சங்களும் தொடரும்.
இந்த மேம்பாடுகளுடன், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் சற்று அதிக விலையில் அறிமுகப்படுத்தப்படலாம். தற்போதைய மாடல் ரூ.5.49 லட்சம் ஆரம்ப விலையிலும், சிஎன்ஜி மாடல் ரூ.6.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்கிற ஆரம்ப விலையிலும் கிடைக்கிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் போன்ற கார்களுக்கு டாடா பன்ச் விற்பனையில் போட்டியாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சமீப காலத்தில் வெற்றி கொடுத்துள்ள கார்களுள் பன்ச் மிக முக்கியமானது என்றுதான் சொல்ல வேண்டும். இத்தகைய காரை ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடிற்கு டாடா மாற்ற போகிறது என்றவுடன் மார்க்கெட்டில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன்படி, பன்ச் சிஎன்ஜி காரின் தோற்றமும் அப்கிரேட் செய்யப்பட உள்ளது. மற்றப்படி, இந்த சிஎன்ஜி காரின் மைலேஜில் பெரியதாக மாற்றம் இருக்காது.


Click it and Unblock the Notifications









